அஸ்ஸாம் மாநில ஜி.எஸ்.டி ஆணையர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக மாட்டிக்கொண்ட பெண் அதிகாரி வீட்டில் 65 லட்ச ரூபாய் கைப்பற்றப்பட்ட சம்பவம் பேசுபொருளாகியிருக்கிறது.
அஸ்ஸாம் மாநில வரித்துறை உதவி ஆணையர் மீனாட்சி ககாதி கலிதா, ஜி.எஸ்.டி ஆன்லைன் செயல்பாடுகளை மீண்டும் செயல்படுத்துவதற்கு ஒருவரிடம் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதன் பின்னணி வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

இதில் மீனாட்சி ககாதி கலிதா ஒருவழியாக, பத்தாயிரத்திலிருந்து எட்டாயிரம் ரூபாய்க்கு இறங்கி வந்த பிறகு, சம்பந்தப்பட்ட நபர் லஞ்சம் தர மறுத்து அஸ்ஸாம் விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநரகத்தில் புகாரளித்திருக்கிறார்.
அதன் பின்னர் மாநில ஜி.எஸ்.டி ஆணையர் அலுவலகத்தில் நேற்று மறைமுக நடவடிக்கை மேற்கொண்ட ஊழல் தடுப்பு அதிகாரிகள், சரியாக மதியம் 2:45 மணியளவில் மீனாட்சி ககாதி கலிதா ஒருவரிடம் நான்காயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டபோது, அவரைக் கையும் களவுமாகப் பிடித்தனர்.

அதைத் தொடர்ந்து, அவரின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டபோது, 65,37,500 ரூபாய் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது. இறுதியில் கைதுசெய்யப்பட்ட மீனாட்சி ககாதி கலிதா மீது நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் ஊழல் தடுப்புச் சட்டம், 1988-ன் படி (2018ல் திருத்தப்பட்டது) அவர்மீது வழக்கு பதிவுசெய்தனர்.

இதேபோல் நேற்று மற்றுமொரு சம்பவத்தில், நிலத்துக்கான பட்டா வழங்க நான்காயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட கம்ரூப் கிராமப்புற வட்ட அதிகாரி மகேந்திர நாத்தை, ஊழல் தடுப்பு அதிகாரிகள் கையும் களவுமாகப் பிடித்துக் கைதுசெய்தனர். மகேந்திர நாத் மீதும் ஊழல் தடுப்புச் சட்டம், 1988-ன்படி அதிகாரிகள் வழக்கு பதிவுசெய்தனர்.