மது, போதைப் பழக்கம் பல குடும்பங்களின் சீரழிவுக்குக் காரணமாக இருக்கிறது. சிலர் காலையிலேயே மது அருந்த ஆரம்பித்துவிடுவார்கள். மகாராஷ்டிரா மாநிலம், ஜல்னா மாவட்டத்திலுள்ள அம்பாட் தாலுகாவில் வசித்துவந்த 35 வயது நபர் மது, கஞ்சாவுக்கு அடிமையாகியிருந்தார். தினமும் இவை இரண்டும் இல்லாமல் அவரால் இருக்க முடியாது. மது, கஞ்சா வாங்குவதற்குப் பணம் கேட்டு வீட்டில் இருப்பவர்களுடன் அடிக்கடி சண்டை போடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். சம்பவத்தன்று தோட்டத்தில் அந்த நபரின் தந்தை, சகோதரர்கள் ஆகியோர் விவசாய வேலை செய்துகொண்டிருந்தனர்.
அங்கு வந்த 35 வயது நபர் வேலை செய்துகொண்டிருந்தவர்களுடன் தகராறு செய்தார். இதனால் கோபத்தில் அந்த நபரின் தந்தை, சகோதரர்கள் சேர்ந்து 35 வயது நபரைக் கடுமையாக அடித்து உதைத்தனர். இதில் படுகாயமடைந்த அந்த நபர் மயங்கி விழுந்துவிட்டார்.
மறுநாள் அவரை அப்படியே போட்டுவிட்டனர். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவில்லை. அடுத்த நாள் அவர் இறந்துவிட்டதாகக் கருதினர். வெளியில் தெரிந்தால் போலீஸார் கைதுசெய்துவிடுவார்கள் என்று பயந்து 35 வயது நபரின் உடலை யாருக்கும் தெரியாமல் தோட்டத்தில் எரித்துவிட்டனர்.
இது குறித்து உள்ளூர்க்காரர்கள் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, இந்தச் சம்பவம் தொடர்பாக கொலை, சாட்சியை அழித்தது போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். நாட்டில் மது, போதைப் பழக்கத்தால் ஒவ்வோர் ஆண்டும் 10,000 பேர் வரை தற்கொலை செய்துவருகின்றனர். இதில் மகாராஷ்டிரா முதலிடத்தில் இருக்கிறது. மகாராஷ்டிராவில் கிராமங்களில் அதிக அளவில் கள்ளச்சாராயம் சர்வ சாதாரணமாக விற்பனை செய்யப்படுகிறது எனக் கூறப்படுகிறது.