அலசல்
Published:Updated:

காவல்துறை அதிகாரிகள் முதல் மாஃபா பாண்டியராஜன் வரை... - சவால்விடும் ஃபேஸ்புக் மோசடிக் கும்பல்!

ஃபேஸ்புக் மோசடி
பிரீமியம் ஸ்டோரி
News
ஃபேஸ்புக் மோசடி

மாஃபா அண்ணனின் போட்டோவை வைத்து உதவி கேட்பதைப்போல பணத்தை மோசடி செய்துவந்திருக்கிறார்கள்.

அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சிரித்தபடி இருக்கும் போட்டோவுடன் ‘ஹாய்’ என்ற மெசேஜ் அவரது நட்பு வட்டாரத்திலிருப்பவர்களின் ஃபேஸ்புக் மெசஞ்சருக்கு வந்தால் ஆச்சர்யமாகத்தானே இருக்கும்! ‘அட... ஒரு வி.ஐ.பி நம்மிடம் பேசுகிறாரே...’ என்று பதில் சொல்ல, நலம் விசாரிப்புகள் தொடரும். அடுத்தடுத்த தகவல் பரிமாற்றங்களில், ‘என் நண்பருக்கு மெடிக்கல் எமர்ஜென்ஸிக்காக 10,000 ரூபாய் தேவைப்படுகிறது. நான் இப்போது அவருக்கு அனுப்ப முடியவில்லை. நீங்கள் இந்த நம்பருக்கு கூகுள் பே பண்ண முடியுமா? நான் அப்புறமாக உங்கள் வங்கிக் கணக்குக்கு டிரான்ஸ்ஃபர் செய்கிறேன்’ என்று வரும் தகவலை நம்பி, பணத்தை அனுப்பினால் என்னவாகும்? வேறென்ன `ஸ்வாஹா’தான்!

மாஃபா பாண்டியராஜன் மட்டுமல்ல... அவரின் மனைவி லதா பாண்டியராஜன், சில கலெக்டர்கள், காவல்துறை அதிகாரிகள், இன்னும் சில வி.வி.ஐ.பி-க்களின் பெயர்கள் மற்றும் போட்டோக்களைப் பயன்படுத்தி இப்படியான பண மோசடிகள் நடந்துவருவதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் பிரிவு போலீஸாருக்கு புகார்கள் குவியத் தொடங்கியிருக்கின்றன. ஃபேஸ்புக்கின் சூட்சுமங்கள் பெரிதாகத் தெரியாத, கொஞ்சம் வசதி படைத்த ரிட்டயர்டு ஆசாமிகள்தான் மோசடிக் கும்பலின் இலக்கு.

மாஃபா பாண்டியராஜன்
மாஃபா பாண்டியராஜன்

என்னதான் நடந்தது? மாஃபா-வின் நேர்முக உதவியாளர் ஞானத்திடம் பேசினோம். ``கருப்பசாமி பாண்டியராஜன் என்ற பெயரில்தான் அந்த ஃபேஸ்புக் அக்கவுன்ட் தொடங்கப்பட்டிருக்கிறது. அதில் மாஃபா அண்ணனின் போட்டோவை வைத்து உதவி கேட்பதைப்போல பணத்தை மோசடி செய்துவந்திருக்கிறார்கள். இந்தத் தகவல் எங்களுக்குத் தெரிந்ததும் அண்ணா நகர் சைபர் க்ரைம் போலீஸாருக்கும், மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீஸாருக்கும் ஆன்லைன் மூலம் புகாரளித்தோம். அதையடுத்து, உடனடியாக அந்த போலி ஃபேஸ்புக் அக்கவுன்ட் முடக்கம் செய்யப்பட்டது. பாண்டியராஜனின் மனைவியின் பெயரிலும் போலி ஃபேஸ்புக் அக்கவுன்ட் தொடங்கி மோசடி நடந்திருக்கிறது. அதையும் போலீஸில் சொல்லி முடக்கியிருக்கிறோம்” என்றார்.

