நெல்லை மாவட்டத்தில் வயது முதிர்ந்த தந்தையிடம் மகன் ஒருவர், ஐந்து ஏக்கர் நிலத்தை ஏமாற்றி எழுதி வாங்கியதையடுத்து, பாதிக்கப்பட்ட தந்தை நிலத்தை மீட்டுத் தருமாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அரை நிர்வாணமாக வந்த சம்பவம் அந்தப் பகுதியில் பேசுபொருளாகியிருக்கிறது.
நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகேயுள்ள கல்மாணிக்கபுரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த முதியவர், மாடசாமி. 72 வயது நிரம்பிய அவருக்கு நான்கு மகள்கள், இரு மகன்கள் இருக்கின்றனர். அனைவருக்கும் மாடசாமி திருமணம் செய்துவைத்து தனது கடமையைச் சரிவரச் செய்திருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு மாடசாமியின் மனைவி உயிரிழந்துவிட்டார்.

மனைவி இறந்த பின்னர் முதுமைக்காலத்தைப் பிள்ளைகள் வீட்டில் கழித்த மாடசாமியை அவருடைய இளைய மகன் வேல்பாண்டி என்பவர் தனது வீட்டில் தங்குமாறு விரும்பிக் கேட்டிருக்கிறார். மகனின் பாசத்துக்கு அடிமையான மாடசாமி, இளைய மகன் வீட்டில் சில மாதங்கள் தொடர்ச்சியாகத் தங்கியிருந்திருக்கிறார். அப்போது மாடசாமியிடமிருந்து தனது பெயருக்கு ஐந்து சென்ட் நிலத்தை மட்டும் எழுதிக் கொடுக்குமாறு இளைய மகன் கேட்டிருக்கிறார்.
அதன்படி மகனுக்கு ஐந்து சென்ட் நிலத்தை எழுதிக் கொடுக்கச் சென்றபோது அவருக்கே தெரியாமல் ஐந்து ஏக்கர் நிலத்தையும் வேல்பாண்டி தன் பெயருக்கு மாற்றிக்கொண்டதாகத் தெரிகிறது. தந்தை மாடசாமி வசமிருந்த 5 ஏக்கர் நிலமும் தன் பெயருக்கு வந்ததும், வேல்பாண்டி நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அதனால் அதிருப்தியடைந்த மாடசாமி, மகள்கள், மூத்த மகனின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். ஆனால், நிலத்தை வேல்பாண்டி பெயருக்கு எழுதிக் கொடுத்த ஆத்திரத்தில் பிள்ளைகள் இருந்ததால், ஒருவரும் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்த நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்ட மாடசாமி, அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றிருக்கிறார். அவரிடமிருந்து ஏமாற்றி சொத்தை எழுதி வாங்கிய வேல்பாண்டி, அவரைக் கண்டுகொள்ளவில்லை எனத் தெரிகிறது. அதனால் தற்போது வசிக்க இடமும், உடுத்த உடையும் இல்லாமல் தவித்து வருகிறார். தன்னை ஏமாற்றி நிலத்தை எழுதி வாங்கிக்கொண்ட இளையமகன் வேல்பாண்டி மீது நடவடிக்கை எடுத்து, நிலத்தைத் திரும்பப் பெற்றுக்கொடுக்க வலியுறுத்தி இன்று ஆட்சியர் அலுவலகத்துக்கு மாடசாமி வந்தார்.
உடுப்பதற்கு உடை இல்லாமல் இடுப்பில் துண்டு மட்டும் உடுத்திய நிலையில் அரை நிர்வாணமாக வந்த அவரை, மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் இருந்த போலீஸார் தடுத்து நிறுத்தினார்கள். அப்போது தனது நிலை குறித்து அவர் கண்ணீர் மல்கப் பேசியதைக் கேட்டு போலீஸாரும் வருத்தப்பட்டனர். விவசாயியான தான் சொந்தமாக உழைத்து பிள்ளைகளுக்குத் திருமணம் செய்துவைத்ததுடன், சுயமாகச் சம்பாதித்த ஐந்து ஏக்கர் நிலத்தையும் மகன் வேல்பாண்டி ஏமாற்றி வாங்கிக்கொண்டதாக மாடசாமி வருத்தப்பட்டார்.

அவருக்கு ஆறுதல் தெரிவித்த போலீஸார், மாடசாமி உடுத்துவதற்குப் புதிய உடையைக் கொடுத்தனர். பின்னர் அவரை அழைத்துக்கொண்டு ஆட்சியரைச் சந்திக்க வைத்தனர். தனக்குத் தெரியாமலேயே மகன் திருட்டுத்தனமாக எழுதி வாங்கிய ஐந்து ஏக்கர் நிலத்துக்கான பத்திரத்தை ரத்துசெய்ய வேண்டும் என முதியவர் மாடசாமி, ஆட்சியரிடம் மனு அளித்தார். இந்தச் சம்பவத்தால் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.