அரசியல்
அலசல்
Published:Updated:

பெண் கொலை... தீவைப்பு சம்பவங்கள்... திணறும் காவல்துறை!

தீவைப்பு சம்பவங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
தீவைப்பு சம்பவங்கள்

நித்யா கொலையில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். வடமாநிலத் தொழிலாளர்கள் அந்தக் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டிருந்தால், அவர்களைக் காவல்துறை கைதுசெய்ய வேண்டும்.

வடமாநிலத் தொழிலாளர்கள்மீது தீவைக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவர ஆரம்பித்திருக்கின்றன!

அண்மையில் நாமக்கல் மாவட்டம், சரளைக்காடு பகுதியிலுள்ள ‘எம்.ஜி.ஆர் வெல்லம் தயாரிக்கும் ஆலை’யில், நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த நான்கு வடமாநிலத் தொழிலாளர்கள் மீது, மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றித் தீவைத்தனர். இதில் தீக்காயமடைந்த வடமாநிலத் தொழிலாளர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார்.

தீவைப்பு சம்பவங்கள்
தீவைப்பு சம்பவங்கள்

இது குறித்து விசாரிப்பதற்காக நாம் சரளைக்காடு பகுதிக்கு நேரில் சென்றபோது, பலத்த போலீஸ் காவல் போடப்பட்டிருந்தது. நடந்த சம்பவங்கள் குறித்து நம்மிடம் பேசிய பகுதி மக்கள், ‘‘கடந்த மார்ச் 11-ம் தேதி, கரப்பாளையத்தைச் சேர்ந்த திருமணமான இளம்பெண் நித்யா, அருகிலுள்ள வயல்வெளியில் ஆடு மேய்க்கச் சென்றபோது, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கை விசாரித்த ஜேடர்பாளையம் காவல் நிலைய போலீஸார், 17 வயது சிறுவன் ஒருவனைக் கைது செய்தனர். அப்போதே, ‘அருகிலுள்ள வெல்லம் தயாரிக்கும் ஆலையில் பணிபுரியும் வடமாநிலத் தொழிலாளர்கள் இருவருக்கு இந்தக் கொலையில் தொடர்பிருக்கிறது’ என்று கொலைசெய்யப்பட்ட பெண்ணின் உறவினர்கள் குற்றம்சாட்டினர். இந்த விவகாரத்தை, சிலர் சமூக வலைதளங்களிலும் பரப்பினர். இதைத் தொடர்ந்தே வடமாநிலத் தொழிலாளர்கள் பணிபுரியும் வெல்லம் தயாரிக்கும் ஆலைகள் மற்றும் தொழிலாளர்கள் தங்கியிருந்த குடிசைகளை மர்ம நபர்கள் சிலர் தீவைத்துக் கொளுத்தும் சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்தேறுகின்றன. இந்த வரிசையில், சரளைக்காடு சம்பவத்தில் உயிரிழப்பே ஏற்பட்டிருக்கிறது’’ என்றனர் கவலையோடு.

தீவைப்பு சம்பவங்கள்
தீவைப்பு சம்பவங்கள்

தீ எரிப்பு சம்பவங்களில் சம்பந்தப்பட்ட மர்ம நபர்கள் குறித்துப் பேசுகிற விவரப்புள்ளிகள் சிலர், ‘‘இங்கிருக்கும் குறிப்பிட்ட சமூகத்திலுள்ள ஒரு பிரிவினர்தான் வெல்லம் தயாரிக்கும் ஆலைகளை நடத்திவருகின்றனர். இவர்கள் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்ற கோபத்தில்தான், கொலை செய்யப்பட்ட பெண்ணின் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இப்படித் தொடர் தீவைப்பு சம்பவங்களை நடத்திவருகிறார்கள்.

