சென்னை அசோக்நகர், 82-வது தெருவைச் சேர்ந்தவர் பிரசாந்த். இவர் 12.2.2023-ம் தேதி கே.கே.நகர் ராஜமன்னார் சாலை, பி.டி.ராஜன் சாலை சந்திப்பில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த மர்ம நபர்கள், பிரசாந்திடமிருந்து செல்போனை பறித்துச் சென்றனர். இது குறித்து பிரசாந்த், கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் அந்தப் பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்தனர். மேலும், வாகனத்தின் பதிவு நம்பர், செல்போன் சிக்னலைக் கொண்டும் போலீஸார் விசாரித்தனர்.

விசாரணையில் சென்னை செங்குன்றம் வடகரையைச் சேர்ந்த கிருபாகரன் (21), மாவு விக்கி என்கிற விக்னேஷ் (19) ஆகிய இருவர்தான் பிரசாந்த்திடம் செல்போனை திருடிச் சென்றிருக்கிறார்கள் என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து பிரசாந்த்தின் செல்போனை போலீஸார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இருவரிடமும் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இது குறித்து கே.கே.நகர் போலீஸார் கூறுகையில், ``கிருபாகரனும் மாவு விக்கியும் நண்பர்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து கே.கே.நகர், மாம்பலம், அசோக்நகர், வடபழனி, திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து செல்போன்களைத் திருடிவந்திருக்கிறார்கள். இவர்கள் இருவரும் சாலையில் செல்போனில் பேசிக்கொண்டே செல்பவர்களை முதலில் நோட்டமிடுவார்கள். அதன் பிறகு பைக்கில் பின்தொடர்ந்து சென்று கத்திமுனையில் செல்போனைப் பறித்துவிட்டு தப்பிச் சென்றுவிடுவார்கள்.
தினமும் இரண்டு அல்லது மூன்று செல்போன்களைத் திருட வேண்டும் என்ற டார்கெட்டோடு வீட்டிலிருந்து பைக்கில் புறப்பட்டு வரும் இவர்கள், செல்போன்களைத் திருடிவிட்டு அதை போட்டோவாக எடுத்து வாட்ஸ்அப்பில் தண்டையார்பேட்டையைச் சேர்ந்த நாகூர் மீரான் (36) என்பவருக்கு அனுப்பிவைப்பார்கள். அதைப் பார்த்துவிட்டு அந்தத் திருட்டு செல்போனுக்கு நாகூர் மீரான் விலையை நிர்ணயம் செய்வார். டீல் ஓகே என்றதும், கிருபாகரனும் மாவு விக்கியும் நாகூர்மீரானிடம் செல்போன்களைக் கொடுத்து அதற்குரிய பணத்தை வாங்கிக்கொண்டு சென்றுவிடுவார்கள்.

இப்படியே கிருபாகரனும் மாவு விக்கியும் 16 செல்போன்களை நாகூர்மீரானிடம் விற்று வந்திருக்கிறார்கள் செல்போன்களைக் குறைந்த விலைக்கு வாங்கும் நாகூர் மீரான், அதை பஜார் பகுதியில் கூடுதல் விலைக்கு விற்றுவந்திருக்கிறார். இதையடுத்து இவர்களிடமிருந்து 16 செல்போன்கள், ஒரு கத்தி, ஒரு பைக் ஆகியவற்றைப் பறிமுதல் செய்திருக்கிறோம். இந்தச் சம்பவத்தில் இன்னொருவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்திருக்கிறது. அவரைத் தேடிவருகிறோம்" என்றனர்.