டிக் டாக், இன்ஸ்டா உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் புகழின் உச்சிக்கே சென்றவர் டான்ஸர் ரமேஷ். அவர் தன் இரண்டாவது மனைவியின் வீட்டு மாடியில் இருந்து மர்மமான முறையில் கீழே விழுந்து இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அவரது மரணம் தற்கொலையா, கொலையா என்று பரபரப்பாகிக்கொண்டிருக்கும் சூழலில் ரமேஷின் முதல் மனைவி சித்ராவிடம் பேசினேன். பதைபதைப்போடு விவரித்தார்...

“என் புருஷன் தற்கொலை பண்ணிக்கிற ஆளெல்லாம் கிடையாது. அவரு எதுக்கும் பயப்படமாட்டாரு. நேற்று அவரோட 42வது பொறந்தநாளு. நேற்று காலையிலகூட, ‘டாடியோட பர்த்டேவாச்சே. அவருக்கு விஷ் பண்ணலையா’ன்னு பொண்ணுங்கக்கிட்ட கேட்டேன். அவரு என்னை பிரிஞ்சு வாழலாம். ஆனா, அவரோட பொறந்தநாளை எப்படி மறக்கமுடியும்? கடைசியா அவரைப் பார்த்து ஒன்றரை மாசம் ஆகுது. என்னைவிட்டு பிரிஞ்சு, அந்த இன்பவள்ளிக்கூட இருந்தாலும் உசுரோட இருக்காரே, என் பொண்ணுங்களுக்கு அப்பா இருக்காறேங்குற நிம்மதியில வாழ்ந்துக்கிட்டிருந்தேன். பொறந்தநாளு அதுவுமா, இப்படிப் பொணமா வருவாருன்னு கொஞ்சம்கூட எதிர்பார்க்கல” என்று கலங்கியவர், ஆசுவாசப்படுத்திக்கொண்டு மீண்டும் பேச ஆரம்பித்தார்.
“நாங்க ரெண்டு பேருமே டான்ஸர்ஸ்தான். 25 வருசத்துக்கு முன்னால லவ் பண்ணித்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். சின்ன வயசிலேயே கல்யாணம். இப்போ, எங்களுக்கு ரெண்டு பொண்ணுங்க. மூத்தவ ஜெனிஃபர். ரெண்டாவது பொண்ணு சனோசர். டான்ஸுல பெரிய வருமானம் இல்லைன்னாலும் மூர் மார்க்கெட்டுல சார்ஜர், ஹெட்போன்ஸ் வித்துக்கிட்டு, வர்ற வருமானத்துல குடும்பத்தை ஓட்டிக்கிட்டிருந்தோம். அந்த இன்பவள்ளிகூட அவருக்கு எப்படிப் பழக்கமாச்சுன்னே தெரியாது. சில வருசமா வீட்டுக்கே வராம, அவக்கூட வாழ்ந்துக்கிட்டிருந்தாரு. நான் தனியாதான் கஷ்டப்பட்டு என் புள்ளைங்கள காப்பாத்தினேன். மூத்த பொண்ணை மூணு வருசத்துக்கு முன்னால கல்யாணம் பண்ணிக் கொடுத்தேன். ரெண்டாவது பொண்ணு சனோசருக்கு போன வருசம் ஆகஸ்ட் மாசம் கல்யாணம் பண்ணிக்கொடுத்தோம். அப்போகூட, ஒரு அப்பாவா வந்து நிக்கல.

நாங்களா சண்டை போட்டுதான் கூட்டிக்கிட்டு வந்தோம். அப்போ, கொஞ்சம் மனசு மாறி நீயும் என் புள்ளைங்களும்தான் முக்கியம்னு எங்கக்கூடவே இருந்தாரு. பொண்ணுங்க கல்யாணத்துக்கு பெரிசா எதுவும் செய்யலைன்னாலும் எங்கக்கூட இருந்த மூணு மாசத்துல டான்ஸ் நிகழ்ச்சிகளுக்கு போயி கிடைக்குற வருமானத்துல கொஞ்சம் செலவுக்கு பணம் கொடுத்துக்கிட்டிருந்தாரு. அஜித் சாரோட ‘துணிவு’ படத்துல நடிச்சிருந்தாரு. 6,000 ரூபாய் சம்பளம் கொடுத்திருந்தாங்க. அதை, எங்கக்கிட்டதான் வீட்டு வாடகைக்குக் கொடுத்தாரு. அடுத்ததா, விஜய்யோட அப்பா ஒரு படம் எடுக்கிறாருன்னு அதுல புக் ஆகியிருந்தாரு. இந்தச் சூழ்நிலையில திடீர்ன்னு ஒன்றரை மாசத்துக்கு முன்னால அந்த இன்பவள்ளி வீட்டுக்குப் போயிட்டாரு. எத்தனை தடவைதான் சொல்றது? நானும் வேற வழியில்லாம அவரு மனசு மாறி வருவாருன்னு விட்டுட்டேன். ஆனா, பொணமா திரும்பி வருவாருன்னு நினைச்சுக்கூட பார்க்கல.

அந்த இன்பவள்ளி என் புருசனைக் கொலைதான் பண்ணிட்டா. ‘குடிக்கக் காசு கேட்டாரு. தரலைன்னதால குதிச்சு தற்கொலை பண்ணிக்கிட்டாரு’ன்னு போலீஸ் விசாரணையில சொல்லியிருக்கா. தொடர்ந்து, டான்ஸு நிகழ்ச்சிக்குப் போயிட்டு வர்றாரு. எப்படி அவர்க்கிட்ட காசு இல்லாம போகும்? நேற்றைக்கு அவருக்குப் பொறந்தநாளு. இந்த நாளில் தற்கொலை பண்ணிக்குவாரா? ஏதோ நடந்திருக்கு. குடிக்கக் காசு கேட்டாருன்னு பொய் சொன்னா, எல்லோரும் நம்பிடுவாங்கன்னு நினைக்குறா. ஆனா, நான் நம்பமாட்டேன். அவதான் என் புருஷனைக் கொலை பண்ணிட்டா. அவளுக்கு புருஷன் இருக்கும்போதே என் புருஷனை வெச்சுக்கிட்டவ. அவ எப்படி நல்லவளா இருப்பா? போலீஸ் உண்மையான காரணத்தை விசாரிச்சு கண்டுபிடிக்கணும்” என்கிறார் தேம்பியபடி.