
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாக்யலட்சுமியை சென்னை தாம்பரத்திலுள்ள விடுதி ஒன்றில் சந்தித்த ஜெயந்தன் அவரைக் காதலித்து, தன் வீட்டுக்குத் தெரியாமல் திருமணம் செய்திருக்கிறார்.
காதல் மனைவியைத் தேடிச் சென்ற விமான நிலைய ஊழியர் ஜெயந்தன் என்பவர் கொலைசெய்யப்பட்டு, அவரின் தலை, உடல், கை கால்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு, சூட்கேஸில் அடைத்து, கோவளம் பகுதியில் புதைக்கப்பட்டதாக வெளியான தகவலைக் கேட்டு தலைசுற்றிப்போயிருக்கிறது சென்னை போலீஸ். இந்தச் சம்பவத்தில் கிடைத்த முன்னுக்குப் பின் முரணான தகவல்களால் அடுத்து என்ன செய்வது என்று முடிவெடுக்க முடியாமல் குழப்பமடைந்திருக்கிறார்கள் போலீஸார்.
என்ன நடந்தது என்று விசாரித்தோம்.
சென்னை, நங்கநல்லூரைச் சேர்ந்தவர் ஜெயகிருபா. இவர், சென்னை பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், “சென்னை விமான நிலைய ஊழியரான என் தம்பி ஜெயந்தன், 18.3.2023-ம் தேதி வேலை முடிந்து விழுப்புரத்துக்குச் செல்வதாக என்னிடம் கூறினான். ஆனால், அவன் அங்கேயும் செல்லவில்லை; வீட்டுக்கும் திரும்பவில்லை. ஜெயந்தனின் செல்போன் நம்பர் சுவிட்ச் ஆஃப் ஆகியிருக்கிறது. எனவே, என் தம்பி ஜெயந்தனை போலீஸார் கண்டுபிடித்து தர வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

பழவந்தாங்கல் போலீஸார் வழக்கு பதிவுசெய்து, ஜெயந்தனைத் தேடிவந்தனர். ஜெயந்தனின் செல்போன் சிக்னல் கடைசியாக புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே இருந்ததைக் கண்டறிந்தார்கள் போலீஸார். பொன்னமராவதியைச் சேர்ந்த பாக்யலட்சுமி என்பவரிடம் ஜெயந்தன் பேசியதும் தெரியவந்தது.
இதையடுத்து பழவந்தாங்கல் போலீஸார், புதுக்கோட்டைக்குச் சென்று பாக்யலட்சுமியிடம் விசாரித்தனர். அப்போது அவர், ‘‘ஜெயந்தனும் நானும் காதலித்து, திருமணம் செய்துகொண்டோம். சில மனக்கசப்புகளால் நாங்கள் இருவரும் பிரிந்து வாழ்கிறோம். கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஜெயந்தன் என்னைச் சந்திக்க இங்கு வந்தார். அப்போது எங்களுக்குள் நடந்த தகராறில் நான் அவரைக் கொலை செய்துவிட்டேன். பின்னர், புதுக்கோட்டையைச் சேர்ந்த சங்கர் என்பவருடன் சேர்ந்து ஜெயந்தனின் கை கால்கள், தலை உள்ளிட்ட உடல் பாகங்களைத் துண்டு துண்டாக வெட்டினேன். கை கால்களை ஒரு பார்சலாகவும் தலை உள்ளிட்ட மற்ற உடல் பாகங்களை இன்னொரு பார்சலாகவும் கட்டி, சூட்கேஸில் அடைத்தோம். முதலில் கைகள், கால்கள்கொண்ட பார்சலை பேருந்து மூலம் சென்னைக்குக் கொண்டு சென்றேன். அங்கு, கோவளம் பகுதியைச் சேர்ந்த பூசாரி வேல்முருகன் என்பவரின் உதவியோடு கோவளம் கடற்கரைப் பகுதியில் அந்தப் பார்சலைப் புதைத்துவிட்டேன். சில தினங்கள் கழித்து, தலை உள்ளிட்ட உடல் பாகங்களை மீண்டும் சூட்கேஸ் மூலம் எடுத்துச் சென்று கோவளத்தில் புதைத்தேன்” என்ற `பகீர்’ தகவலை போலீஸாரிடம் தெரிவித்திருக்கிறார்.
பூசாரி வேல்முருகனிடம் போலீஸார் விசாரித்தபோது, ‘‘ஜெயந்தனின் உடல் பாகங்களை நான் புதைக்கவில்லை, அவரின் அஸ்தியைத்தான் கடலில் கரைக்க உதவினேன்” என்று பதில் கூறியிருக்கிறார்.

