Published:Updated:

``கோணங்கி குற்றத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்கவேண்டும்" - பாதிக்கப்பட்டவர்கள் கூட்டறிக்கை

கோணங்கி

"எங்களுக்கு பாதிப்புகள் ஏற்பட்டால் கோணங்கி, முருகபூபதி, மணல்மகுடி நாடகக்குழுவே பொறுப்பு. இதன் காரணம் பொருட்டு எங்களுக்கு எதிரான செயல்பாடுகளை யாரும் முன்னெடுக்கக்கூடாது"

Published:Updated:

``கோணங்கி குற்றத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்கவேண்டும்" - பாதிக்கப்பட்டவர்கள் கூட்டறிக்கை

"எங்களுக்கு பாதிப்புகள் ஏற்பட்டால் கோணங்கி, முருகபூபதி, மணல்மகுடி நாடகக்குழுவே பொறுப்பு. இதன் காரணம் பொருட்டு எங்களுக்கு எதிரான செயல்பாடுகளை யாரும் முன்னெடுக்கக்கூடாது"

கோணங்கி
பிரபல எழுத்தாளர் கோணங்கியால் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டதாக பலரும் சமூக வலைதளத்தில் தொடர்ச்சியாக பதிவுசெய்துவரும் சூழலில், அக்குற்றச்சாட்டுகளை விகடனில் வெளியிட்டதோடு, குற்றம்சாட்டப்பட்ட கோணங்கியிடமும் விளக்கம் கேட்கப்பட்டது. குற்றச்சாட்டுகளை மறுத்த கோணங்கியின் விளக்கமும் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, பாலியல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்தவர்கள் ‘நீதி கோருகிறவர்கள்’ என்கிற தலைப்பில், கோணங்கியின் மறுப்புக்கு எதிராக கண்டன கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில், “எழுத்தாளர் கோணங்கியின் மீது நாங்கள் முன்வைக்கும் பாலியல் ரீதியான குற்றச்சாட்டுக்கு அவர் மறுப்பு தெரிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது. கோணங்கியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம். இதனை, பாதிக்கப்பட்ட சில தனிநபர்களுக்கும் கோணங்கிக்குமான முரணாகவோ சிலரை மட்டும் தேர்வு செய்து அவர்களுக்கு விடுக்கப்படும் தனிநபர் உளவியல் தாக்குதலையோ மிரட்டலையோ ஏற்க இயலாது.

பல்வேறு தரப்பிலிருந்து அளிக்கும் ஆதரவு குரல்களுக்கும் நன்றி. அதேசமயம், கோணங்கி, முருகபூபதி, மணல்மகுடி நாடகக்குழுவிற்கு எதிராக எந்த ஒரு தனிப்பட்ட காரணத்திற்காகவும் வேறு எந்த உள்நோக்கத்திற்காகவும் நாங்கள் பயன்படுத்தப்பட விரும்பவில்லை. பாலியல் துன்புறுத்தலை பகிரங்கப்படுத்துவதன் நோக்கம் கோணங்கி அல்லது முருகபூபதி என்ற நபர்களையோ அல்லது அவர்களது படைப்புகளையோ குறைமதிப்பிற்கு உட்படுத்துவது அல்ல.

கோணங்கியால் பாதிக்கப்பட்டவர்களின் கூட்டறிக்கை
கோணங்கியால் பாதிக்கப்பட்டவர்களின் கூட்டறிக்கை

ஆனால், இதனை உள்வாங்காமல் எதிர் தரப்பிலிருந்து பாதிக்கப்பட்டவர்கள், பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் என்ற முறையில் எங்களை அமைதிப்படுத்தவும் கோணங்கி, முருகபூபதி மற்றும் மணல் மகுடியின் நலன்களை பாதுகாக்கவும் எங்களுக்கு எதிராக உருவாக்கப்படும் அவதூறு, அச்சுறுத்தல், வெளிப்படையான மற்றும் மறைமுக வன்முறைகளைக் கண்டு எங்கள் எவராலும் பொறுத்தக்கொள்ளமுடியாது. எங்களது நோக்கம், எங்களைப்போல இன்னொரு நபருக்கு ஏற்படக்கூடாது என்பதே.

எங்களுக்கு முழுமையாக ஆதரவளிப்பதற்கு ஒரு பொறுப்பான முழுமையான சிகிச்சை முறை இருக்கவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இதில், எழுத்தாளர் கோணங்கி, நாடகாசிரியர் முருகபூபதி ஆகியோரின் உளரீதியான பாதுகாப்பும் ஆற்றுப்படுத்துதலும் அடங்கும். கலை மற்றும் சமூகத்தின் ஒவ்வொரு இடத்திலும் நிகழும் அதிகார சுரண்டல் குறிப்பாக பாலியல் சுரண்டல் போன்ற பிரச்னைகளை உண்மையிலேயே நிவர்த்தி செய்வதற்கான ஒரு முன்மாதிரி செயல்முறையாக இது இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

இந்த சிக்கல்களை உடனடியாக பேசுவதற்கும் வழிநடத்துவதற்கும் கலை இலக்கிய வெளிகளில் ஆளுகைக் குழு ஒன்று அமைக்கப்படவேண்டும் என்றும் பொதுவான எமது கோரிக்கையை வைக்கிறோம்” என்று கூட்டறிக்கை வெளியிட்டுள்ளவர்கள், தங்களது கோரிக்கைகளையும் நிபந்தனைகளை குறிப்பிட்டுள்ளார்கள்.

எழுத்தாளர் கோணங்கி
எழுத்தாளர் கோணங்கி

அதில், “கோணங்கி மற்றும் முருக பூபதி குற்றத்தை பொதுவெளியில் அறிக்கை வாயிலாக ஒப்புக்கொண்டு மன்னிப்பு கோரவேண்டும். இனி இதுபோன்ற பாலியல் அத்துமீறல் குற்றங்கள் கோணங்கி மூலம் யாருக்கும் நடக்கக்கூடாது. இனி, பாதிக்கப்பட்டவர்களை தனிப்பட்ட முறையில் யாரும் அணுகவோ, மிரட்டவோ, உளவியல் ரீதியான, உடல்ரீதியான தனிநபர் தாக்குதலோ தொந்தரவோ செய்யக்கூடாது. இச்சூழலில், உணர்ச்சிப்பூர்வமாகவோ வேறு எந்த வடிவத்திலோ பாதிப்புகள் ஏற்பட்டால் கோணங்கி, முருகபூபதி, மணல்மகுடி நாடகக்குழுவே பொறுப்பு. இதன் காரணம் பொருட்டு எங்களுக்கு எதிரான செயல்பாடுகளை யாரும் முன்னெடுக்கக்கூடாது. இப்படிக்கு நீதிகோருவோர்கள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.