காவல்துறை உயரதிகாரி ஒருவரின் பெயரில் தொடங்கப்பட்ட போலி ஃபேஸ்புக் அக்கவுன்ட் முடக்கப்பட்ட பிறகும் அவரது படத்தைவைத்து புதுப்புது பெயர்களிலிருந்து போலிக் கணக்குகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. இதுகுறித்து அவரிடம் பேசியபோது, ``என் பெயரில் தொடங்கப்பட்ட போலி ஃபேஸ்புக் ஐடி குறித்த தகவல் கிடைத்ததும் அதை முடக்கம் செய்தோம். ஆனால், அதன் பிறகும் எனக்குத் தெரிந்தவர்களுக்கு என் பெயரிலேயே வேறொரு புதிய போலி ஃபேஸ்புக் ஐ.டி-யிலிருந்து நட்பு அழைப்பு அனுப்பப்பட்டுவருகிறது. அதை நான்தான் அனுப்புகிறேன் என நம்பி ஓகே என்று கொடுத்த சில தினங்களிலேயே பண உதவி கேட்டு மெசேஜ்கள் அனுப்பப்படுகின்றன. அதனால், ‘என் பெயரைப் பயன்படுத்தி போலி ஃபேஸ்புக் அக்கவுன்ட்டிலிருந்து யாராவது பணம் கேட்டால் உதவி செய்ய வேண்டாம்’ என்று என் நண்பர்களிடமும் சொல்லிவருகிறேன். ஜூனியர் விகடன் போன்ற பத்திரிகைகளில் இது குறித்த செய்திகள் வருவதன் மூலம், ‘யாரும் சமூக வலைதளத்தில் பணம் கேட்டால் அனுப்பக் கூடாது’ என்ற விழிப்புணர்வு வளரும். பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் யாரேனும் இருந்தால், `ஐயாயிரம்தானே...’ என்று எண்ணாமல், சைபர் க்ரைமில் விவரத்தைக் கூறினால் அந்த அக்கவுன்ட்டை முடக்கம் செய்து மேலும் பலர் ஏமாறுவதைத் தடுக்க முடியும்” என்றார்.

காவல்துறை அதிகாரிகள் முதல் மாஃபா பாண்டியராஜன் வரை... - சவால்விடும் ஃபேஸ்புக் மோசடிக் கும்பல்!

சைபர் க்ரைம் பிரிவின் போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் பேசினோம்... ``கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் ஆன்லைன் வழி மோசடிகள் அதிகரித்திருக்கின்றன. ஃபேஸ்புக்கில் ஆக்டிவ்வாக இருப்பவர்களைக் குறிவைத்து இந்த மோசடிக் கும்பல் கைவரிசையைக் காட்டிவருகிறது. சில மாதங்களுக்கு முன்பு காவல்துறை அதிகாரிகளின் பெயர்களைப் பயன்படுத்தி பண மோசடி நடந்துவந்தது. தற்போது ஃபேஸ்புக்கில் ஆக்டிவ்வாக இருக்கும் அரசியல் கட்சியினர், ஆட்சித்தலைவர்கள் பெயரில் மோசடி நடக்கத் தொடங்கியிருக்கிறது.

இந்தக் கும்பல் அதிகபட்சமாக 10,000 ரூபாய் வரைதான் பணத்தை ஏமாற்றுகிறது. வெளியில் சொன்னால் அசிங்கம், போனால் போகிறது குறைந்த தொகைதானே என்று பல்வேறு காரணங்களால் யாரும் புகார் கொடுக்காமல் இருப்பது குற்றவாளிகளுக்குச் சாதகமாகப் போய்விடுகிறது. தோராயமாகக் கணக்கு போட்டாலும் ஒரே வாரத்தில் இவர்கள் பல லட்சங்களை ஏமாற்றிப் பணம் பறிக்கிறார்கள். எங்களிடம் புகார் வரும்போது, அவர்களின் போலி ஃபேஸ்புக் கணக்கும், ஜி பே எண்ணின் சிம் கார்டும் டி ஆக்டிவேட் ஆகிவிடுகின்றன. விசாரித்தால், போலி ஆவணங்கள் மூலம் அவை தொடங்கப்பட்டது தெரியவருகிறது. ஐ.பி முகவரியைவைத்து செக் செய்தபோது, பெரும்பாலும் வட மாநிலங்களிலிருந்து இந்த மோசடி நடப்பது தெரிந்தது. அந்த ஐ.பி முகவரியைவைத்து மோசடிக் கும்பலை நெருங்கிவருகிறோம்” என்றார்.

நெருங்கவே முடியாது என்றெண்ணி குற்றச் செயல்கள் செய்துவருபவர்கள் என்றேனும் ஒருநாள் மாட்டிக்கொள்வார்கள் என்பது கடந்த காலம் சொல்லும் செய்தி.