மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஜெயில்... மதில்... திகில்! - 44 - பூட்டாத பூட்டுகள்!

ஜெயில்... மதில்... திகில்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெயில்... மதில்... திகில்

சிறைக்குள் அடைக்கப்பட்டிருக்கும் தாதாக்கள் ஆசுவாசமாகக் குளித்துவிட்டு மெதுவாகத்தான் லாக்கப்புக்கு வருவார்கள்.

ஒரு சனிக்கிழமை... மாலை 5 மணி. என்னை அழைத்த ஜெயிலர், ‘‘நான் ஊருக்குச் செல்ல வேண்டும். லாக்கப் பார்த்துக்கொள்கிறீர்களா?’’ என்று கேட்டார். நான் சம்மதித்தேன். அத்துடன் அவர் விட்டிருந்தால் பரவாயில்லை... என்னை உற்றுப் பார்த்து, ‘‘என்ன நடந்தாலும் அமைதியாக இருக்க வேண்டும்’’ என்றார்.

எனக்கு லேசாக ஜெர்க் அடித்தது. கடவுளை வேண்டிக்கொண்டு லாக்கப் கணக்கு எடுக்கச் சென்றேன். மாலை 6 மணிக்குப் பூட்டப்பட வேண்டிய சிறைக் கதவுகள் இரவு 7:30 மணியாகியும் பூட்டப்படவில்லை.

சிறைக்குள் அடைக்கப்பட்டிருக்கும் தாதாக்கள் ஆசுவாசமாகக் குளித்துவிட்டு மெதுவாகத்தான் லாக்கப்புக்கு வருவார்கள். காவலர்கள் அவர்களுக்காகக் காத்திருந்து லாக்கப் செய்ய வேண்டும். அன்றைய தினம் பல்வேறு தொகுதிகள் பூட்டப்பட்ட பிறகும், விசாரணைக் கைதிகள் தொகுதி பூட்டப்படவில்லை. ‘அந்தத் தொகுதியின் சாவியைக் கைதிகள் சிலர் ஒளித்துவைத்துவிட்டனர்’ என்று தகவல் வந்தது. அந்தத் தொகுதியைப் பூட்டினால்தான் காவலர்கள் வெளியே போக முடியும். காவலர்களை அழைத்துக்கொண்டு விசாரணைத் தொகுதிக்குச் சென்றேன். சாவியைக் கண்டுபிடிக்க உத்தரவிட்டேன்.

அங்கு சுமார் 150 கைதிகள் இருந்தனர். அவர்கள் காவலர்களைச் சோதனையிட விடாமல் தடுத்தனர். தரக்குறைவாகப் பேசி, தாக்கவும் முயன்றனர். அனைவரும் பொறுமை காத்தோம். நாங்கள் பயந்துவிட்டதாகக் கருதிய கைதிகள் பிறகு, ‘‘சாவி கழிவறையில் இருக்கிறது. போய் எடுத்துக்கொள்ளுங்கள்’’ என்று எகத்தாளத்துடன் சொன்னார்கள். சாவியை எடுக்க, காவலர் ஒருவர் குனிந்தார். பின்னாலிருந்த ஒரு கைதி அவரை உதைக்க... காவலர் கழிவறைக்குள் குப்புற அடித்து விழுந்தார். ஆத்திரத்தில் அந்தக் காவலர் தனது பெல்ட்டை உருவி, எட்டி உதைத்த கைதியை இரண்டு அடி அடித்துவிட்டார். உடனே மற்ற கைதிகள் அந்தக் காவலரை சூழ்ந்து அடிக்கத் தொடங்கினர்.

ஜெயில்... மதில்... திகில்! - 44 - பூட்டாத பூட்டுகள்!

இருதரப்பிலும் கடும் மோதல். அடிதடியைக் கட்டுப்படுத்து வதற்குள் எனக்கு போதும் போதுமென்றாகிவிட்டது. சில காவலர்களுக்கும் கைதிகளுக்கும் லேசான காயம். ஒருவழியாக தொகுதியைப் பூட்டிவிட்டு வந்தோம். நானும் டூட்டி முடிந்து வீட்டுக்குப் போய்விட்டேன். ஆனால், தொகுதிக்குள் இருந்த சட்டி, பானைகள், விளக்குகளை விசாரணைக் கைதிகள் அடித்து நொறுக்கியிருக்கிறார்கள்.

