காதலியின் உடல் உறுப்புகளோடு ஐஸ்க்ரீம், கூல் டிரிங்க்ஸ்! - அதிரவைத்த கொலைகாரன் வாக்குமூலம்

சமூக ஊடகம் வழியே எனக்கு ஃப்ரெண்ட் ஆனார் ஷ்ரத்தா. ஆனால், சில மாதங்களாக அவரிடமிருந்து எந்த மெசேஜும் வரவில்லை. போனிலும் அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை.
‘‘கொலைசெய்யப்பட்டு ஃப்ரிட்ஜில் வைக்கப்பட்ட காதலியின் உடல் உறுப்புகளோடுதான் ஐஸ்க்ரீம், கூல் டிரிங்க்ஸுகளையும் வைத்து தினமும் பயன்படுத்திவந்தேன்....’’ என்று டெல்லி போலீஸாரிடம் கொலைகாரன் அளித்திருக்கும் வாக்குமூலம் ஆயிரம் ‘வோல்ட்’ அதிர்ச்சி!
மும்பையைச் சேர்ந்த அல்தாப் பூனாவாலா - ஷ்ரத்தா காதல் ஜோடி, டெல்லியில் ‘லிவிங் டுகெதர்’ வாழ்க்கையை நடத்திவந்திருக்கின்றனர். கடந்த மே மாதம், 18-ம் தேதி இருவருக்குமிடையே திருமணம் தொடர்பாக எழுந்த வாக்குவாதத்தை அடுத்து, காதலி ஷ்ரத்தாவைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்திருக்கிறான் காதலன் அல்தாப். பின்னர், ஷ்ரத்தாவின் உடலை 35 துண்டுகளாக வெட்டி, ஃப்ரிட்ஜில் வைத்திருந்து ஒவ்வோர் உறுப்பாக அப்புறப்படுத்தியிருக்கிறான்.

சிக்கியது எப்படி?
நாட்டையே உலுக்கிய இந்த வழக்கை டெல்லி மற்றும் மும்பை போலீஸார் இணைந்து விசாரித்துவருகின்றனர். வழக்கு குறித்து நம்மிடம் பேசிய விசாரணை அதிகாரிகள், ‘‘ ‘ஸ்ரத்தா இன்னும் உயிரோடுதான் இருக்கிறார்’ என்பதை வெளியுலகுக்குக் காட்ட அவரது இன்ஸ்டாகிராம் கணக்கில் அடிக்கடி எதையாவது பதிவிட்டுவந்திருக்கிறான் அல்தாப். மே 31-ம் தேதி ஷ்ரத்தாவின் இன்ஸ்டாகிராம் கணக்கு டெல்லியில் அல்தாப் வசித்த மெஹ்ருலி என்ற இடத்தில் பயன்படுத்தப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்து, அல்தாப்பிடம் கிடுக்கிப்பிடியாக விசாரித்தபோது, வேறு வழியின்றி கொலை உள்ளிட்ட அனைத்தையும் ஒப்புக்கொண்டான்’’ என்றனர்.
இதைத் தொடர்ந்து காவல்துறை விசாரணை அதிகாரிகளிடம் அவன் அளித்திருக்கும் வாக்குமூலத்தில், ‘‘வெப் சீரீஸ்களில், கொலை செய்த பிறகு, உடலைப் பாதுகாத்து வைத்திருந்து பிறகு அப்புறப்படுத்துவது தொடர்பான காட்சிகளை நிறைய பார்த்திருக்கிறேன். அதில் கிடைத்த ஐடியாவைப் பயன்படுத்தித்தான் ஷ்ரத்தாவின் உடலை 35 துண்டுகளாக வெட்டி, பிளாஸ்டிக் கவரில் போட்டு ஃபிரிட்ஜில் வைத்தேன். அந்த உடல் உறுப்புகளுக்கு மத்தியில்தான் நான் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய ஐஸ்க்ரீம், கூல் டிரிங்க்ஸ்களையும் வைத்திருந்து தினமும் பயன்படுத்திவந்தேன்’’ என்று சாதாரணமாகச் சொல்லியிருக்கிறான்.

எப்படித் தெரிந்தது விஷயம்?
ஷ்ரத்தா படுகொலை விவகாரத்தை வெளியுலகுக்குக் கொண்டுவந்ததில் முக்கியமான நபராக இருந்திருப்பவர் மும்பையைச் சேர்ந்த லட்சுமண் என்ற தமிழர். அவரிடம் பேசியபோது, ‘‘சமூக ஊடகம் வழியே எனக்கு ஃப்ரெண்ட் ஆனார் ஷ்ரத்தா. ஆனால், சில மாதங்களாக அவரிடமிருந்து எந்த மெசேஜும் வரவில்லை. போனிலும் அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. எனவே, கடந்த ஆகஸ்ட் மாதமே ஷ்ரத்தாவின் சகோதரருக்குத் தகவல் தெரிவித்தேன். ஆனால், அவர்களாலும் ஷ்ரத்தாவைத் தொடர்புகொள்ள முடியவில்லை. அதன் பிறகுதான் இது குறித்து வசாய் போலீஸில் புகார் செய்தனர்’’ என்றார்.