அலசல்
அரசியல்
Published:Updated:

‘14 வயது சிறுமி... அந்த மூன்று பேர்!’ - பதறவைக்கும் பரமக்குடி பாலியல் வன்கொடுமை

பாலியல் வன்கொடுமை
பிரீமியம் ஸ்டோரி
News
பாலியல் வன்கொடுமை

அ.தி.மு.க கவுன்சிலரான சிகாமணி, `ஜி.எஸ் லேண்ட் புரொமோட்டர்ஸ்’ என்ற நிறுவனத்தை நடத்திவருகிறார். அதில்தான் உமாவும் கயல்விழியும் வேலை பார்த்து வந்திருக்கின்றனர்.

பரமக்குடியில் எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், அ.தி.மு.க கவுன்சிலர் உள்ளிட்டோரைக் கைதுசெய்திருக்கிறது போலீஸ்.

வெளிநாட்டுக்குப் பெண்களை வேலைக்கு அனுப்பும் நேருமுருகன் என்பவரிடம், கயல்விழி என்ற புரோக்கர் பெண்மணி பேசும் ஆடியோ மூலமே இந்தப் பாலியல் விவகாரம் வெளியாகியிருக்கிறது. வெளிநாட்டு வேலைக்கு ஒரு பெண்ணை அனுப்புவது தொடர்பாக பேசத் தொடங்கும் கயல்விழி, “வீட்டு வேலைதானே... வேற வேலை கிடையாதே?” என்று கேட்கிறார். பிறகு, பரமக்குடியைச் சேர்ந்த புதுமலர் பிரபாகரன் என்பவர், தன் உறவுக்காரச் சிறுமியான எட்டாம் வகுப்பு மாணவியைச் சீரழித்துவிட்டதாகவும், அதற்கு தனக்குத் தருவதாகச் சொன்ன 10 ஆயிரம் ரூபாயைத் தராமல் ஏமாற்றிவிட்டதாகவும் சொல்கிறார்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

இந்த ஆடியோ, வாட்ஸ்அப்பில் தீயாகப் பரவவே... பரமக்குடி போலீஸார் கயல்விழி, பாதிக்கப்பட்ட சிறுமி ஆகியோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இதில், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்பது உறுதியானதைத் தொடர்ந்து, இந்தக் கொடூரச் சம்பவத்தில் ஈடுபட்ட பரமக்குடி 3-வது வார்டு கவுன்சிலரும், அ‌.தி.மு.க நகர அவைத்தலைவருமான சிகாமணி, மறத்தமிழர் சேனை நிறுவனர் புதுமலர் பிரபாகர், தனியார் ஜவுளி நிறுவன உரிமையாளர் ராஜாமுகமது ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்தனர். சிறுமியைக் கட்டாயப்படுத்தி தொழிலில் ஈடுபடுத்திய புரோக்கர்களான உமா, கயல்விழி ஆகியோரும் கைதுசெய்யப் பட்டிருக்கின்றனர்.

இது குறித்து விசாரணை அதிகாரிகளிடம் பேசியபோது, “அ.தி.மு.க கவுன்சிலரான சிகாமணி, `ஜி.எஸ் லேண்ட் புரொமோட்டர்ஸ்’ என்ற நிறுவனத்தை நடத்திவருகிறார். அதில்தான் உமாவும் கயல்விழியும் வேலை பார்த்து வந்திருக்கின்றனர். பிளாட் வேகமாக விற்றுக்கொண்டிருப்பதாகக் காட்டினால்தான் மற்றவர்களும் துணிந்து வாங்குவார்கள் என்பதால், இவர்கள் பரமக்குடிப் பகுதியிலுள்ள ஏழைப் பெண்களை, ‘பிளாட்’ வாங்க வரும் வசதி படைத்தவர்கள்போல நடிக்கவைத்திருக்கின்றனர். இதை உண்மை என நம்பிய பொதுமக்களும் இவர்களிடம் பிளாட்டுகளை வாங்கிச் சென்றிருக்கின்றனர்.

