Published:Updated:

"கட்டைப்பையில் கடத்தப்பட்ட ரூ.6 கோடி மதிப்பிலான திமிங்கல எச்சம்!"- சோதனையில் வசமாகச் சிக்கிய கும்பல்

திமிங்கல எச்சம்
News
திமிங்கல எச்சம்

கட்டைப்பையில் மறைத்து ரூபாய் 6 கோடி மதிப்பிலான திமிங்கல எச்சத்தைக் கடத்திய கும்பலை வனத்துறையினர் கைதுசெய்தனர்.

Published:Updated:

"கட்டைப்பையில் கடத்தப்பட்ட ரூ.6 கோடி மதிப்பிலான திமிங்கல எச்சம்!"- சோதனையில் வசமாகச் சிக்கிய கும்பல்

கட்டைப்பையில் மறைத்து ரூபாய் 6 கோடி மதிப்பிலான திமிங்கல எச்சத்தைக் கடத்திய கும்பலை வனத்துறையினர் கைதுசெய்தனர்.

திமிங்கல எச்சம்
News
திமிங்கல எச்சம்

திருச்சி வனப் பாதுகாப்புத் தலைமை அதிகாரி சதீஷுக்கு, திருவாரூர் மாவட்டத்தில் திமிங்கலத்தின் எச்சம் கடத்தப்படுவதாக ரகசியத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், திருவாரூர் மாவட்ட வனத்துறை அதிகாரி அறிவொளி தலைமையிலான குழு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டது.

அப்போது திருவாரூரிலிருந்து கொரடாச்சேரிக்குச் செல்லும் நெடுஞ்சாலையில், அம்மையப்பன் என்ற பகுதியில் மூன்று இரு சக்கர வாகனங்களில் வந்த நான்கு பேர், வாகனச் சோதனையில் ஈடுபடுட்ட வனத்துறை அதிகாரிகளைக் கண்டு மிரட்சியில் தப்பிச் செல்ல முயன்றிருக்கின்றனர். அப்போது விழித்துக்கொண்ட பாதுகாப்பு அதிகாரிகள் தப்பிக்க முயன்றவர்களைப் பிடிக்க முற்பட்டபோது, ஒருவர் மட்டும் தப்பிச் செல்ல, மற்ற மூவரை அதிகாரிகள் மடக்கிப்பிடித்தனர். சந்தேகத்துக்குரிய அந்த நபர்கள் ஓட்டிவந்த இரு சக்கர வாகனத்திலிருந்த கட்டைப்பையைச் சோதனை செய்தபோது, அதில் 5.5 கிலோ எடைகொண்ட, 6 கோடி ருபாய் மதிப்பிலான திமிங்கல எச்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கைது
கைது

அதையடுத்து, இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, திமிங்கல எச்சத்தைக் கடத்திவந்த மூன்று நபர்களை வனத்துறையினர் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், அவர்கள் திருச்சியைச் சேர்ந்த சுரேஷ், திருவாரூரைச் சேர்ந்த பாலமுருகன், நாகப்பட்டினத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்று தெரியவந்திருக்கிறது. அவர்கள் ராமநாதபுரத்திலிருந்து திருச்சி வழியாக, திருவாரூருக்கு திமிங்கல எச்சத்தைக் கடத்திவந்திருக்கின்றனர். தப்பியோடிய நபர்தான் முக்கியக் குற்றவாளி என்றும், அவர் கைதுசெய்யப்பட்டால்தான் திமிங்கல எச்சம் யாருக்கு விற்பனை செய்யப்படவிருந்தது என்பது தெரியவரும் என்கிறார்கள் அதிகாரிகள்.

இந்தக் கடத்தல் சம்பவம் குறித்து திருவாரூர் மாவட்ட வன அதிகாரி அறிவொளியிடம் பேசினோம். ``எங்களுக்கு திருச்சி மாவட்ட வனத்துறையிலிருந்து, திருவாரூர் மாவட்டத்தில் திமிங்கலத்தின் எச்சம் கடத்தப்படுவதாகத் தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், வனப் பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டார்கள். அப்போது மதியம் சுமார் 2 மணியளவில் திருவாரூர் ஒன்றியத்துக்குட்பட்ட அம்மையப்பன் என்ற பகுதியில் சந்தேகப்படும்படி நான்கு நபர்கள் மூன்று இருசக்கர வாகனங்களில் வந்திருக்கின்றனர். அவர்களிடம் வனத்துறை பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை செய்தபோது, ஒரு நபர் தப்பியோடியிருக்கிறார்.

அவர்கள் ஓட்டிவந்த இரு சக்கர வாகனங்களைச் சோதனை செய்தபோது, அதில் ஒரு கட்டைப்பையில், சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பிலான, ஐந்தரை கிலோ அளவிலான திமிங்கலத்தின் எச்சம் இருந்தது கண்டறியப்பட்டது. பிறகு அவர்கள் மூவரும் கைதுசெய்யப்பட்டு திருவாரூர் மாவட்ட வனப் பாதுகாப்பு அலுவலகத்துக்குக் கொண்டுவரப்பட்டனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை செய்தபோது, அவர்கள் அனைவரும் மீன்பிடித் தொழில் செய்துவருவது தெரியவந்தது.

திமிங்கல எச்சம்
திமிங்கல எச்சம்

மேலும், தப்பியோடிய நான்காவது நபர் பிரதீப் ராஜ்குமார் என்றும், அவர்தான் இந்தக் கடத்தலில் முக்கியமான குற்றவாளி என்று சிக்கிய இந்த மூன்று நபர்களும் வாக்குமூலம் அளித்திருக்கிறார்கள். தப்பியோடிய அந்த நபரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டால்தான், இந்தத் திமிங்கல எச்சம் எங்கிருந்து கடத்தப்பட்டது, யாருக்கு இது விற்கப்படவிருந்தது என்பது பற்றிய முழு விவரமும் தெரியவரும்.

மேலும், கைதுசெய்யப்பட்டிருக்கும் இந்த மூன்று நபர்களும் திருவாரூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படவிருக்கிறார்கள். தப்பி ஓடிய முக்கியக் குற்றவாளியான பிரதீப் ராஜ்குமாரைத் தேடும் பணியில், வனத்துறை பாதுகாப்பு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றனர்" என்றார்.