டெல்லி துவாரகாவின் ஜேஜே காலனியில் வசிப்பவர் சந்தோஷ் (31). இவர் நேற்று அதிகாலை நேரத்தில் மது அருந்திவிட்டு காரை ஓட்டிவந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் இருந்த ஹெட் கான்ஸ்டபிள் விகாஸ், கான்ஸ்டபிள் சூரத் ஆகியோர் அந்த காரை மடக்கி சோதனையில் ஈடுபட்டிருக்கின்றனர். அப்போது, தான் குடித்திருப்பது தெரிந்தால் காவல்துறை அபராதம் விதிப்பதோடு, வீட்டுக்கும் செல்ல முடியாத நிலை ஏற்படும் என்பதால் காவல்துறையினர் சோதித்துக்கொண்டிருக்கும்போதே காரை வேகமாக எடுத்து, காவலர்கள்மீது மோதிவிட்டுத் தப்பிச் சென்றிருக்கிறார்.

இதில் தலையில் காயமடைந்த ஹெட் கான்ஸ்டபிள் விகாஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும், மற்றொரு காவலர் சூரத்துக்கு சிறிய சிராய்ப்புகள் ஏற்பட்டதால் சிகிச்சை அளிக்கப்பட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் தெரியவந்திருக்கிறது. இது தொடர்பாக துவாரகா காவல்துறை துணை ஆணையர் எம்.ஹர்ஷ வர்தன், ``அதிகாலை 2:15 மணியளவில் மாருதி எர்டிகா காரை குடி போதையில் ஓட்டிச் சென்று, இரண்டு போக்குவரத்துக் காவலர்களின் மீது மோதி விபத்து ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
துவாரகாவின் செக்டார்-1 பகுதியில் இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. உடனடியாக, போலீஸார் காரைத் துரத்திச் சென்று, டிரைவரைக் கைதுசெய்தனர். அவர் மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டபோது, அவரின் ரத்தத்தில் ஆல்கஹால் அளவு அனுமதிக்கப்பட்ட வரம்பைவிட 6 மடங்கு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது.
குடித்துவிட்டு வாகனம் ஓட்டி, விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர்மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 186 (அரசு ஊழியரை அவரின் பொதுப் பணிகளைச் செய்வதில் தடுத்தல்), 353 (அரசு ஊழியரை அவரது கடமையைச் செய்யவிடாமல் தடுக்க குற்றவியல் நடவடிக்கையில் ஈடுபடுதல்) மற்றும் 307 (கொலை முயற்சி) ஆகியவற்றின்கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது" எனத் தெரிவித்திருக்கிறார்.