Published:Updated:

பஞ்சாப் ராணுவ முகாம் துப்பாக்கிச்சூடு: பலியான 4 வீரர்களில் இருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்

பதிண்டா ராணுவ முகாம்
News
பதிண்டா ராணுவ முகாம்

"ஒருவர் தொலைந்துபோன INSAS துப்பாக்கியையும், மற்றொருவர் கோடரியையும் ஏந்தியிருந்ததாகத் தெரிகிறது" - எஃப்.ஐ.ஆர் பதிவு

Published:Updated:

பஞ்சாப் ராணுவ முகாம் துப்பாக்கிச்சூடு: பலியான 4 வீரர்களில் இருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்

"ஒருவர் தொலைந்துபோன INSAS துப்பாக்கியையும், மற்றொருவர் கோடரியையும் ஏந்தியிருந்ததாகத் தெரிகிறது" - எஃப்.ஐ.ஆர் பதிவு

பதிண்டா ராணுவ முகாம்
News
பதிண்டா ராணுவ முகாம்

பஞ்சாப் மாநிலம், பதிண்டா பகுதியிலிருக்கும் ராணுவ முகாமில் நேற்று அதிகாலை 4:30 மணியளவில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது. இதில் நான்கு ராணுவ வீரர்கள் பலியாகியிருக்கின்றனர். ராணுவ முகாமில் இரண்டு நாள்களுக்கு முன்பாக 28 குண்டுகளுடன் துப்பாக்கி காணாமல்போன நிலையில், இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றது அந்தப் பகுதியில் பதற்றத்தை அதிகரித்தது. முகாம் உள்ளிட்ட அதைச் சுற்றியிருக்கும் பகுதி ராணுவ அதிகாரிகளால் சுற்றிவளைக்கப்பட்டிருக்கிறது. மேலும், ராணுவ வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுவருகின்றனர்.

பதிண்டா ராணுவ முகாம்
பதிண்டா ராணுவ முகாம்

இந்தச் சம்பவம் தொடர்பாக ராணுவ மேஜர் அசுதோஷ்  சுக்லா அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறை எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்திருக்கிறது. அதில், 'நடுத்தர உயரம் கொண்டதாகச்  சந்தேகிக்கப்படும் தாக்குதல் நடத்திய இருவர், வெள்ளை குர்தா-பைஜாமா அணிந்து, முகம், தலையை மூடிய நிலையில், துப்பாக்கிச்சூடு நடந்த முகாமிலிருந்து வெளியே வருவதை ஒரு ராணுவ வீரர் பார்த்திருக்கிறார். அவர்களில் ஒருவர் தொலைந்துபோன INSAS துப்பாக்கியையும், மற்றொருவர் கோடரியையும் ஏந்தியிருந்ததாகத் தெரிகிறது.

அவர்கள் இருவரும், ராணுவ வீரரைக் கண்டதும்  படைமுகாமுக்கு அருகிலுள்ள வனப்பகுதிக்குள் சென்றுவிட்டனர். உடனே ராணுவ அதிகாரிகள் முகாமின் அறைக்குச் சென்று சோதனையிட்டபோது, இரண்டு அறைகளில் நான்கு வீரர்கள் ரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்தனர்' எனப் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து, காவல்துறை, "அடையாளம் தெரியாத இருவர்மீது ஐ.பி.சி பிரிவு 302 (கொலை) மற்றும் ஆயுதச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. எங்கள் விசாரணை இராணுவ காவல்துறையுடன் இணைந்து நடந்துவருகிறது" எனத் தெரிவித்திருக்கிறது.

ஜே.யோகேஷ் குமார்
ஜே.யோகேஷ் குமார்

இந்த நிலையில், இறந்த ராணுவ வீரர்கள் குறித்த தகவலை ராணுவ முகாம் வெளியிட்டிருக்கிறது. அதில், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சாகர் பன்னே (25), சந்தோஷ் எம் நகரால் (25), தேனி மாவட்டம் தேவாரம் அருகேயுள்ள  மூணாண்பட்டியைச் சேர்ந்த ஜே.யோகேஷ் குமார் (24), சேலம் மாவட்டம், மேட்டூர் வனவாசி அருகேயுள்ள பனங்காட்டைச் சேர்ந்த ஆர்.கமலேஷ் (24) ஆகியோர் என அடையாளம் காணப்பட்டிருக்கிறது.

இந்தச் சம்பவம் குறித்து ராணுவத் தளபதி மனோஜ் பாண்டே, "இறந்த வீரர்கள் குறித்து அவர்களது வீட்டுக்குத் தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. இறந்த ராணுவ வீரர்களின் உடல்கள் இன்று மாலை சொந்த ஊர்களுக்குக் கொண்டுசெல்லப்படும். மேலும், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் விளக்கமும் அளிக்கப்பட்டிருக்கிறது" எனத் தெரிவித்திருக்கிறார்.