பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கான்கிரீட் வீடு கட்டிக்கொள்ள ஏழைகளுக்கு மத்திய அரசு சார்பாக நிதியுதவி செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் படிப்படியாக நிதி வழங்கப்படுவது வழக்கம். உத்தரப்பிரதேச மாநிலத்தில், இந்தத் திட்டத்தின் கீழ் பாரபங்கி மாவட்டத்தில் வீடு கட்ட முதல் தவணையாக தலா ரூ.50,000 பயனாளிகளின் வங்கிக்கணக்கில் சேர்க்கப்பட்டது. பணத்தை வாங்கிய பலர் வீடு கட்டாமல் இருந்தனர். அவ்வாறு வீடு கட்டாதவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி, உடனே வீடு கட்டும்படி கேட்டுக்கொண்டது. சிலர் தங்களின் மனைவி பெயரில் இந்தத் திட்டத்துக்கு விண்ணப்பித்திருந்தனர்.
அவ்வாறு விண்ணப்பித்து பணம் கிடைத்த பிறகும், வீடு கட்டாமல் இருந்திருக்கின்றனர். இதையடுத்து, பல்ஹாரா என்ற கிராமத்தில் வசிக்கும் நான்கு பேர் மாவட்ட நிர்வாக அதிகாரிகளைச் சந்தித்து வீடு கட்ட பணம் வங்கிக்கணக்குக்கு வந்தவுடன் அதை எடுத்துக்கொண்டு தங்களின் மனைவிகள் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டதாக புகாரளித்திருக்கின்றனர். மேலும், அந்தப் பெண்கள் திருமணம் மீறிய உறவில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

அதோடு அடுத்த தவணைத் தொகையை வங்கிக்கு அனுப்பவேண்டாம் என்றும் அப்படி அனுப்பினால் அதையும் எடுத்துக்கொள்வார்கள் என்று கணவர்கள் எழுத்துபூர்வமாகப் புகார் செய்திருக்கின்றனர். இதனால் வீட்டைவிட்டு வெளியேறிய பெண்களிடமிருந்து எப்படிப் பணத்தை மீட்பது என்று தெரியாமல் முழித்துக்கொண்டிருந்திருக்கின்றனர். ஓடிப்போன பெண்களின் கணவர்கள் நான்கு பேரும் இது தொடர்பாக போலீஸிலும் புகார் செய்திருக்கின்றனர்.
மாவட்ட நிர்வாகம் நான்கு பேருக்கும் அடுத்த தவணை பணம் கிடைக்காதபடி செய்திருக்கிறது. அதோடு மாவட்ட வளர்ச்சித்துறை அதிகாரி இந்தச் சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறார். இந்தச் சம்பவத்தால் பல்ஹாரா கிராமம் அதிர்ச்சியில் காணப்படுகிறது. இது குறித்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவம் விஷ்வகர்மா அளித்த பேட்டியில், ``பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு கட்டிக்கொள்ள முதல் கட்டமாக 16,000 பேருக்கு தலா ரூ.50,000 வழங்கப்பட்டிருக்கிறது. அதில் 40 பேர் வீடு கட்ட ஆரம்பிக்கவில்லை. அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. நான்கு பேர் தங்களின் மனைவிகள் பணத்தைத் திருடிச்சென்றுவிட்டதாக எழுத்துபூர்வமாகப் புகார் கொடுத்திருக்கின்றனர்'' என்றார்.