அரசியல்
Published:Updated:

“காசு ரூபத்துல உங்க கணவரே வர்றாரு!” - மோசடிக் கும்பலின் சென்டிமென்ட் டெக்னிக்

மோசடி
பிரீமியம் ஸ்டோரி
News
மோசடி

புகாரளிக்க வந்தபோதே ஆசிரியை சுதா ஒருவித மன அழுத்தத்தில் இருந்தார். அந்த அளவுக்கு மோசடிக் கும்பல் அவரை மூளைச்சலவை செய்திருக்கிறது.

குடியரசுத் தலைவரிடம் சிறந்த ஆசிரியை என விருது பெற்றவரிடமிருந்து, 2.13 கோடி ரூபாயை மோசடி செய்த டெல்லி கும்பலை, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். இந்த ஹைடெக் மோசடிக் கும்பலிடம் ஆசிரியை ஏமாந்த கதை, மற்றவர்களுக்கெல்லாம் ஒரு பாடம்!

 “காசு ரூபத்துல உங்க கணவரே வர்றாரு!” - மோசடிக் கும்பலின் சென்டிமென்ட் டெக்னிக்

சென்னை மந்தவெளியைச் சேர்ந்தவர் சுதா ஸ்ரீதரன். மத்திய அரசுப் பள்ளியில் கம்ப்யூட்டர் ஆசிரியையாகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரின் கணவர் ஸ்ரீதரன், ஐ.ஆர்.எஸ் அதிகாரி. சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீதரன் இறந்துவிட, அவரின் இன்ஷூரன்ஸ் பணம் சுதாவின் வங்கிக்கணக்கில் 2019-ம் ஆண்டில் வரவு வைக்கப்பட்டிருந்தது. அடுத்த சில தினங்களிலேயே சுதாவுக்கு டெல்லியிலிருந்து ஒரு போன் அழைப்பு வந்திருக்கிறது. அதில் பேசியவர் தன்னை லைஃப் இன்ஷூரன்ஸ் அதிகாரி என அறிமுகப்படுத்திக்கொண்டிருக்கிறார். ‘‘ஸ்ரீதரனின் காப்பீட்டுத் தொகையில் இன்னும் 19 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டியிருக்கிறது. அந்தப் பணத்தை உங்கள் வங்கிக் கணக்குக்கு அனுப்புகிறோம். அதற்கான ஜி.எஸ்.டி-யை முன்பே நீங்கள் செலுத்த வேண்டும்’’ என்று கூறியிருக்கிறார். அதை நம்பிய சுதா, தொகையை அந்த வங்கிக் கணக்குக்கு அனுப்பியிருக்கிறார்.

அதன் பிறகு, மீண்டும் சுதாவைத் தொடர்பு கொண்ட அந்த ஆசாமி, ‘‘சிலரிடம் கையெழுத்து பெற வேண்டியுள்ளது. அதற்குக் கொஞ்சம் செலவாகும்’’ என ஒரு குறிப்பிட்ட தொகையை அனுப்பும்படி கூறியிருக்கிறார். அந்தத் தொகையையும் சுதா அனுப்பிவைத்திருக்கிறார். 2019-ம் ஆண்டு, மார்ச் மாதம் தொடங்கிய இந்த டீலிங், ஆண்டின் இறுதி வரை நடந்திருக்கிறது. எட்டு வங்கிக் கணக்குகளுக்கு, பலமுறை கேட்ட தொகையையெல்லாம் அனுப்பிவைத்திருக்கிறார் சுதா. அப்படி சுதா அனுப்பிய மொத்த தொகை 2.13 கோடி ரூபாய்!

கடைசியாகப் பணம் அனுப்பிய பிறகு, தன்னைத் தொடர்புகொண்ட எந்த எண்ணும் வேலை செய்யாத நிலையில், தான் ஏமாற்றப்பட்டிருப்பதை அறிந்து, 2019-ம் டிசம்பரில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்குச் சென்று சுதா புகாரளித்தார். அதன்பேரில் கூடுதல் துணை கமிஷனர் வித்யா ஜெயந்த் குல்கர்னி மேற்பார்வையில் அமைக்கப்பட்ட குழுவினர், தேடுதல் வேட்டையை மேற்கொண்டனர். கொரோனா பொதுமுடக்கம், வழக்கை மேற் கொண்டு விசாரிக்க முடியாமல் தடுக்க, 2021 ஏப்ரல் முதல் வாரத்தில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார், மோசடிக் கும்பலைக் கைதுசெய்திருக்கிறார்கள்.

‘‘19 லட்சத்துக்காக யாராவது 2 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பார்களா?” என்று இந்த வழக்கை விசாரிக்கும் போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் கேட்டோம்.

