நடப்பு
பங்குச் சந்தை
தொடர்கள்
Published:Updated:

நேர்மையாகச் செயல்படுங்கள் தமிழக முதல்வரே..!

தலையங்கம்
News
தலையங்கம்

ஐ.எஃப்.எஸ் நிறுவனத்தில் அரசியல்வாதிகளும், காவல்துறையினரும் நேரடியாக சம்பந்தப்பட்டிருப்பதால்தான், பொருளாதாரக் குற்றப்பிரிவு நடவடிக்கை எடுக்கவில்லையா?

சென்னையில் 10,000 பேரிடம் ரூ.800 கோடி அளவுக்கு மோசடி செய்த ஹிஜாவு நிறுவனத்தின் முக்கியக் குற்றவாளிகள் மூன்று பேரை பொருளாதாரக் குற்றப் பிரிவு கைது செய்திருக்கிறது. இந்த மோசடியை செய்து தலைமறைவாகி இருக்கும் பல குற்றவாளிகளைத் தேடும் பணியில் பொருளாதாரக் குற்றப் பிரிவு தீவிரமாகச் செயல்படுவதைப் பார்த்து நாம் நிச்சயம் பாராட்டலாம்; பெருமைப்படலாம்.

ஆனால், சென்னை மோசடி நிறுவனம் மீது பொருளாதாரக் குற்றப் பிரிவு காட்டும் அக்கறையை தமிழகத்தின் பிற பகுதியில் நடக்கும் மோசடி நிறுவனங்கள் மீது ஏன் காட்டுவதில்லை என்பதே தமிழக மக்கள் எழுப்பும் முக்கியமான கேள்வியாக இருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளாக, தமிழகத்தின் பல ஊர்களில் ஏதோ ஒரு நிறுவனத்தின் மோசடித் திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுவதை நேரடியாகப் பார்க்க முடிகிறது. வேலூரில் ஐ.எஃப்.எஸ் நிறுவனம் நடத்திய மோசடித் திட்டத்தில் அப்பாவி மக்கள் ரூ.15,000 கோடி அளவுக்குப் பணத்தை இழந்தனர். ஆனால், இந்த நிறுவனத்தை நடத்தியவர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள், இந்த நிறுவனத்தில் அப்பாவி மக்கள் போட்ட பணம் என்னவானது, மக்கள் பணம் திரும்பக் கிடைக்குமா, எப்போது கிடைக்கும், எவ்வளவு கிடைக்கும் என்பது பற்றியெல்லாம் பொருளாதாரக் குற்றப் பிரிவினர் இதுவரை பெரிதாக எந்த விசாரணையும் நடத்தவில்லையே ஏன்?

ஐ.எஃப்.எஸ் நிறுவனம் மட்டுமல்ல, திண்டுக்கல்லில் இருந்து செயல்படும் பிரைட்வே நிறுவனம், பெரம்பலூரில் இருந்து செயல்படும் ஜி.எஸ்.டி.எல் வைபவ் நிதி லிமிடெட், திருச்சி மற்றும் மதுரை எனப் பல்வேறு நகரங்களில் செயல்படும் நியோமாக்ஸ் (சென்ட்ரியோ என்கிற பெயரில் இந்த நிறுவனம் இப்போது நடக்கிறது!) உட்பட பல நிறுவனங்கள் மீது பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸார் இதுவரை எந்த நடவடிக்கையையும் எடுக்காதது ஏன்?

ஐ.எஃப்.எஸ் நிறுவனத்தில் அரசியல்வாதிகளும், காவல்துறையினரும் நேரடியாக சம்பந்தப்பட்டிருப்பதால்தான், பொருளாதாரக் குற்றப்பிரிவு நடவடிக்கை எடுக்கவில்லையா? மற்ற மோசடி நிறுவனத்தினர் அவ்வப்போது ‘யாரைக் கவனிக்க வேண்டுமோ, அவர்களைக் கவனித்து’விடுவதால், அவர்கள் கண்டுகொள்ளப்படாமலே இருக்கிறார்களா?

கஷ்டப்பட்டு மக்கள் சம்பாதித்த பணத்தைக் கொள்ளை அடிக்கும் எந்த மோசடி நிறுவனமாக இருந்தாலும் அதன் மீது விருப்பு, வெறுப்பு இல்லாமல் நடவடிக்கை எடுத்து, மக்களின் பணத்தைத் திரும்பப் பெற்றுத்தர காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சில மோசடி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்போம், சில மோசடி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க மாட்டோம்; அது எங்கள் இஷ்டம் என்கிற மாதிரி பொருளாதாரக் குற்றப் பிரிவு செயல்பட்டால், ஒட்டுமொத்த காவல்துறைக்கும் அமைச்சராக இருக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலினின் பெயருக்குதான் களங்கம் ஏற்படும். இந்தக் களங்கம் அவர் செய்யும் பல நல்ல விஷயங்களைக் காவு வாங்கிவிடும். எனவே, மக்கள் பணம் கொள்ளை போவதைத் தடுப்பதில் நேர்மையாக செயல்படுங்கள் முதல்வரே!

- ஆசிரியர்