கன்னியாகுமரி மாவட்டம், இரணியலை அடுத்த தெக்கன்விளை கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிகுமார் (56). இவருக்கு ஆஷிகா, என்ற மகளும், ஆதிஷ் என்ற மகனும் இருக்கின்றனர். பழனிகுமார் தந்தை வழியில் தன்னுடைய 15 வயது முதல் தி.மு.க-வில் இணைந்து அரசியலில் செயல்பட்டுவந்தார். குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தி.மு.க துணைச் செயலாளராக இருந்தார். கடந்த உள்ளாட்சித் தேர்தலில் கக்கோட்டுதலை கிராம ஊராட்சியில் 2-வது வார்டு உறுப்பினராக தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

கக்கோட்டுத்தலை ஊராட்சி வார்டு உறுப்பினராக இருந்து முழு நேர அரசியலிலும் பொது வாழ்விலும் ஈடுபட்டுவந்த பழனிகுமார் வருமானமின்றி வறுமையில் வாடிய நிலையில், தனக்குச் சொந்தமான பாழடைந்த சிமென்ட் கூரை வீட்டில் மனைவி, குழந்தைகளுடன் வசித்துவந்தார்.
கடந்த ஆண்டு 11-ம் வகுப்பு பயின்று வந்த அவரின் மூத்த மகள் ஆஷிகா பள்ளியிலிருந்து கல்விச் சுற்றுலாச் செல்ல தந்தை பழனிகுமாரிடம் பணம் கேட்டிருக்கிறார். ஆனால், பொருளாதார சிக்கலில் தவித்த பழனிகுமார், பணம் இல்லாததால் தன்னுடைய மகளைச் சுற்றுலாவுக்கு அனுப்பாமல் இருந்திருக்கிறார். இதனால் மனமுடைந்த ஆஷிகா கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 18-ம் தேதி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலைசெய்திருக்கிறார்.
மகள் இறந்த துக்கம் தாளாமல் இருந்துவந்த பழனிகுமார், வருமானம் இல்லாத தன்னால் மனைவி, குழந்தைகளை சரிவர கவனிக்க முடியாமல் கஷ்டப்பட்டு வந்திருக்கிறார். அதோடு அவர்கள் படும் சிரமத்தைக் கண்டு மிகவும் மனவேதனையில் இருந்துவந்திருக்கிறார். இதற்கிடையே, தன்னுடைய பழைய வீட்டை காலி செய்துவிட்டு, மனைவி, மகனுடன் உறவினர் ஒருவர் வீட்டில் வசித்துவந்திருக்கிறார் பழனிகுமார். நேற்று முன் தினம் கட்சிக் கூட்டத்துக்குச் சென்று வருவதாகக் கூறி, வீட்டை விட்டுச் சென்ற பழனிகுமார் இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இந்த நிலையில்தான் மகளின் முதலாம் ஆண்டு நினைவு தினமான நேற்று பழனிகுமார் தன்னுடைய பழைய வீட்டு உத்திரத்தில் கயிற்றால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற இரணியல் போலீஸார் மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவுசெய்து அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
சிறு வயது முதலே தி.மு.க-வில் இயங்கும் பழனிகுமார் கட்சிப்பணிக்காக தனது முழு வாழ்க்கையையும் தொலைத்துவிட்டு, குடும்பத்தினரையும் அனாதையாக விட்டுச் சென்றுவிட்டார். வீடு இல்லாமல் மகனுடன் வசிக்கும் அவரின் மனைவிக்கு, முதலமைச்சர் உதவி செய்ய வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.