சிகாமணி, புதுமலர் பிரபாகர், ராஜாமுகமது
சிகாமணி, புதுமலர் பிரபாகர், ராஜாமுகமது

இப்படித் தொடர்ச்சியாக அழைத்துச் செல்லப்படும் பெண்களை, உமாவும் கயல்விழியும் மூளைச்சலவை செய்து அ.தி.மு.க கவுன்சிலரின் காமப்பசிக்கு இரையாக்கிவந்திருக்கின்றனர். இந்த நிலையில், தன் உறவினர் மகளான எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுமியையும் இந்தக் கொடுமையில் ஈடுபடுத்தியிருக்கிறார் உமா.

அந்தச் சிறுமியின் தந்தை வெளியூரில் டீ மாஸ்டராக இருக்கிறார். அவருடைய தாய், வீடு வீடாகப் பாத்திரம் கழுவும் வேலை செய்துவருகிறார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். பெற்றோர் இருவரும் அதிகாலையிலேயே கூலி வேலைக்குச் செல்ல வேண்டியிருந்ததால், தங்களுடைய இரு மகள்களையும் உமாவை நம்பி விட்டுச் சென்றிருக்கின்றனர். ஆனால் உமாவோ, எட்டாம் வகுப்பு மாணவியையும் ‘பிளாட்’ வாங்க வரும் வசதியானவர்களின் மகள்போல நடிப்பதற்காக அலங்கரித்து அழைத்துச் சென்றிருக்கிறார். சபல புத்திகொண்ட சிகாமணி அந்தச் சிறுமி மீதும் ஆசைகொண்டு உமாவிடம் உதவி கேட்டிருக்கிறார். பண ஆசை பிடித்த உமா, சிறுமியை சிகாமணியின் காமப்பசிக்கு இரையாக்கியிருக்கிறார். பின்னர் சித்திரைத் திருவிழாவின்போது சிறுமியை நன்கு அலங்கரித்து அழைத்துச் சென்ற உமா, மறத்தமிழர் சேனை நிறுவனர் புதுமலர் பிரபாகர், பரமக்குடியிலுள்ள களஞ்சியம் ஜவுளிக்கடை நிறுவனர் ராஜாமுகமது ஆகியோரிடம் சிறுமியை அறிமுகப்படுத்தி அவர்களின் காமப்பசிக்கும் இரையாக்கி பணம் பார்த்திருக்கிறார்.

உமா, கயல்விழி
உமா, கயல்விழி

பள்ளிக்குச் செல்வதுபோல், தினமும் மாணவிக்கு பள்ளிச் சீருடை அணிவித்து அழைத்துச் சென்று மூன்று காமக் கொடூரர்களுக்கும் அவ்வப்போது இரையாக்கிவிட்டு, சிறுமியின் பெற்றோர் வீட்டுக்கு வருவதற்குள்ளாக வீட்டில் கொண்டு விட்டிருக்கிறார். முழுக்க முழுக்கப் பகலிலேயே சிறுமியைப் பாலியலில் ஈடுபடுத்தியதால், பெற்றோருக்குச் சந்தேகம் ஏற்படவில்லை. இந்தத் தொழிலுக்கு உடந்தையாக இருந்த கயல்விழிக்கும் பங்கு கொடுத்து வந்திருக்கிறார் உமா.

சுதா
சுதா

இந்தச் சூழலில்தான், புதுமலர் பிரபாகர் பேசியபடி பணத்தைக் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டதாக, நேருமுருகன் என்பவரிடம் கயல்விழி செல்போனில் தகவல் கூறியிருக்கிறார். இதை ரெக்கார்ட் செய்த நேருமுருகன் வாட்ஸ்அப்பில் பரப்பிய பிறகே, விவகாரம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது’’ என்றனர்.

பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சுதாவிடம் பேசியபோது, “பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது பெற்றோரின் பாதுகாப்பில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார். சைல்டு லைன் அமைப்பினர் மூலம் சிறுமிக்கு கவுன்சலிங் கொடுக்கப்பட்டு வருகிறது. சிறுமியைப் பாலியலில் ஈடுபடுத்திய உமா, கயல்விழி ஆகியோரிடம் தொடந்து விசாரணை நடத்திவருகிறோம். விசாரணையின் முடிவில்தான் இந்தச் சம்பவத்தில் இன்னும் வேறு யாரேனும் ஈடுபட்டிருக்கிறார்களா என்பதெல்லாம் தெரியவரும்’’ என்றார்.

கைதான சிலருக்கு பாதிக்கப்பட்ட சிறுமியின் வயதில் மகள் இருக்கிறாள் என்பதுதான் கொடுமை!