சிலர் உடைந்த கண்ணாடித் துண்டுகளைக்கொண்டு உடலில் கிழித்துக்கொண்டு, ‘வெளி மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும்’ என்று கூச்சலிட்டுள்ளனர். அந்தக் கூச்சலைக் கேட்டதும், மற்ற தொகுதிகளில் இருந்த கைதிகளும் வெறிக் கூச்சலிட்டனர். வீட்டுக்குச் சென்ற என்னை கூடுதல் கண்காணிப்பாளர் மீண்டும் அழைத்தார்.

“கூச்சலிட்ட கைதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தலாம்” என்றார் கூடுதல் கண்காணிப்பாளர். ‘‘வேண்டாம். விசாரணைக் கைதிகள் தொகுதியை மட்டும் திறந்து மருத்துவ உதவி தேவைப்படுவோருக்கு சிகிச்சை அளிக்கலாம்’’ என்றேன். சிறை மருத்துவர் வரவழைக்கப்பட்டார். தக்க பாதுகாப்புடன் தொகுதிக்குள் சென்று, சிலருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. யாருக்கும் பெரிய காயம் இல்லை. விடிந்தது. ‘‘தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துவிட்டு தொகுதிகளைத் திறக்கலாம்’’ என்றேன். ஆனால், கூடுதல் கண்காணிப்பாளர் என் ஆலோசனையைக் கேட்காமல் திறந்துவிடச் சொல்லிவிட்டார்.

திறந்துவிடப்பட்டதும் மொத்த கைதிகளும் விசாரணைத் தொகுதிக்கு திபுதிபுவென ஓடினர். என்னை எப்படியாவது அந்தச் சிறையிலிருந்து மாற்றிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் பிரச்னை செய்ய ஆரம்பித்தார்கள். விசாரணைத் தொகுதியில் இருந்தவர்களைத் தூக்கிக்கொண்டு வந்து சிறை உள்வாயிலின் முன்புறம் போட்டனர். ‘இவர்கள் அனைவரையும் வெளி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்ப வேண்டும்’ என்று கோஷம் போட்டனர். சிறை கண்காணிப்பாளருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரும் வந்தார். மாவட்ட மருத்துவ அலுவலருக்கு போன் பறந்தது. துணிச்சல் மிக்க பெண்மணியான அவர் மருத்துவக்குழுவுடன் சிறைக்கு வந்தார்.

விசாரணை சிறைவாசிகள் அனைவரையும் பரிசோதித்த பிறகு அந்தப் பெண்மணி, ‘‘150 பேரில் மூவரைத் தவிர யாருக்கும் காயம் இல்லை. நீங்கள் அனைவரும் நடிக்கிறீர்கள்’’ என்று உண்மையைப் போட்டு உடைத்தார். சிறு காயம்பட்ட மூவருக்கும் சிறை மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. கைதிகளின் தலைவர்களான தாதாக்களின் திட்டம் தவிடுபொடியானது.

ஆனாலும், கைதிகள் விடுவதாக இல்லை. என் மீது நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும் என்று நெருக்கடி கொடுத்தார்கள். காவலர்கள் சிலர் கூடுதல் கண்காணிப்பாளரால் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். என்மீது நடவடிக்கை எடுக்க, கண்காணிப்பாளருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. அன்றைய தினம் இரவுக்குள் ஏதேனும் முடிவு எடுத்தாக வேண்டும். யோசித்தோம்.

ஜெயில்... மதில்... திகில்! - 44 - பூட்டாத பூட்டுகள்!

‘‘சிறையிலுள்ள அனைத்துக் கைதிகளும் கெட்டவர்கள் கிடையாது. தாதாக்களுக்கு பயந்து அவர்கள் இப்படி நடந்துகொள்கிறார்கள்” என்று கண்காணிப்பாளரிடம் கூறினேன். தாதாக்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டது. அவர்களை அங்கிருந்து பிரிக்க வேண்டும். உடனடியாக அரசின் கவனத்துக்கும் இந்த அராஜகங்கள் குறித்துத் தெரிவிக்கப்பட்டது. மேலிடத்திலிருந்து பச்சை சிக்னல் கிடைத்தது. கைதிகளுக்குத் தலைவர்களாக விளங்கிய தாதாக்கள் 10 பேரை உடனடியாக வேறு சிறைகளுக்கு மாற்ற அனுமதி பெறப்பட்டது.

