மயிலாடுதுறையைச் சேர்ந்தவர் பிரவீன் பாபு. இவர், 2019-ம் ஆண்டு, தன்னுடைய நண்பர் அசோக் என்பவருடன் டூ வீலரில் மயிலாடுதுறை பேருந்து நிலையம், போலீஸ் பூத் அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு பணியிலிருந்த ஏட்டு பாலு உள்ளிட்ட போலீஸார், பிரவீன் பாபு ஓட்டிச் சென்ற டூ வீலரை நிறுத்தியதுடன், ``ஏன் மூன்று பேர் வந்தீர்கள்?" எனக் கேட்டு கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

மேலும், பொதுச் சொத்தைச் சேதப்படுத்துதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் இருவர்மீதும் வழக்கு பதிவுசெய்து சிறையில் அடைத்ததாகச் சொல்லப்படுகிறது. இதை எதிர்த்து இளைஞர்கள் இருவரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கின்றனர். அதையடுத்து, அந்த வழக்கை ரத்துசெய்யக் கோரி சம்பந்தப்பட்ட போலீஸார் தரப்பில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், இந்த வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், இன்ஸ்பெக்டர் உட்பட நான்கு போலீஸாருக்கு தலா ரூ.5,000 அபராதம் விதித்து உத்தரவிட்டிருக்கிறது.
இது குறித்து பிரவீன் பாபுவிடம் பேசினோம். ``நான், என்னுடைய நண்பர் அசோக் இரண்டு பேர் மட்டுமே டூ வீலரில் சென்றோம். வண்டியை நிறுத்திய போலீஸார், `ஏன் மூன்று பேர் வந்தீர்கள்?' எனக் கேட்டனர். அதற்கு, `நாங்கள் இருவர்தான் வந்தோம்’ என்றோம். எங்கள்மீது வழக்கு பதிவதாகச் சொன்னார்கள். நாங்களும், `சரி வழக்கு போடுங்கள். நீதிமன்றத்தில் பணத்தைக் கட்டி வண்டியை எடுத்துக்கொள்கிறோம்' என்று கூறினோம்.
உடனே, `என்ன ரூல்ஸ் பேசுறீங்களா?' எனக் கேட்டு எங்களை அடித்து, காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். பொதுச்சொத்தைச் சேதப்படுத்துதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் எங்கள்மீது பொய் வழக்கு பதிவுசெய்தனர். காவல் நிலையத்தில்வைத்து கடுமையாகத் தாக்கியதில், இரண்டு பேரின் கைகளும் உடைந்தன. எனக்குத் தலையில் அடிபட்டு ரத்தம் வழிந்தது.
போலீஸார் எங்களை மாஜிஸ்ட்ரேட் முன்பு அழைத்துச் சென்றனர்.

எங்களைப் பார்த்ததுமே பொதுச்சொத்தைச் சேதப்படுத்தியதாகப் பொய் வழக்கு பதிந்திருக்கின்றனர் என்பதை உணர்ந்த மாஜிஸ்ட்ரேட், அந்த வழக்கை கேன்சல் செய்தார். `எப்படிக் கைகளில் அடிப்பட்டது?’ எனக் கேட்டதற்கு, `வழுக்கி விழுந்துவிட்டார்கள்' என போலீஸார் சொன்னார்கள். அதைக் கேட்ட மாஜிஸ்ட்ரேட், `எப்படி இருவருக்கும் ஒரே நேரத்தில் ஒரே கை உடைந்திருக்கிறது... உடனே மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளியுங்கள்' என உத்தரவிட்டார்.
அதை மீறி எங்களை மயிலாடுதுறை சிறையில் அடைத்தனர். எங்களை யாரும் சந்திக்கக் கூடாது என்பதற்காக திருச்சி மத்திய சிறைக்கு மாற்றினர். ஜாமீனில் வெளிவரக் கூடாது என்பதற்காக பல வகையில் மெனக்கெட்டனர். எங்களுக்கு எதிராகத் தொடரப்பட்ட பொய் வழக்கில் நீதி கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், எங்கள்மீதான வழக்கு ரத்துசெய்யப்பட்டது.
இதேபோல் மனித உரிமை ஆணையத்தில் தொடர்ந்திருந்த வழக்கில், எங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் தர வேண்டும் என உத்தரவிட்டனர். எங்களைத் தாக்கிய போலீஸார்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மயிலாடுதுறை காவல் நிலையத்தில் வழக்கு தொடர்ந்திருந்தோம். அதற்கு முகாந்திரம் இல்லை என அந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டது. மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நிவாரணம் தேடிக்கொள்ளலாம் என நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்ததன் அடிப்படையில், அங்கு வழக்கு தொடர்ந்தோம்.
இந்த வழக்கை ரத்துசெய்யக் கோரி மயிலாடுதுறை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு, சப்-இன்ஸ்பெக்டர்கள் அறிவழகன், பாபுராஜ், ஏட்டு பாலு ஆகிய நான்கு பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். ஏற்கெனவே தாங்கள் ரத்துசெய்த அதே வழக்கை மறைத்து மீண்டும் மனுத்தாக்கல் செய்திருப்பதாக, நீதிமன்றம் போலீஸார்மீது கடிந்துகொண்டது.
இதைத் தொடர்ந்து போலீஸாரின் மனுக்களைத் தள்ளுபடி செய்த நீதிமன்றம், சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி, மனுத்தாக்கல் செய்த போலீஸார் நான்கு பேருக்கும் தலா ரூ.5,000 அபராதம் விதித்தனர். அந்தப் பணத்தை எதிர்மனுதாரரான என்னிடம் கொடுக்க உத்தரவிட்டனர். பொய் வழக்கு பதிந்ததன் மூலம் கடும் மனஉளைச்சலில் இருந்தோம். தொடர் மனவலியில் நாங்கள் தவித்துவந்த நிலையில், போலீஸாருக்கு அபராதம் விதித்து உத்தரவிட்டிருப்பதன் மூலம் எங்களுக்கான மருந்தாக நீதி கிடைத்திருக்கிறது" என்றார்.
இது குறித்து நாம் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலனிடம் பேசியபோது, ``நான் அப்பீல் போகவில்லை. அப்பீல் சென்றது அறிவழகன் சப் இன்ஸ்பெக்டர்தான். அவரிடம் கேளுங்கள்" என்றார். அதைத் தொடர்ந்து எஸ்.ஐ அறிவழகனிடம் பேசியபோது, ``நீதிமன்றம் விதித்தது அபராதம் கிடையாது. அந்த இளைஞர் ஒரு பிரைவேட் கேஸ் போட்டிருந்தார். அதற்காக நாங்கள் ஹைகோர்ட்டுக்குச் சென்றிருந்தோம். அங்கே கோர்ட் நேரத்தை வீணடிப்பதாக, எங்களுக்கு ரூ.5,000 ஃபைன் போட்டாங்க. மற்றபடி, அந்த இளைஞர்கள் போட்டிருக்கும் கேஸ் ஒரு பொய்யான குற்றச்சாட்டு" என்றார்.