பாக்யலட்சுமி, வேல்முருகன் ஆகியோரின் இந்த முன்னுக்குப் பின் முரணான தகவல்களால் பழவந்தாங்கல் போலீஸார் குழப்பத்துக்கு ஆளாகினர். மேலும், சம்பவம் நடந்த இடம் பொன்னமராவதி என்பதால், அங்குள்ள காவல் நிலையத்தில், ஜெயந்தனின் கொலை தொடர்பாக புகாரளித்த பிறகு, ஜெயந்தனின் சடலத்தை கோவளம் பகுதியில் தோண்டியெடுக்க பழவந்தாங்கல் போலீஸார் முடிவுசெய்திருக்கிறார்கள்.
இது குறித்து பழவந்தாங்கல் போலீஸாரிடம் பேசினோம். ``கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாக்யலட்சுமியை சென்னை தாம்பரத்திலுள்ள விடுதி ஒன்றில் சந்தித்த ஜெயந்தன் அவரைக் காதலித்து, தன் வீட்டுக்குத் தெரியாமல் திருமணம் செய்திருக்கிறார். விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகிலுள்ள கோயிலில் இவர்களின் திருமணம் நடைபெற்றிருக்கிறது. பாக்யலட்சுமி, முன்பு பாலியல் தொழிலில் ஈடுபட்டுவந்தவர். இந்த உண்மை ஜெயந்தனுக்குத் தெரியவந்ததும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு, பிரிந்துவிட்டனர். இந்தச் சூழலில்தான் பாக்யலட்சுமியை மீண்டும் சந்திக்க புதுக்கோட்டைக்குச் சென்றிருக்கிறார் ஜெயந்தன். அதன் பிறகு அவர் காணாமல்போனதாகப் புகார் வந்தது. பாக்யலட்சுமி தன் வாக்குமூலத்தில் சில முரணான தகவல்களை அளித்திருப்பதால் இப்போதைக்கு ஜெயந்தன் கொலை செய்யப்பட்டுவிட்டார் என்பதை எங்களால் உறுதியாகச் சொல்ல முடியாது’’ என்றனர்.

இது குறித்து சென்னை போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, ``இந்த வழக்கைப் பொறுத்தவரை ஜெயந்தனின் சடலம் கிடைத்தால் மட்டுமே கொலை செய்யப்பட்டார் என்று உறுதியாகச் சொல்ல முடியும். அதுவரை ‘மேன் மிஸ்ஸிங்’ கம்ப்ளெய்ன்ட்டாக மட்டுமே இந்த வழக்கை அணுக முடியும். விசாரணை வளையத்திலிருக்கும் பாக்யலட்சுமிக்கு ஏற்கெனவே திருமணமாகி 18 வயதில் மகன் இருக்கிறான். பொன்னமராவதி போலீஸாருடன் இணைந்து இந்த வழக்கை விசாரிக்கத் திட்டமிட்டிருக்கிறோம்" என்றார்.
வழக்கை யார் கையாள்வது என வழக்கம்போல பழவந்தாங்கல் மற்றும் பொன்னமராவதி போலீஸாரிடையே 'இழுவை' போட்டி ஓடிக்கொண்டிருக்கிறது என்கிறார்கள். இந்த எல்லைப் பிரச்னை காரணமாக, விமான நிலைய ஊழியர் ஜெயந்தனின் வழக்கில் மர்மம் நீடித்துக்கொண்டிருக்கிறது.