சமூகம்
அலசல்
Published:Updated:

அடாவடி... வழிப்பறி... கொலை... கஞ்சா போதை இளைஞர்கள்... கண்டுகொள்ளுமா காவல்துறை?

கஞ்சா போதை
பிரீமியம் ஸ்டோரி
News
கஞ்சா போதை

விழுப்புரத்தில் 24 மணி நேரமும் கஞ்சா, மது விற்பனை தடையின்றி நடக்கிறது. விக்கிரவாண்டியில் ஒருவன் கஞ்சா போதையில் வீடு புகுந்து பெண்ணைக் குத்திக் கொலைசெய்திருக்கிறான்.

கஞ்சா போதை இளைஞர்களால் தமிழ்நாட்டில் வழிப்பறி, அடிதடி, அடாவடிகளுடன் கொலைகளும் நடக்கத் தொடங்கியிருப்பது பெரும் பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது.

விழுப்புரம் இப்ராஹிம் கொலை!

விழுப்புரம் மகாத்மா காந்தி சாலையிலுள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் கடந்த மார்ச் 29-ம் தேதி புகுந்த இரண்டு வாலிபர்கள், கடை ஊழியருடன் தகராறில் ஈடுபட்டனர். அவர்களைத் தடுத்த இப்ராஹிம் என்பவரை, அந்த வாலிபர்கள் கத்தியால் சரமாரியாகத் தாக்கியதில், இப்ராஹிம் பரிதாபமாக இறந்தார். முதல்வர் ஸ்டாலின் படம் போட்ட டி-ஷர்ட் அணிந்தபடி 2 வாலிபர்கள் நடத்திய இந்தத் தாக்குதல் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வைரலானதால், விழுப்புரத்தில் பதற்றம் ஏற்பட்டது. வியாபாரிகள் கடையடைப்பு மற்றும் சாலைமறியல் போராட்டத்தில் இறங்கினர். சட்டமன்றம் வரை இந்தப் பிரச்னை எதிரொலித்தது.

தாக்குதல் நடத்தியவர்
தாக்குதல் நடத்தியவர்

இறந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லச் சென்ற அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை எம்.பி-யுமான சி.வி.சண்முகம், “விழுப்புரத்தில் 24 மணி நேரமும் கஞ்சா, மது விற்பனை தடையின்றி நடக்கிறது. விக்கிரவாண்டியில் ஒருவன் கஞ்சா போதையில் வீடு புகுந்து பெண்ணைக் குத்திக் கொலைசெய்திருக்கிறான். விழுப்புரத்தில் கஞ்சா போதை மாணவர்கள் இருவர், மாணவிகளைப் பாலியல்ரீதியாக துன்புறுத்தியிருக்கிறார்கள். இப்ராஹிமைக் கொலைசெய்த தி.மு.க இளைஞர்கள் வேறு சில கடைகளிலும் புகுந்து, கலாட்டா செய்திருக்கிறார்கள். தமிழக முதல்வரைப்போலவே, காவல்துறையும் செயலிழந்துவிட்டது’’ என்று குற்றம்சாட்டினார்.

தஞ்சை சம்பவம்!

இதேபோல மார்ச் 25-ம் தேதி தஞ்சாவூரில் கஞ்சா போதையிலிருந்த மூவர், கஞ்சா வியாபாரி பிரதீப்பைக் கொடூரமாகக் கொலைசெய்தனர். முதலில் டாஸ்மாக் கடையில் ஓசி சரக்கு கேட்டு ரகளை செய்த அவர்கள், பிறகு கரந்தை சிக்னல் அருகே சாலையை மறித்து வாகன ஓட்டிகளிடம் கத்திமுனையில் பணம் கேட்டு மிரட்டினர். அதன் பிறகே பிரதீப் வீட்டுக்குப் போனதும், கஞ்சா தர மறுத்த அவரைக் கொலைசெய்ததும் நடந்தது.

கஞ்சா போதை
கஞ்சா போதை

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகேயுள்ள சிவாடி கிராமத்தில் இருக்கும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மார்ச் 31-ம் தேதி இரவில் ஏறியிருக்கிறார்கள் சிலர். கஞ்சா போதையில் இருந்த அவர்கள், அந்தத் தொட்டியின் மூடியைத் திறந்து சிறுநீர் கழித்திருக்கிறார்கள். இந்தச் சம்பவம் தொடர்பாக 17 வயது சிறுவன் உட்பட மூவர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

தொடர் சம்பவங்கள்!

