சென்னை, ராயபுரம், தம்புலைன் போலீஸ் குடியிருப்பில் வசித்துவந்தவர் லோகேஷ் (39). இவர் கடந்த 2003-ம் ஆண்டு தமிழக காவல்துறையில் காவலராக வேலைக்குச் சேர்ந்தார். தற்போது போக்குவரத்துக் காவலராகப் பணியாற்றிவந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கழிவறைக்குச் சென்ற லோகேஷ், நீண்ட நேரமாகியும் வெளியில் வரவில்லை. அதனால் குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, லோகேஷ் மூச்சுப்பேச்சு இல்லாமல் கிடந்தார். உடனே அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு குடும்பத்தினர் கொண்டுசென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், காவலர் லோகேஷ் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். அதைக் கேட்டு அவரின் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்தனர்.

இந்த நிலையில் காவலர் லோகேஷ், தன்னுடைய உயரதிகாரி ஒருவருக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பிவைத்திருக்கிறார். அந்த ஆடியோ, சமூக வலைதளத்தில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
அந்த ஆடியோவில், ``டி.சி அய்யா வணக்கம், காவல்துறையில் சிலர் என்னைப் பழிவாங்கும் நோக்கத்தில் செயல்படுகிறார்கள். போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மாமூல் வாங்குவது எனக்குத் தெரியும். நான் மெடிக்கல் லீவ் எடுத்திருக்கிறேன். ஆனால் எனக்கு மனரீதியாக அவர் டார்ச்சர் கொடுத்துவருகிறார். இதற்கு மேலும் என்னை டார்ச்சர் செய்தால் நான் செத்துவிடுவேன். அதற்காக முதல்வர் கான்வாய் முன்பு உட்கார மாட்டேன். டி.சி அலுவலகம் வாசல் முன்பு குடும்பத்தோடு அமர்ந்து தீக்குளித்து விடுவோம். நான் எந்தத் தப்பும் செய்யவில்லை. தவறு செய்தவர்கள் யார் என்று விசாரியுங்கள். அய்யா, எனக்கு வேலையே வேண்டாம். நீங்கள் வேலூரில் கெத்தாக வேலை பார்த்தீர்கள் எனத் தெரியும். தற்போது உங்களால் முடிந்தால் சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர், உதவி கமிஷனர் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா.
சாதிரீதியாகவும் எனக்கு டார்ச்சர் கொடுக்கிறார்கள். அவர்கள் கொடுத்த டார்ச்சரால்தான் மெடிக்கல் லீவ் கேட்டேன். தினமும் வீட்டுக்கு நாலு பேர் வந்து தொல்லைக் கொடுக்கிறார்கள். அதனால்தான் டி.ஜி.பி அலுவலகத்துக்குச் சென்றேன். லீவ் முடிந்து வேலைக்கு வரப்போகிறேன். என்னை எங்கு பணியமர்த்தினாலும், அங்கு வேலைக்குப் போகப்போகிறேன். முதல்வர் காரை வழிமறித்து என்னால் அமர முடியாதா. காவலர் லோகேஷ் கிங் சார். நான் எண்ணூர், மணலி, அமைந்தகரையில் வேலை பார்த்துவிட்டுத்தான் கோட்டை போக்குவரத்துப் பிரிவுக்கு வந்தேன். டி.ஜி.பி சாரிடமிருந்து ஆர்டர் வந்த பிறகு உங்களை (துணை கமிஷனர்) நேரில் சந்திக்கலாம் என நினைத்திருந்தேன். என்னுடைய மெடிக்கல் ரிப்போர்ட்டை எடுத்துவந்து காத்திருந்தபோது, தபாலில் அனுப்பச் சொல்லியிருக்கிறார்கள். நான் ஒளிவுமறைவின்றிதான் டி.ஜி.பி சாரை சந்தித்தேன். நான் நிம்மதியாக இருக்கவா... இல்லை செத்துவிடவா... ஆனால், நான் செத்துவிட்டால் இன்ஸ்பெக்டரையும் உதவி கமிஷனரையும் விட மாட்டேன். நான் பெர்சனலாகவே சொல்கிறேன். எல்லோரும் மாமூல் மூலம் சம்பாதிக்கிறார்கள். என்னை மீண்டும் மீண்டும் டார்ச்சர் செய்கிறார்கள். நான் போலீஸ் குடியிருப்பில் இருக்கிறேன். எனக்கு உடல்நலம் சரியில்லை. முடிந்தால் நடவடிக்கை எடுங்க அய்யா.

