Published:Updated:

ஆசிரியருக்குக் கொலைமிரட்டல்! மாணவர்கள் வன்முறையில் இறங்க யார் காரணம்? | Doubt of Common Man

குழந்தைகள்
News
குழந்தைகள்

குழந்தைகள் இத்தகைய செயல்களில் ஈடுபடுவதற்கு அவர்கள்‌ மட்டும் காரணம் இல்லை. அவர்களாகவே விரும்பி இவற்றைச் செய்வதும் கிடையாது.

Published:Updated:

ஆசிரியருக்குக் கொலைமிரட்டல்! மாணவர்கள் வன்முறையில் இறங்க யார் காரணம்? | Doubt of Common Man

குழந்தைகள் இத்தகைய செயல்களில் ஈடுபடுவதற்கு அவர்கள்‌ மட்டும் காரணம் இல்லை. அவர்களாகவே விரும்பி இவற்றைச் செய்வதும் கிடையாது.

குழந்தைகள்
News
குழந்தைகள்
சமீபத்தில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள மஞ்சினி கிராமத்தில் உள்ள அரசுப்பள்ளி ஒன்றில் படிக்கும் 12-ம் வகுப்பு மாணவன் அப்பள்ளியின் தலைமையாசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முடி வெட்டாமல் வந்ததற்காகக் கண்டித்த தலைமையாசிரியரை பீர் பாட்டில் கொண்டு குத்த முயன்றுள்ளான் அம்மாணவன். இந்தச் சம்பவத்திற்கு பிறகு காவல்துறை மற்றும் ஆசிரியர்களால் அறிவுரை வழங்கப்பட்டு அவன் வீட்டிற்கு அனுப்பப்பட்ட பின்பும் மொபைல் மூலம் மீண்டும் கொலைமிரட்டல் விடுக்கவே பயந்து போன தலைமையாசிரியர் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். இதையடுத்து ஆத்தூர் காவல்துறையினர் அம்மாணவன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர்.
Doubt of common man
Doubt of common man

இளம்வயதிலேயே இத்தகைய வன்முறை செயல்களில் மாணவர்கள் ஈடுபடுவதற்கான காரணங்கள் குறித்து குழந்தைகள் நல ஆர்வலர் மற்றும் செயல்பாட்டாளர் தேவநேயனிடம் கேட்டோம்.

அவர் கூறியது, "குழந்தைகள் இத்தகைய செயல்களில் ஈடுபடுவதற்கு அவர்கள்‌ மட்டும் காரணம் இல்லை. அவர்களாகவே விரும்பி இவற்றைச் செய்வதும் கிடையாது. இப்போது இருக்கும் சமூகச் சூழலே குழந்தைகளை இவ்வாறு செய்யத் தூண்டுகிறது. டிவி, சினிமா என பார்க்கும் இடமெங்கும் வன்முறை மட்டுமே நிறைந்து காணப்படுகிறது. சினிமாவில் படியில் தொங்கிக்கொண்டே செல்வதும், பீர் பாட்டிலை கையில் வைத்திருப்பதும் ஹீரோயிசமாகக் காட்டப்படுகிறது. அதை பார்த்து வளரும் குழந்தைகளும் அந்த நடிகர்களுக்கு ரசிகர் மன்றம் வைத்து கொண்டாடுகிறார்கள். அவர்களையே ரோல்மாடலாக பார்க்கிறார்கள். இது அவர்களிடத்தில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டு செய்கிறது.

குற்றவாளிகளாக மாணவர்கள் - Representational image
குற்றவாளிகளாக மாணவர்கள் - Representational image

இன்றைய சமூகமும் மிகவும் மோசமான நிலையில்தான் இருக்கிறது. பெற்ற தாயையே கொல்பவர்கள், சொத்துக்காக உடன் பிறந்தோரை கொல்பவர்கள் என இவர்கள் மத்தயில்தான் இன்றைய தலைமுறை வளர வேண்டிய நிலை. குழந்தைகள் எல்லாம் வன்முறையை கையில் எடுக்கிறார்கள், சமூகமே மோசமடைந்துவிட்டது என்று மட்டும் நாம் கூற முடியாது. இதற்கான காரணமே மோசமான இச்சமூகம்தான் என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். முதலில் சமூகத்தை சரிசெய்தால்தான் நம்மால் இவர்களைச் சரிசெய்ய முடியும்" என்கிறார்.

