சென்னை, புழுதிவாக்கம், சிவசுப்பிரமணியம் நகரைச் சேர்ந்தவர் ஆனந்த். இவரின் மனைவி யமுனா (33). இவர், 2018-ம் ஆண்டு வாணுவம்பேட்டையிலுள்ள ரத்த பரிசோதனை மையத்தில் வேலை பார்த்து வந்தார். 18.2.2018-ம் தேதி யமுனா, வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது, அங்குவந்த ராஜா என்பவர் யமுனாவிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது ஆத்திரத்தில் யமுனா மீது ஆசிட்டை ஊற்றி, தீவைத்தார். அதனால் அவர் வலியால் அலறித் துடித்தார். யமுனாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர். அதைப் பார்த்த ராஜா, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதையடுத்து யமுனாவைமீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக யமுனாவின் கணவர் ஆனந்த், மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அது தொடர்பாக போலீஸார் கொலை முயற்சி வழக்கு பதிவுசெய்து அண்ணாநகரைச் சேர்ந்த ராஜாவை (45) கைதுசெய்தனர். இந்த நிலையில், சிகிச்சைப் பெற்றுவந்த யமுனா, 23.2.2018-ம் தேதி உயிரிழந்தார். அதனால் கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக போலீஸார் மாற்றம் செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் நடந்துவந்தது. ராஜா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து சாட்சிகளை நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர். இதுதரப்பு வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் ராஜாமீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு ஆயுள் தண்டனையும், 30,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த வழக்கை சிறப்பாக புலனாய்வுசெய்து ராஜாவுக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்த போலீஸாரை, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பாராட்டினார்.