போக்குவரத்து இன்ஸ்பெக்டர், வாரத்தில் ஒருநாள் 100 லிட்டர் டீசலைத் திருடச் சொன்னார். அதில் 20 லிட்டர் ஏ.சி-க்கும் 80 லிட்டர் இன்ஸ்பெக்டருக்குன்னு சொன்னார். ஆனால், நான் திருடமாட்டேன் என்று சொல்லிவிட்டேன். அதை டி.ஜி.பி-யிடமும் கமிஷனரிடமும் நேரில் சொல்வேன். இன்ஸ்பெக்டர் நீண்ட தூரத்திலிருந்து வருவதாக டீசல் கேட்கிறார். நான் எந்தப் பிரச்னையும் செய்யவில்லை. மெடிக்கல் லீவில் இருக்கிறேன். நான் நேரில் உங்களிடம் பேசத் தயாராக இருக்கிறேன். அதன்பிறகு என்ன ஆக் ஷன் எடுத்தாலும் சரி. எனக்கு வேலையே இல்லை என்றாலும் பிரச்னை இல்லை. நான் யாரிடமும் பணம் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. இன்ஸ்பெக்டரும் ஏசியும் செய்கிற வேலைதான் இதுசார். அவர்கள் எப்போது வேலைக்கு வருகிறார்கள் என்பதை விசாரித்துப் பாருங்கள் அய்யா.
நான் எதுவும் செய்யவில்லை. நான் கரெக்ட்டாக வேலை பார்த்தேன். நான் ஏதாவது செய்துகொண்டால் அவர்கள் இருவரையும் ஜெயிலுக்கு அனுப்பிவிடுவீர்களா. என்னை யாரென்றே உங்களுக்குத் தெரியாது. அய்யா எல்லோரிடமும் பேசுங்க. கோட்டை போக்குவரத்துப் பிரிவு ஒரு தண்டனைக்குரிய பணியிடம்.

உதவி கமிஷனருக்கு மாதம் ரூபாய் ஐந்து லட்சமும், இன்ஸ்பெக்டருக்கு ரூபாய் ஒன்றரை லட்சமும் மாமூலமாக வருகிறது. அதை ஒருவர் வசூல் செய்து கொடுத்துவருகிறார். இதற்கு மேல் என்ன ஆக் ஷன் எடுக்கிறீர்களோ எனத் தெரியவில்லை. போலீஸ் ஏதாவது செய்தால், எல்லா போலீஸுக்கும் தப்பாகிவிடும். என்னை ரிமாண்டு செய்து ஜெயிலுக்கு அனுப்பினாலும் சரி. ஆனால், இவர்கள் இருவரையும் நான் சும்மா விடமாட்டேன்" என்பதோடு ஆடியோ முடிவடைகிறது.
போக்குவரத்துக் காவலர் லோகேஷ் குற்றம்சாட்டிய இன்ஸ்பெக்டர், உதவி கமிஷனர் ஆகியோரிடம் விளக்கம் கேட்க பலதடவை முயற்சி செய்தோம். ஆனால், அவர்கள் பதிலளிக்கவில்லை. அவர்கள் விளக்கமளிக்கும் பட்சத்தில் அதை உரிய பரிசீலனைக்குப் பின்னர் பதிவிட தயாராக இருக்கிறோம்.
இந்த ஆடியோ குறித்து போக்குவரத்துப் பிரிவு போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, ``காவலர் லோகேஷின் ஆடியோ குறித்து விசாரணை நடந்துவருகிறது. அந்த ஆடியோவில் அபராதம் வசூலிக்கும் கருவியில் குளறுபடி செய்வதாக காவலர் லோகேஷ் குற்றம்சாட்டியிருக்கிறார். அது முற்றிலும் தவறு" என்றார்.