ஹரியானா மாநிலம், ஃபரிதாபாத்திலுள்ள பல்வால் பகுதியைச் சேர்ந்தவர் பகத் சிங் (37). இவருக்கும், இவரின் முதல் மனைவிக்கும் இரண்டு குழந்தைகள் இருந்தனர். இந்த நிலையில், முதல் மனைவி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால், இரண்டாவதாக ஆஷா என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். குழந்தைகளை ஆஷா சரியாகக் கவனித்துக்கொள்ளாததால், ஆஷா - பகத் சிங்கிக்கிடையே பிரச்னைகள் வரத் தொடங்கியிருக்கின்றன. இதனால் வெறுத்துப்போன பகத் சிங், இரண்டு குழந்தைகளையும் கொலைசெய்வதற்குத் திட்டமிட்டிருக்கிறார்.

அதன்படி ஊரில் இருக்கும் 15 அடி ஆழமுள்ள கிணற்றில் குழந்தைகளுடன் குதித்திருக்கிறார். மேலும், இரண்டு குழந்தைகளையும் கால்களுக்கிடையில் அழுத்தி மூழ்கடித்து கொலைசெய்ய முயன்றிருக்கிறார். அப்போது யதார்த்தமாக அந்தப் பகுதிக்கு வந்த தீரேந்திரா, நசீம் என்ற இரண்டு ஆண்கள், உடனே கிணற்றில் குதித்து, பகத் சிங்கிடமிருந்து குழந்தைகளை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றிருக்கிறார்கள்.
மருத்துவமனையில் குழந்தைகளைப் பரிசோதித்த மருத்துவர்கள் குழு, இரண்டு குழந்தைகளும் மூச்சுத் திணறி இறந்துவிட்டதாகத் தெரிவித்திருக்கிறது. அதைத் தொடர்ந்து, காவல் நிலையத்துக்கும் தகவலளிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை பகத் சிங்கைக் கைதுசெய்திருக்கிறது.

இது குறித்துப் பேசிய காவல்துறை, "குற்றம்சாட்டப்பட்டிருக்கும் பகத் சிங்கின் இரண்டாவது மனைவிக்கு, தன்னுடைய முதல் மனைவியின் குழந்தைகளைப் பிடிக்காத காரணத்தினால், அவர்களைக் கொலைசெய்தது குறித்து வாக்குமூலம் அளித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து. பகத் சிங் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். குழந்தைகளைக் கொலைசெய்ததில் குற்றவாளியின் இரண்டாவது மனைவிக்கும் தொடர்பிருக்கிறதா... என்பது குறித்து விசாரணை நடத்திவருகிறோம்" எனத் தெரிவித்திருக்கிறார்.