‘‘புகாரளிக்க வந்தபோதே ஆசிரியை சுதா ஒருவித மன அழுத்தத்தில் இருந்தார். அந்த அளவுக்கு மோசடிக் கும்பல் அவரை மூளைச்சலவை செய்திருக்கிறது. தனிமையிலும் விரக்தியிலும் இருந்த அவரிடம், ‘19 லட்சம்கிறது வெறும் காசில்லை. உங்க கணவரோட ஆத்மா. அது மூலமா அவரே உங்ககிட்ட வர்றாரு. அவருக்காகச் செலவு பண்ண யோசிக்காதீங்க’ என்றெல்லாம் நெகிழ்ச்சியான வார்த்தைகளைக் கூறியிருக்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுத்து, ஒருகட்டத்தில் தொடரவும் முடியாமல், வெளியிலும் வர முடியாமல் தவித்திருக்கிறார். அதற்குள் ஒரு கோடி வரை பணத்தை இழந்திருக்கிறார். உடனே அந்தக் குழுவே இன்கம்டாக்ஸ் அதிகாரிகள்போலப் பேசி, ‘ஒரே வங்கிக் கணக்கிலிருந்து இவ்வளவு பணம் எப்படி அனுப்பினீர்கள்? இதற்கு வரி கட்ட வேண்டும்’ என்று பணம் அனுப்பச் சொல்லி மிரட்டியிருக் கிறார்கள். மீண்டும் இன்ஷூரன்ஸ் அதிகாரிகள்போலப் பேசி, ‘இன்கம்டாக்ஸ் க்ளியர் ஆகாததால் பணம் ரிலீஸ் செய்ய முடியவில்லை. அவர்களைச் சரிக்கட்ட லஞ்சம் கொடுக்க வேண்டும்’ என்று சொல்லி பணம் கேட்டிருக்கிறார்கள். இரண்டும் ஒரே கும்பல் என்று தெரியாமல், கணவரின் இன்ஷூரன்ஸ் தொகை, தன்னுடைய ஓய்வூதியப் பணம், நகைகளை அடகு வைத்துக் கிடைத்த பணம் என எல்லாவற்றையும் கொடுத்து ஏமாந்திருக்கிறார்.

கடும் மன உளைச்சலில் இருந்த சுதா, பணத்தை ஏமாந்தது தொடர்பாகத் தன் மகள்களிடம்கூடச் சொல்லவில்லை. சுதாவின் நடவடிக்கையில் ஏற்பட்ட மாற்றத்தை கவனித்த அவரின் மகள் கள்தான், கமிஷனரிடம் சுதாவை அழைத்துவந்தனர்.

 “காசு ரூபத்துல உங்க கணவரே வர்றாரு!” - மோசடிக் கும்பலின் சென்டிமென்ட் டெக்னிக்

செயல்படாமலிருந்த அந்தக் குறிப்பிட்ட மோசடி வங்கிக் கணக்கிலிருந்து, ஒரு கல்லூரி மாணவனுக்குப் பணம் அனுப்பப்பட்டிருப்பது தெரியவந்தது. அதை ட்ரேஸ் செய்து அந்த மாணவனிடம் விசாரித்தபோது, பிரதீப்குமார் என்பவனைப் பற்றித் தகவல் கிடைத்தது. போய்ப் பார்த்தபோது, அவன் டெல்லியில் பிரமாண்டமான சொகுசு பங்களாவில் குடியிருந்தான். முழுமையாகச் சந்தேகப்பட முடியாததாலும், அவன் உண்மையை ஒப்புக்கொள்ளாததாலும் டெல்லி போலீஸாரின் உதவியை நாடியது சென்னை போலீஸ். தொடர்ச்சியான கண்காணிப்பில், பிரதீப்பின் கூட்டாளிகள் அமன்பிரசாத், மனோஜ்குமார், குபீர்சர்மா, ஹீமன்சு தாஹி, ராம்பால் ஆகியோர் குறித்த தகவல்கள் கிடைக்க, எல்லோரையும் கைது செய்தது சென்னை போலீஸ்.

இந்தியா முழுவதும் இந்தக் கும்பல் கைவரிசை காட்டியிருந்தாலும், சென்னை போலீஸாரிடம்தான் முதன்முறையாகச் சிக்கியுள்ளனர். இன்ஷூரன்ஸ் நிறுவனங்களில் பணியாற்றிய முன்னாள் ஊழியர்களிடமிருந்து தகவல்களைப் பெற்று, கணவனை இழந்து தனிமையில் வாடும் பணக்காரப் பெண்களைக் குறிவைத்து இப்படிச் செய்துள்ளனர். தோரணையான குரலும், சென்டிமென்ட் பேச்சுமே இவர்களின் மூலதனம். மொத்த மோசடிப் பணத்தையும் பிளாட்களில் முதலீடு செய்திருக் கிறார்கள். அதைச் சட்டரீதியாகப் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுத்துவருகிறோம். சுதாவை மகள்களுடன் பெங்களூரில் இருக்கச் சொல்லி அறிவுறுத்தியுள்ளோம். இந்தக் கும்பல் எங்களிடம் சிக்கியிருப்பது தெரிந்து, பல்வேறு மாநில போலீஸாரும் இவர்களைப் பற்றிய தகவல்களைக் கேட்டுவருகின்றனர்’’ என்றார்.

மோசடிக் கும்பல்களின் ஃபார்முலாக்கள் நாளுக்கு நாள் விதவிதமாக மாறிக்கொண்டே வருகின்றன. விழிப்புடன் இருக்க வேண்டியது நாம்தான்!