இந்த ஆபரேஷனுக்கு ‘பூட்டாத பூட்டுகள்’ என்று பெயர் சூட்டினோம். சுமார் 100 காவலர்கள் தயார் செய்யப்பட்டனர். ஹெல்மெட்டும் லத்தியும் ஒவ்வொரு காவலருக்கும் கொடுக்கப்பட்டது. இருந்தாலும் பெரிய அளவு போராட்டத்தை நான் விரும்பவில்லை. உயிர்ச் சேதம் ஏற்பட்டுவிடக் கூடாது; நிலைமையை புத்திசாலித்தனமாகச் சமாளிக்க வேண்டும் என்று திட்டமிட்டேன்.

இரவு லாக்கப் செய்யப்பட்டது. தாதாக்கள் பத்து பேரும் வெவ்வேறு தொகுதிகளில் இருந்தனர். காவலர்கள் பூனை நடை நடந்தார்கள். சத்தமில்லாமல் குறைந்த பலப் பிரயோகம் செய்து பத்து பேரையும் அலேக்காகத் தூக்கினோம். அவர்கள் அன்றிரவே தயாராக வைக்கப்பட்டிருந்த வாகனங்களில் ஏற்றப்பட்டு, பல்வேறு மாவட்டச் சிறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். ஒரு சில மணி நேரங்களில் ‘தாதாக்கள்’ ஆபரேஷன் முடிந்தது. அடுத்து, தாதாக்களுக்கு அடுத்த நிலையில் இருக்கும் ரௌடிப் பட்டியலில் இருந்த 75 பேரையும் இதே பாணியில் சத்தமில்லாமல் தூக்கினோம். அவர்கள் அனைவரும் தனித்தனி அறைகளில் அடைக்கப்பட்டனர்.

அவர்கள் அனைவரிடமும் சிறை விதிகள் எடுத்துச் சொல்லப்பட்டு, அதன்படி நடத்தப்பட்டார்கள். பொழுது விடிந்தது. காலை 6 மணிக்கு சிறை திறக்கப்பட்டது. ரெளடி கைதிகள் அவர்களின் படுக்கைகள், தட்டுகளை எடுத்துக்கொண்டு வெளியே வர வேண்டும். நான்கு நான்கு பேராக செல்லிலிருந்து வெளியேற்றப்பட்டு அவர்கள் அமரவைக்கப் பட்டார்கள். நான்கு நான்கு பேராகக் கழிவறைக்கு அனுப்பப் பட்டார்கள். அவ்வாறே குளியலறைக்கும் அனுப்பப் பட்டார்கள். ஒவ்வொருவராக வரிசையில் சென்று கஞ்சி வாங்கிக் குடித்துவிட்டு, தட்டுகளைக் கழுவி சுத்தம் செய்துவிட்டு வந்தார்கள். பிறகு அனைவரும் பூட்டிவைக்கப் பட்டார்கள். மீண்டும் மதியம், மாலை இதே பிராக்டிஸ் தொடர்ந்தது. இப்படி சிறை விதிகளின்படி நடத்தப்பட்டதே அவர்களுக்கு பெரிய தண்டனையாகத் தெரிந்தது. ரெளடிகளின் பிம்பம் அழிந்தது.

இதைப் பார்த்து மொத்த கைதிகளும் விதிமுறைகளுக்குக் கட்டுப்படத் தொடங்கி னார்கள். சிறைக் குற்றங்கள் என்னென்ன என்று அவர்களுக்குப் படித்துக் காண்பிக்கப்பட்டது. தண்டனைகளும் விளக்கப்பட்டன. ஓரிரு நாள்களில் மொத்த கைதிகளும் ஒழுங்குமுறைக்கு வந்துவிட்டார்கள். “நாங்கள் தெரியாமல் தவறு செய்துவிட்டோம். இனி சிறை விதிகளை மதித்து நடப்போம்’’ என்றார்கள். இயல்புநிலைக்குத் திரும்பியது வேலூர் சிறை!

(கதவுகள் திறக்கும்)