பெங்களூருவில், கடந்த 21-ம் தேதி 30 வயது மதிக்கத்தக்க ஆர்கிடெக்ட் பெண் ஒருவர் இந்திரா நகர் செல்வதற்காக இரவு ராபிடோ புக் செய்துளார். இதையடுத்து இரவு 11.10 மணிக்கு அவர் புக் செய்த இருசக்கர வாகனம் வந்துள்ளது. அந்தப் பெண்ணை இறக்கிவிடச் சென்றுகொண்டிருந்தபோது வழியில் ஓ.டி.பி செக் செய்ய வேண்டும் எனக் கூறி பெண்ணின் செல்போனை வாங்கியுள்ளார் ராபிடோ ஓட்டுநர்.

இதைத் தொடர்ந்து அந்தப் பெண் புக் செய்த இடத்துக்குச் செல்லாமல் வேறு இடத்துக்கு அழைத்துச் செல்ல முயன்றுள்ளார். இதை அறிந்து சுதாரித்துக்கொண்ட அந்தப் பெண், வேகமாக கத்தி உதவி கேட்டுள்ளார். அதனால் எந்தப் பயனும் இல்லை என அறிந்த அவர், விரைவாகச் செயல்பட்டு ஓட்டுநரிடம் இருந்த தன் செல்போனை பிடுங்கிவிட்டு, தான் சேர வேண்டிய இடத்துக்கு அழைத்துச் செல்லுமாறு ஓட்டுநரிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.
இதை எதையும் கண்டுகொள்ளாத ஓட்டுநர் தொடர்ந்து தான் நினைத்த இடத்தை நோக்கி வண்டியைச் செலுத்தியுள்ளார். அதன் பிறகுதான் ஓட்டுநர் குடித்துவிட்டு வண்டி ஓட்டுவதை அறிந்துகொண்ட அந்தப் பெண், தன்னை காப்பாற்றிக்கொள்ள, ஓடும் வாகனத்தில் இருந்து குதித்துள்ளார். இந்த சிசிடிவி காட்சிகள் சமூகவலைதளத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகின்றன.
இதையடுத்து இந்த விவகாரத்தில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக பேசியுள்ள டி.சி.பி லட்சுமி பிரசாத், ``எங்கள் பிரிவில் இது போன்ற சம்பவம் நடப்பது இதுதான் முதல்முறை. பெண்கள் மற்றும் குடிமக்களின் பாதுகாப்பு குறித்து விவாதிக்க அனைத்து கேப் ஒருங்கிணைப்பார்கள், பைக், டாக்ஸி சேவைகள் மற்றும் உணவு விநியோக ஒருங்கிணைப்பாளர்களை கமிஷனர் நேரில் அழைத்து விசாரணை நடத்தியுள்ளார்.
இந்த வழக்கில் குற்றவாளியான தீபக் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர். கடந்த ஐந்து வருடங்களாக பெங்களூரில் வசித்து வந்துள்ளார். இவரின் பின்புலம் தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. இந்திய தண்டனைச் சட்டம் 354 (பெண்ணைத் தாக்குதல்), 366 (பெண்ணைக் கடத்துதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளோம். நிறுவனங்கள் ஒருவரை பணியமர்த்தும்போது அவர்களின் பின்னணியை முற்றிலுமாக சரிபார்க்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.