ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் கடந்த ஐந்தாம் தேதி நடைபெற்ற பங்குனி உத்திர திருவிழாவின்போது, புது ரோடு பகுதியைச் சேர்ந்த மீனவர் முகேஷ், அவரின் நண்பரை 12 பேர் கொண்ட கும்பல் கடுமையாகத் தாக்கியிருக்கிறது. இதில் படுகாயமடைந்த இருவரும், உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
இந்த நிலையில், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி மீனவர் முகேஷ் உயிரிழந்தார். இது தொடர்பாக ராமேஸ்வரம் நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டு ஒருவர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். தாக்குதலில் ஈடுபட்ட மற்ற நபர்களையும் கைதுசெய்ய வலியுறுத்தி புதுரோடு கிராம மீனவ மக்கள் ராமேஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை, வருவாய் கோட்டாட்சியர் கோபு, வட்டாட்சியர், காவல்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவ மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ``தப்பிய குற்றவாளிகளைப் பிடிக்க மூன்று தனிப்படைகளை அமைத்திருக்கிறோம்.
விரைந்து அவர்களைக் கைதுசெய்துவிடுவோம், அதேபோல் உயிரிழந்த மீனவரின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் பெற்றுத் தரப்படும். எனவே, போராட்டத்தைக் கைவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்" என அதிகாரிகள் கூறியும், மீனவ மக்கள் கோரிக்கையை ஏற்கமறுத்து ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

காலை 9 மணி முதல் தற்போதுவரை தொடர்ந்து கிராம மக்கள் போராட்டம் மற்றும் மறியலில் ஈடுபட்டுவருவதால், ராமேஸ்வரத்தில் பதற்றமான சூழல் நிலவிவருகிறது. இதனால் அதிரடிப்படை போலீஸார் அந்தப் பகுதியில் குவிக்கப்பட்டிருக்கின்றனர்.