சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று, முன்னாள் டி.ஜி.பி திலகவதியின் மருமகள் சுருதி திலக் தன் தந்தையுடன் புகார் அளித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``எனக்கும், முன்னாள் டி.ஜி.பி திலகவதியின் மகன் பிரபு திலக் என்பவருக்கும், 2007-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அப்போது, வரதட்சணையாக ஒரு கோடி ரூபாய் ரொக்கமும், 170 பவுன் நகையும் என் தந்தை வழங்கி இருந்தார். எங்களுக்கு 15 வயதில் ஒரு மகளும் 7 வயதில் ஒரு மகனும் உள்ளனர். சமீபகாலமாக என் கணவர் என்னை காரணம் இன்றி அடிப்பதும் துன்புறுத்துவதுமாய் இருந்து வருகிறார். கேட்டால் வரதட்சணை கேட்டு அடித்து விரட்டுகிறார்.

என் கணவர், சேலத்தில் உள்ள விநாயகா மிஷன் மருத்துவக் கல்லூரியில் பேராசிரியர். எங்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்து வந்தது. மது அருந்திவிட்டு என்னை அடித்து சித்ரவதை செய்து வந்தார். குழந்தைகளுக்காக அனைத்தையும் பொறுத்துக் கொண்டேன்.
என் கணவரின் அம்மா ஐ.பி.எஸ் அதிகாரியாக இருந்ததால், எப்போதும் என்னை மிரட்டி, `உன்னுடைய வாழ்க்கையை அழித்து விடுவோம்’ என்று கூறி கொலை மிரட்டல் விடுத்து வந்தார். தன்னுடன் பணியாற்றும் பெண் டாக்டர் ஒருவருடன், அவர் திருமணத்தை மீறிய உறவில் உள்ளார். இதுகுறித்து எனக்குத் தெரியவந்து நான் கேட்டபோது, கொலை மிரட்டல் விடுகிறார். இதனால் என் உயிருக்கு ஆபத்து இருந்து வருகிறது. எனவே, அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
முன்னாள் டி.ஜி.பி திலகவதியின் மகன் மீது அவரின் மனைவி போலீஸில் புகார் மனு அளித்துள்ளது, காவல்துறை வட்டாரங்களில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.