கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், கருநாகப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சித்திக் (62). கேரளாவிலுள்ள தங்கும் விடுதியில் மேலாளராகப் பணிபுரிந்துவரும் இவர், சொந்த வேலை காரணமாக தேனிக்கு வந்து அங்கிருந்து ராமநாதபுரம், ஏர்வாடிக்குச் செல்லவிருந்தார். தேனி புது பஸ் ஸ்டாண்டுக்கு வந்த அவர், எதிரே இருந்த (தட்டி விலாஸ்) ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு மதியம் 3 மணி அளவில் வெளியே வந்திருக்கிறார். அப்போது வெளியே உடலில் சாட்டையடித்து யாசகம் கேட்கும் சிறுவர்களும், அவர்களின் தாயார்களும் யாசகம் கேட்டிருக்கின்றனர்.

அதற்கு, `யாசகமாகப் பணம் தர இயலாது... வேண்டுமெனில் சாப்பாடு வாங்கித் தருகிறேன்' என சித்திக் கூறியிருக்கிறார். அதற்கு சிறுவர்களும் ஒப்புக்கொண்டனர். அதையடுத்து சிறுவர்களையும், அவர்களின் தாயார்களையும் அதே ஹோட்டலில் அமரவைத்து உணவு சாப்பிட வைத்திருக்கிறார்.
பின்னர் அவர்கள் சாப்பிட்ட உணவுக்கு ஹோட்டலில் பணம் கொடுத்துவிட்டு வெளியே வந்திருக்கிறார். அப்போது மேலும் சில சிறுவர்கள் சூழ்ந்துகொண்டு யாசகம் கேட்க, அவர்களையும் அதே ஹோட்டலில் உணவு சாப்பிட வைத்திருக்கிறார் சித்திக். இந்த நிலையில், இன்னும் சில சிறுவர்கள், பெண்கள் யாசகம் கேட்க, தன்னிடம் பணம் குறைவாக இருக்கிறது எனக் கூறி 100 ரூபாயைக் கொடுத்திருக்கிறார் சித்திக்.
அப்போது ஹோட்டல் ஊழியர்கள், `இது போன்ற நபர்களையெல்லாம் இங்கு கூட்டி வந்து சாப்பிடவைத்தால், வாடிக்கையாளர்களின் வருகை குறையும்' எனக் கடுமையாகப் பேசியிருக்கின்றனர். இதை ஏற்க மறுத்த சித்திக்குக்கும், ஹோட்டல் ஊழியர்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த ஹோட்டல் ஊழியர்கள் சித்திக்கை அடித்து, உதைத்திருக்கின்றனர். இதில் பலத்த காயமடைந்த சித்திக், தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.

இது குறித்து அவர் அளித்த புகாரின்பேரில், ஹோட்டல் ஊழியரான கோவிந்தராஜ்மீது தேனி நகர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர்.
யாசகம் கேட்டவர்களுக்கு உணவு வாங்கிக்கொடுத்த முதியவர் தாக்கப்பட்ட சம்பவம், தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.