இத்தாலியின் ஜியோயா டாரோ (Gioia Tauro) நகரத்தில் துறைமுகம் இருக்கிறது. இந்தத் துறைமுகத்துக்கு ஈக்வடாரிலிருந்து அனுப்பப்பட்ட 70 டன் வாழைப்பழங்கள் பெட்டிகளில் அடைக்கப்பட்டுவந்திருக்கின்றன. வழக்கமான சோதனையில் இவ்வளவு வாழைப்பழத்தை ஒரே நேரத்தில் ஏற்றுமதி செய்யவேண்டிய அவசியம் என்ன என்ற நோக்கில் காவல்துறை சோதனை செய்திருக்கிறது. பின்னர், அது வெறும் வாழைப்பழம்தான் என்பதைக் காவல்துறை தரப்பு உறுதிசெய்தது.

ஆனால், போதைப்பொருள்களை மோப்பமிடும் கோர் எனும் மோப்ப நாய், அதில் போதைப்பொருள் இருப்பதை ஊர்ஜிதப்படுத்தியது. உடனே சோதனைக் காவலர்கள் அந்தப் பெட்டிகளைப் பிரித்துச் சோதித்ததில், அவற்றில் 2,700 கிலோ அளவுக்கு கோகெய்ன் எனும் போதைப்பொருள் இருந்திருக்கிறது. அதன் மதிப்பு 1.3 பில்லியன் டாலர்.
இறுதியில், போதைப்பொருள் முழுவதையும் அதிகாரிகள் கைப்பற்றினர். கடந்த ஆறு நாள்களுக்கு முன்னர் இதே துறைமுகத்திலிருந்து ஆறு கொள்கலன் சரக்குகளில் சுமார் 600 கிலோகிராம் கோகெய்ன் போதைப்பொருளை அதிகாரிகள் கண்டுபிடித்ததாகவும், அந்தக் கப்பல்கள் குரோஷியா, கிரீஸ், ஜார்ஜியா ஆகிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டவை என்றும் சுங்கக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.