சென்னை வண்ணாரப்பேட்டை காவல் மாவட்டத்தில் வசிக்கும் 6 வயது பெண் குழந்தைக்குப் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 2015-ம் ஆண்டு புகாரளிக்கப்பட்டது. அதன்பேரில் போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்தனர். விசாரணையில் பாலியல் தொல்லை கொடுத்தது 61 வயதான முதியவர் எனத் தெரியவந்தது. உடனடியாக அவரைக் கைதுசெய்த போலீஸார் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திலுள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவந்தது.

வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல்செய்து, சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும், வழக்கு விசாரணையையும் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்த வழக்கில் விசாரணை நிறைவடைந்து முதியவர்மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டது. அதனால் முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 25,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் மேலும் மூன்று மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டிருக்கிறார். இந்த வழக்கில் குற்றவாளிக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்த வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸாரை சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பாராட்டினார்.