கர்நாடகா மாநிலம், பெங்களூரில், கஞ்சா, கஞ்சா ஆயில், கோகைன் உட்பட பல போதைப்பொருள்கள் சர்வ சாதாரணமாக விற்பனை செய்யப்படுகின்றன எனச் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வேதனை தெரிவித்துவருகிறார்கள். சிலர் போதைப்பொருள்களை, ‘ஹோம் டெலிவரியும்’ செய்துவருகின்றனராம். இப்படியான நிலையில் நேற்று, 8.5 கோடி ரூபாய் மதிப்புள்ள கோகைன், பிரவுன் சுகர், எம்.டி.எம்.ஏ பவுடர் உட்பட பல வகை போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது, அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கல்லூரி மாணவர்கள், ஐ.டி நிறுவன ஊழியர்களுக்கு நைஜீரியர்கள், போதைப்பொருள்களை விற்பனை செய்துவருவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. பெங்களூரு தெற்கு துணை போலீஸ் கமிஷனர் பி.கிருஷ்ணகாந்த் தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டது.

தனிக்குழுவினர், வி.வி.புரம், ஜெயநகர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ரெய்டு சென்று, நைஜீரியர்களைக் கைதுசெய்து விசாரித்தனர். விசாரணையில், லாரன்ஸ் இஜின்வோக் என்ற பீட்டர், ஜூக் வுனேஜம், சக்வுனிஜிம் தேங்க் காட் என்ற பிரைட், ஹால்சே, பிரேங்க், இம்மானுவேல் நாஜி ஆகிய ஆறு பேரைக் கைதுசெய்தனர்.

விசாரணையில், நைஜீரியாவைச் சேர்ந்த லாரன்ஸ் இஜின்வோக் என்ற பீட்டர், ஜூக் வுனேஜம் ஆகியோரின் விசா, மூன்று ஆண்டுகளுக்கு முன்பே காலாவதியாகியிருப்பதும் கண்டறியப்பட்டது.
போதைப்பொருள் விற்பனையை முழு நேரத் தொழிலாக வைத்திருந்த இவர்கள் ஆறு பேரும், கல்லூரி மாணவர்கள், சாஃப்ட்வேர் இன்ஜினீயர்கள், தனியார் நிறுவன ஊழியர்களைக் குறிவைத்து போதைப்பொருள்களை விற்பனை செய்துவந்திருக்கின்றனர்.
இவர்களிடமிருந்து, 8.5 கோடி ரூபாய் மதிப்புள்ள, 3 கிலோ எம்.டி.எம்.ஏ, 1.15 கிலோ பிரவுன் சுகர், 310 கிராம் கொகைன் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.
‘வேட்டை தொடரும்...’
இது குறித்து நாம், பெங்களூரு தெற்கு துணை போலீஸ் கமிஷனர் பி.கிருஷ்ணகாந்த்தை போனில் தொடர்புகொண்டோம். அவர் நம்மிடம், ‘‘தனிக்குழு அமைத்து, ஆறு நைஜீரியர்களின் தொடர்புகள், மொபைல் எண்களின் அழைப்புகளை டிரேஸ் செய்துவந்தோம். பெரிய அளவில் அவர்களிடம் போதைப்பொருள்கள் வந்ததைக் கண்டறிந்து, ரகசியத் தகவலின் அடிப்படையில் கையும் களவுமாகப் பிடித்திருக்கிறோம்.

இவர்கள் எந்தெந்த நாடுகளிலிருந்து, போதைப்பொருள்கள் கொண்டுவருகிறார்கள், எப்படி விற்பனை செய்கிறார்கள், இவர்களின் ‘அன்டர் கிரவுண்ட் நெட்வொர்க்’, ‘டார்க் வெப்சைட்’ என அனைத்தையும் விசாரித்துவருகிறோம். போதைப்பொருள்கள் தடுப்புப் பிரிவு போலீஸாருடன் இணைந்து, நாடுகள் கடந்த போதைப்பொருள்கள் பரிமாற்றம், விற்பனையைத் தடுத்துவருகிறோம். கடந்த ஆறு மாதங்களில், இவ்வளவு பெரிய அளவில் போதைப்பொருள்கள் பிடித்தது இதுவே முதல் முறை. வேட்டை தொடரும்’’ என்றார் விரிவாக.
போலீஸார் இதேபோல் தொடர்ந்து தீவிர வேட்டை நடத்தினால் மட்டுமே, பெங்களூரில் போதைக் கலாசாரம் ஓரளவுக்காவது ஒழியும்.