முதலில், சரளைமேடு பகுதியிலுள்ள சக்திவேலுக்குச் சொந்தமான வெல்லம் தயாரிக்கும் ஆலையில் பணிபுரியும் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருக்கும் குடிசைக்குத் தீவைத்தனர். அடுத்து புதுப்பாளையத்தைச் சேர்ந்த சதாசிவம் என்பவருக்குச் சொந்தமான ஆலையில் பணிபுரியும் வடமாநிலத் தொழிலாளர்களின் குடிசை, வழக்கறிஞர் துரைசாமியின் வெல்ல ஆலை குடிசை போன்றவற்றுக்கும் மர்மநபர்கள் தீவைத்தனர். இந்தச் சம்பவங்களில் குடிசைகளும், மூன்று டிராக்டர்களும் எரிந்து நாசமாகியிருக்கின்றன. குறிப்பிட்ட சமுதாயப் பிரிவைச் சேர்ந்தவர் என்பதாலேயே நல்லூர் சாலையிலிருந்த ஒருவரின் கூரை வீடும், மர்ம நபர்களால் தீக்கிரையாக்கப் பட்டது.

தீவைப்பு சம்பவங்கள்
தீவைப்பு சம்பவங்கள்

அப்பாவித் தொழிலாளர்கள் மீது தீவைப்பதால், நியாயம் கிடைத்துவிடுமா... இந்த விவகாரத்தில் போலீஸார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், ஒரே சமூகத்தில் இரு பிரிவுகள் மற்றும் வடமாநிலத் தொழிலாளர்கள் என முக்கோண மோதலாக, சூழல் மாறிவிடும் ஆபத்திருக்கிறது” என்றனர் எச்சரிக்கும் தொனியில்.

எம்.ஜி.ஆர் வெல்லம் தயாரிக்கும் ஆலையின் உரிமையாளர் முத்துசாமியிடம் இந்த விவகாரம் குறித்துக் கேட்டபோது, “என ஆலையில் வேலை செய்வதைத் தவிர, அவர்கள் வேறெந்தக் குற்றமும் செய்யவில்லை. இந்தப் பாதகத்தை நடத்தியவர்கள்மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். வெல்ல ஆலைகளைத் தொடர்ந்து அச்சமில்லாமல் இயக்க, மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் வழிவகை செய்ய வேண்டும்” என்றார்.

இந்த விவகாரம் பற்றி நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர் பாலசுப்ரமணியம், “நித்யா கொலையில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். வடமாநிலத் தொழிலாளர்கள் அந்தக் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டிருந்தால், அவர்களைக் காவல்துறை கைதுசெய்ய வேண்டும். ஆனால், பாவம் ஒரு பக்கம், பழி ஒரு பக்கம் என்பதுபோல் தமிழ்நாட்டுக்கு வயிற்றுப்பாட்டுக்காகப் பிழைக்க வந்திருக்கும் அப்பாவி வடமாநிலத் தொழிலாளர்கள்மீது இப்படி தீவைப்புச் சம்பவங்களை நடத்துவது முற்றிலும் தடுக்கப்பட்ட வேண்டும். அதேபோல குறிப்பிட்ட சமூக மக்களிடையே இது தீரா பகைமையை உண்டாக்கும் போக்காக மாறுவதை, ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்த வேண்டும்” என்றார்.

பாலசுப்ரமணியம், கலைச்செல்வன்
பாலசுப்ரமணியம், கலைச்செல்வன்

தொடர் தீவைப்பு, உயிர்ப்பலி சம்பவங்கள் குறித்து, நாமக்கல் மாவட்ட எஸ்.பி கலைச்செல்வனிடம் விளக்கம் கேட்டபோது, “நித்யா கொலைவழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே நடைபெற்ற தீவைப்பு சம்பவங்களில் தொடர்புடையவர்கள் யார் என்பதை ஓரளவு உறுதிசெய்துவிட்டோம். குற்றவாளிகளைப் பிடிக்க, தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடிக்கொண்டிருக்கிறோம். இந்தத் தொடர் தீவைப்பு சம்பவங்களைத் தடுக்க, இரு சமூக மக்களை அழைத்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தியிருக் கிறோம். வெல்ல ஆலைகளில் இனி தீவைப்பு சம்பவங்கள் நடக்காமல் இருக்க, போலீஸ் பாதுகாப்பை அதிகப்படுத்தியிருக்கிறோம்” என்றார்.

ஒரு கொடூரத்துக்கு இன்னொரு கொடூரம் தீர்வாகாது. நித்யாவைக் கொன்ற மனிதநேயமற்ற மிருகங்களையும், வடமாநிலத் தொழிலாளர்களை எரித்தவர்களையும் உடனே கைதுசெய்து தொடர் குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் காவல்துறையினர்!