விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த ஒலக்கூர் கூட்டுச்சாலையில் மெடிக்கல் ஒன்று இயங்கிவருகிறது. இந்த மெடிக்கலை திண்டிவனம் ஆர்.எஸ்.பிள்ளை வீதியைச் சேர்ந்த சாதிக் பாஷா என்பவர் நடத்திவந்திருக்கிறார். இந்த நிலையில் அந்த மெடிக்கல் மீது பல்வேறு புகார்கள் எழுந்தன. எனவே, நேற்று முன்தினம் திண்டிவனம் காவல் ஆய்வாளர் கலைச்செல்வி மற்றும் ஒலக்கூர் போலீஸார் தலைமையில் சாதிக் பாஷா நடத்திவரும் மெடிக்கலில் விசாரணை மேற்கொண்டனர்.

அதில், சாதிக் பாஷா பத்தாம் வகுப்பு படித்துவிட்டு பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்துவந்தது தெரியவந்தது. இதையடுத்து, திண்டிவனம் அரசு மருத்துவமனையின் முதன்மை மருத்துவ அலுவலர் சாந்தகுமாரி, ஒலக்கூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், சாதிக் பாஷா மீது போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர். மேலும், விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதேபோல், திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் அருகேயுள்ள வண்ணாங்குளம், ஓண்ணுபுரம், குன்னத்தூர், கொங்கரம்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் போலி மருத்துவர்கள் மருத்துவம் பார்த்துவருவதாக மாவட்ட நிர்வாகத்துக்குப் புகார் சென்றிருக்கிறது. எனவே, செய்யார் மாவட்ட சுகாதார நல இணை இயக்குநரின் உத்தரவின்பேரில், ஆரணி அரசு மருத்துவமனையின் மருத்துவ அலுவலர்கள் மற்றும் சுகாதாரத்துறையினர் வண்ணாங்குளம், அத்திமலைபட்டு உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின்போது, வண்ணாங்குளம் கிராமத்தில் தனது வீட்டிலேயே மருத்துவம் பார்த்துக்கொண்டிருந்த பழனிவேல் (40) என்பவர் பிடிபட்டார். அவரிடம், சுகாதாரத்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், பழனிவேல் பி.பார்ம் படித்துவிட்டு மருத்துவம் பார்த்துவந்தது தெரியவந்தது. எனவே, மருத்துவ அலுவலர்கள் பழனிவேல் உபயோகப்படுத்திய மருத்துவ உபகரணங்களைப் பறிமுதல் செய்தனர். இதுமட்டுமின்றி, ஆரணி - வேலூர் சாலையிலுள்ள அத்திமலைப்பட்டு அருகே 10-ம் வகுப்பு மட்டும் படித்துவிட்டு வீட்டிலேயே மருத்துவம் பார்த்துவந்த செந்தில்குமார் பிடிபட்டார். அவரிடமிருந்தும் மருத்துவ உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, போலி மருத்துவர்கள் செந்தில்குமார், பழனிவேல் ஆகியோரை கண்ணமங்கலம் காவல் நிலையத்தில் மருத்துவ அலுவலர்கள் ஒப்படைத்தனர்.
அவர்கள்மீது வழக்கு பதிவுசெய்த போலீஸார், ஆரணி நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இதேபோல், வந்தவாசி அருகே பிரம்மதேசம் கிராமத்தில், முறையாக மருத்துவம் படிக்காமல் சுரேஷ்பாபு என்பவர் கிளினிக் வைத்து பொதுமக்களுக்குச் சிகிச்சை அளித்துவந்தது கண்டறியப்பட்டது. இது குறித்த புகாரின்பேரில், போலி மருத்துவர் சுரேஷ்பாபுவைக் கைதுசெய்திருக்கும் பிரம்மதேசம் போலீஸார், அவரிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில், முறையான மருத்துவம் பயிலாமல் நான்கு பேர் போலியாக கிளினிக் வைத்து நடத்தி, பொதுமக்களுக்குச் சிகிச்சை பார்த்துவந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.