இதுபோன்ற செயல்களில் குழந்தைகள் ஈடுபடாமல் தடுக்க குழந்தைகளைச் சுற்றி இருக்கும் பெற்றோர், ஆசிரியர் மற்றும் சமூகம் செய்ய வேண்டிய கடமைகள் குறித்தும் விளக்குகிறார் அவர். "குழந்தைகளுக்கும் மாண்பு, பண்பு‌ என அனைத்தும் உண்டு. அதுவும் குறிப்பாக வளரும் இளம் பருவத்தில் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பல பருவ மாற்றங்கள் அவர்களிடத்தில் நிகழும். இந்தப் பருவத்தில் தங்களை ஒரு ஹீரோவாக அவர்களே பாவித்துக்கொள்வார்கள். மேலும் ஹீரோ என்றால் இப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று தாங்கள் பார்த்து உணர்ந்த கற்பிதங்களை பின்பற்ற முயல்வார்கள். இதுபோன்ற நேரங்களில் அவர்களை அழைத்து "ஏன் முடி வெட்டவில்லை?" எனக் கேட்பது ஏதோ அவர்களின் கௌரவத்தைக் குலைத்துவிட்டது போன்று உணர்வார்கள். அதுவும் சக மாணவர்கள் முன்னிலையில் குறிப்பாக எதிர் பாலினத்தவர் முன்பு இது நடப்பது அவர்களின் கௌரவத்தை மேலும் பாதிப்பதாக நினைப்பார்கள். குழந்தைகளுக்கு பதின்பருவத்தில் ஏற்படும் இதுபோன்ற மனக்குழப்பங்கள் குறித்து நாம் நிச்சயம் சிந்திக்க வேண்டும். மாணவர்களுக்கு வாழ்க்கைத்திறன் கல்வி, மனித பண்புகள் குறித்த கல்வி, பல்வேறு சூழல்களை எதிர்கொள்ளும் திறன் ஆகியவை குறித்து கற்பிக்க வேண்டும்.

பாதிக்கப்படும் குழந்தை
பாதிக்கப்படும் குழந்தை

இதேமாதிரி வாசகர்கள் கேட்ட கேள்விகளின் அடிப்படையில் எழுதப்பட்ட சிறப்புக் கட்டுரைகளை வாசிக்க... இங்கே க்ளிக் செய்யவும்.

எது சரி, எது தவறு என்பதே தெரியாத பருவம் இந்தப் பதின்பருவம். இந்தப் பருவத்தில் எதை எல்லாம் செய்வது சரி, யாரை ரோல் மாடலாக எடுத்து கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆசிரியர் அல்லது பெற்றோர் யாராவது ஒருவர் அவர்களுக்குக் கட்டாயமாக கற்றுத் தர வேண்டும். மாணவர்கள் ஒரு நாளில் அதிக நேரத்தைச் செலவிடுவது ஆசிரியர்களுடன்தான். எனவே அந்த ஆசிரியருக்கு மாணவரை சரியாகக் கையாளும் திறன் இருப்பது அவசியம். அந்த ஆசிரியருக்கு மாணவர்களின் தனிப்பட்ட சூழல், அந்த வயதிற்கே உரிய பிரச்னைகள், பள்ளி சூழல், சமூகச் சூழல் ஆகியவை பற்றி அறிந்திருக்க வேண்டும். அவர் படித்த காலத்தில் இருந்ததை வைத்துக்கொண்டு இப்போதிருக்கும் மாணவர்களைக் கையாள்வது கொஞ்சமும் உதவாது.

எனவே இக்காலத்து மாணவர்களின் மனநிலை மற்றும் உளவியல் தேவைகள் குறித்த புரிதல் முதலில் வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு‌ முழுநேர உளவியல் நிபுணரை நியமிப்பது குறித்து தற்போது பலரும் பரிசீலிக்கிறார்கள். இது ஒரு சரியான முடிவே. ஆனால் நான் கூறுவது ஒவ்வொரு ஆசிரியருமே ஒரு கவுன்சிலராகச் செயல்படத் தெரிந்திருக்க வேண்டும். அவருக்கும் மாணவருக்குமான உறவு நல்ல முறையில் இருக்க வேண்டும். ஆனால் இன்றைய சூழலில் ஆசிரியர்களுக்குப் பாடம் நடத்துவதில் இருக்கும் கவனம் மாணவர்களைப் புரிந்து கொள்வதில் இருப்பதில்லை. அதற்கென அனைத்து ஆசிரியர்களையும் இப்படிக் கூறிவிட முடியாது, வகுப்பில் நுழைந்ததும் தேனீ கூட்டம் போல் மாணவர்களால் சூழப்படும் ஆசிரியர்கள் இன்றும் இருக்கிறார்கள். மாணவர்களைச் சரியாக புரிந்து கொண்டவர்களே இதில் பெரும்பாலும் இருப்பார்கள். மாணவர்களால் நேசிக்கப்படும் இத்தகைய ஆசிரியர்களை போலவே அனைத்து ஆசிரியர்களும்‌ இருக்க வேண்டும். இவை அனைத்தையும் உறுதி செய்யும் வகையில் ஆசிரியர்களும், கல்வித் துறையும் செயல்பட வேண்டும்.