மேலே சொல்லப்பட்ட சம்பவங்களெல்லாம் சிறு உதாரணம் மட்டுமே. கோவை சின்னியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன், கஞ்சா போதையில் ஏற்பட்ட தகராறில் புவனேஷ்குமார் என்ற கல்லூரி மாணவனைக் கொலைசெய்தான். ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் பகுதியில் சிமென்ட் கடை நடத்திவரும் முத்துராமலிங்கம் என்பவர், ‘கஞ்சா போதையில் உலா வரும் ரெளடிகளால், இந்தக் கடை காலவரையின்றி மூடப்படுகிறது’ என்று போர்டு வைத்துவிட்டு, ஊரைவிட்டே கிளம்ப முயன்றதும் பேசுபொருளானது.

திருவட்டார் அருகே கஞ்சா போதையில் பெண்ணைத் தாக்கி, நகை பறித்த மூன்று இளைஞர்கள்... கஞ்சா வியாபாரப் போட்டி காரணமாக, சென்னை கொடுங்கையூரில் பிரபல ரௌடி கருப்பா என்ற ரகுபதி ஓட ஓட விரட்டிக் கொலை... என்று கஞ்சா போதையில் நடந்த குற்றங்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

கொலை
கொலை
கொலை
கொலை

சட்டமன்றத்தில் விவாதம்!

தற்போது நடைபெற்றுவரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில், விழுப்புரம் இப்ராஹிம் கொலை தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின்மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, “தமிழ்நாட்டில் கஞ்சா பழக்கம் அதிகரித்திருக்கிறது. மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள்” என்று சுட்டிக்காட்டினார். “இது தனிப்பட்ட குடும்பப் பிரச்னை காரணமாக ஏற்பட்ட தகராறு. அதில் தடுக்க வந்த ஒருவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்திருக்கிறார்” என்று முதல்வர் பதில் கூறினார்.

சைலேந்திரபாபு
சைலேந்திரபாபு

சட்டமன்றத்துக்கு வெளியே பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “யார் ஆட்சிக்காலத்தில் கஞ்சா, பான்பராக், குட்கா போன்ற போதைப்பொருள்கள் கூடுதலாக இருந்தன என்பதை மக்கள் அறிவார்கள். முதல்வர் ஸ்டாலின் பொறுப்புக்கு வந்தவுடன், தமிழ்நாட்டில் கஞ்சா எங்கும் பயிரிடப்படாத நிலை ஏற்பட்டிருக்கிறது. அதேநேரத்தில் கஞ்சா எங்கே கிடைக்கிறது என்று தகவல் சொன்னால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்க உதவியாக இருக்கும்” என்றார். ஆனால், தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் வெளிப்படையாகவே கஞ்சா விற்பனை நடப்பதாகவும், கஞ்சா போதையால் குற்றங்கள் அதிகரித்திருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

இது குறித்து தமிழ்நாடு காவல்துறைத் தலைவர் சைலேந்திரபாபுவிடம் பேசினோம். “2019-ம் ஆண்டு தமிழ்நாட்டில் நடந்த கொலைகளின் எண்ணிக்கை 1,678. 2022-ம் ஆண்டைப் பொறுத்தவரை 1,596 கொலைகளாக அந்த எண்ணிக்கை குறைந்திருக்கிறது. வரும் வருடங்களில் இந்த எண்ணிக்கை மேலும் குறையும். காவல்துறையின் தொடர் நடவடிக்கை காரணமாக, தமிழ்நாட்டில் 80 சதவிகிதம் கஞ்சா புழக்கம் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. கஞ்சா பயன்பாட்டால் கொலைகள் நடக்கின்றன, குற்றங்கள் அதிகரித்திருக்கின்றன என்று சொல்வதற்கு எந்த முகாந்திரமும் கிடையாது. உண்மையில், கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் கஞ்சா போதையில் நடக்கும் அனைத்துக் குற்றங்களும் குறைந்திருக்கின்றன” என்றார்.

கஞ்சா புழக்கத்தைக் கட்டுப்படுத்த காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதல்வர் என்னதான் செய்யப்போகிறார்?