Published:Updated:

திண்டுக்கல் டு விருதுநகர்... லாரியில் வந்து வேட்டையாடிய கும்பல் - 29 முயல்கள் பறிமுதல்!

முயல் வேட்டை
News
முயல் வேட்டை

விருதுநகர் அருகே காட்டுப்பகுதியில் முயல் வேட்டையாடியவர்களை வனத்துறையினர் சுற்றிவளைத்துப் பிடித்தனர். அவர்களிடமிருந்து 29 முயல்கள் இறந்தநிலையில் பறிமுதல் செய்யப்பட்டன.

Published:Updated:

திண்டுக்கல் டு விருதுநகர்... லாரியில் வந்து வேட்டையாடிய கும்பல் - 29 முயல்கள் பறிமுதல்!

விருதுநகர் அருகே காட்டுப்பகுதியில் முயல் வேட்டையாடியவர்களை வனத்துறையினர் சுற்றிவளைத்துப் பிடித்தனர். அவர்களிடமிருந்து 29 முயல்கள் இறந்தநிலையில் பறிமுதல் செய்யப்பட்டன.

முயல் வேட்டை
News
முயல் வேட்டை

விருதுநகர் அருகே பூசாரிப்பட்டி காட்டுப்பகுதியில் பலர் வனவிலங்குகளை வேட்டையாடுவதாக வனத்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. தகவலறிந்த விருதுநகர் வனப்பாதுகாப்புப் படை போலீஸார், பாதுகாப்பு அலுவலர் கார்வேந்தன் தலைமையில் அங்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர். ஆனால், அதற்குள் வேட்டையில் ஈடுபட்டவர்கள் அந்தப் பகுதியிலிருந்து தப்பிச் சென்றனர். இதையடுத்து, சமயோஜிதமாகச் செயல்பட்ட வனத்துறையினர், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே வந்த மூன்று லாரிகளை மடக்கிப்பிடித்து அதில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததோடு, வேட்டைக்கருவிகளையும் வைத்திருந்ததால் சந்தேகத்தின்பேரில் அவர்களை, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள உதவி வனப்பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்துக்கு அழைத்துவந்து விசாரணை நடத்தினர்.

முயல் வேட்டை
முயல் வேட்டை

வனத்துறையினரின் இந்த விசாரணையில், அவர்கள் அனைவரும் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகேயுள்ள கருத்தலக்கம்பட்டி, புதூர் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் என்பதும், தங்களது குலதெய்வக் கோயில் வழிபாட்டுக்காக 'பாரி வேட்டை' என்ற பெயரில் வேட்டையாடுவதும் வழக்கம். அதனடிப்படையில் இங்கு வந்து முயல் வேட்டையில் ஈடுபட்டதாக வனத்துறையினரிடம் தெரிவித்திருக்கின்றனர். மேலும், அவர்கள் கொடுத்த தகவலின்படி வாகனங்களில் சோதனை செய்ததில் 29 முயல்கள், 3 கீரிப்பிள்ளைகள், ஒரு கவுதாரி, ஓர் அணில் ஆகியவை இறந்தநிலையில் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், வேட்டையாடப் பயன்படுத்திய நாய் மற்றும் கவண், கம்பு உள்ளிட்ட பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து வனத்துறையினரிடம் பேசுகையில், "வனவிலங்குகள் வேட்டையில் ஈடுபட்ட அனைவர் மீதும் வழக்கு பதிவுசெய்து நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தனர்.