டெக்னாலஜி - குழந்தை
டெக்னாலஜி - குழந்தை

அடுத்த கடமை பெற்றோருடையது. அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் தரமான நேரத்தைச் செலவிடுதல் அவசியம். அரசுப்பள்ளியில் படிக்கும் பெரும்பாலான மாணவர்களின் பெற்றோர் எளிமையான தொழில் செய்பவர்களாகவே இருப்பார்கள். அவர்கள் தங்களின் குழந்தைகளுக்கு நேரம் ஒதுக்குவது இயலாத காரியமே. ஆனால் அவர்களும் சற்று முயற்சி செய்து குழந்தைகளின் நலனுக்காக நேரத்தை ஒதுக்க வேண்டும். உங்கள் பிள்ளைகளிடம் படிப்பை பற்றி மட்டும் பேசாமல், அவர்கள் அன்றாட வாழ்வில் நடக்கும் மற்ற விஷயங்கள் குறித்து பேசுங்கள். உடன் அமர்ந்து சாப்பிடுவது, அன்பாக பேசுவது ஆகியவை அவர்களின் மனம் திறந்து பேச ஒரு வழியாக அமையும். பிள்ளைகள் தங்கள் வாழ்வின் பிரச்னைகளை உரிமையோடு உங்களிடம் மனம் திறந்து பேசும் சூழலை பெற்றோர்களாகிய நீங்கள்தான் உருவாக்க முடியும், உருவாக்கிட வேண்டும்.

பிரச்னைகளுக்கு அவர்களை மட்டுமே பொறுப்பாக்கி குற்றவாளிகள் ஆக்காமல், அவற்றைச் சரிசெய்யும் வழி குறித்து அறிவுறுத்த வேண்டும். இந்த அணுகுமுறை குழந்தைகளை தீய வழியில் சென்று விடாமல் அவர்களை நல்வழிப்படுத்த உதவும். அதிக செல்லம் கொடுத்து வளர்த்து, சரி சரி என எதற்கெடுத்தாலும் கூறிவிட்டு ஒருகட்டத்தில் இல்லை எனக் கூறி வேண்டிய நிலை வரும்போது அதை குழந்தைகளால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. வாழ்க்கையில் ஏற்படும் தோல்விகளைத் தாங்குவதற்கும் அவர்களை நாம் தயார்ப்படுத்த வேண்டும். குழந்தைகளுக்கு தண்டனை வழங்கி அவர்களின் நடத்தையில் மாற்றத்தைக் கொண்டுவருவது என்பது சந்தேகமே. அந்தக் காலத்தில் ஆசிரியர்கள் அடித்துதான் திருத்தினார்கள்; ஆனால் இன்றோ ஆசிரியர்களின் கைகள் கட்டப்பட்டு விட்டன; அதனால்தான் குழந்தைகள் சுதந்திரமாக இருக்கிறார்கள் என்று நினைப்பதும் சரியில்லை. குச்சி எடுத்து அடித்துத் திருத்துவதற்கு குழந்தைகள் ஒன்றும் அடிமைகள் இல்லை. அவர்கள் மனதைப் புரிந்து அவர்களை நல்வழிப்படுத்துவது எப்படி என்பதே நம் சிந்தனையாக இருக்க வேண்டும்.

குழந்தைகள்
குழந்தைகள்

மேலும் இன்றைய உலகில் குழந்தைகள் மீதான வன்முறைகளும் அதிகரித்து விட்டன. குழந்தை வன்முறையாளர்களும் அதிகம் உருவாகிறார்கள். இது ஒரு ஆபத்தான சூழல். அடுத்த தலைமுறையே ஒரு வன்முறையான சூழலில் தான் வளர்கிறது. குழந்தைகளை வன்முறையாளர்களாக மாற்றி அவர்களை உபயோகப்படுத்துவதற்கு ஒரு கூட்டமே இருக்கிறது. திருடுவது, போதைப்பொருள் கடத்துவது ஏன் கொலை செய்யக்கூட பதினாறு பதினேழு வயது சிறுவர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். மாணவன் ஆசிரியருக்கு எதிராக கத்தியைத் தூக்குவது என்பது ஒரு சாதாரணப் பிரச்னை இல்லை. அவனுக்கு பின்பு இருக்கும் சமூகம், அரசியல் மற்றும் பொருளாதார ரீதியான பிரச்னைகளால்தான் அம்மாணவன் இப்படிச் செயல்படுகிறான். எனவே கூர்நோக்கு பள்ளியில் அடைப்பதால் மட்டுமே அவர்கள் நல்வழிப்படுத்தப்படுவார்கள் என எந்த உத்திரவாதமும் கிடையாது. ஒவ்வொரு குழந்தையையும் நெறிப்படுத்துவது சமூகம், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கைகளில்தான் இருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும்" என்று கூறினார் அவர்.

இதேமாதிரி உங்களுக்குத் தோன்றும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்கள்!

Doubt of common man
Doubt of common man