
பெனடிக்ட் ஆன்டோ, பெண்களிடம் தகாத தொடர்பு வைத்திருப்பதாகக் கூறி, ஆஸ்டின் ஜியோ உள்ளிட்ட சிலர் எங்களிடம் பணம் பறிக்க முயன்றனர். சர்ச்சைக்குரிய அந்த வீடியோவில் இருப்பது பெனடிக்ட் ஆன்டோவின் மாமா மகள்தான்.
‘நாகர்கோவில் காசி’யை மிஞ்சும் அளவுக்கு, பாதிரியார் ஒருவர் பல்வேறு பெண்களுடன் தனிமையில் இருக்கும் ஆபாசக் காட்சிகள் வைரலாகி, கன்னியாகுமரி மாவட்டத்தைக் கலங்கடித்துவருகிறது. இந்த நிலையில், அந்த பாதிரியார், சிறுமிகளுக்கும் வாட்ஸ்அப் மூலம் வலைவிரித்த அதிர்ச்சித் தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது!
கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடை அடுத்திருக்கும் பாத்திமா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்டோ. 29 வயதான இவர், தக்கலை அருகே உள்ள பிலாங்காலை எனும் ஊரில் ‘ஜீரோ மலங்கரை கத்தோலிக்க சபை’-யின் பாதிரியாராக இருக்கிறார். கத்தோலிக்க மத வழக்கப்படி, பாதிரியார்கள் திருமணம் செய்துகொள்ளக்கூடாது. ஆனால், பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோ, பாலியல்ரீதியாக பல பெண்களுடன் தொடர்பிலிருப்பதாக `பகீர்’ புகார் எழுந்திருக்கிறது.
பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோ, தன்னிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக, தற்போது 18 வயதை எட்டியிருக்கும் பெண் ஒருவர் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்குப் புகார் ஒன்றை அனுப்பியிருக்கிறார். அந்தப் புகாரில், ‘நான் பி.எஸ்சி நர்ஸிங் படித்துவருகிறேன். பெனடிக்ட் ஆன்டோ, எங்கள் சர்ச்சில் பாதிரியாராக இருந்தபோது பிரார்த்தனைக்குச் சென்ற என்னிடம் ‘பேட் டச்’ (Bad Touch) செய்துவந்தார். சர்ச் மாறிச் சென்ற பிறகும் பாலியல்ரீதியாக என்னைத் தொந்தரவு செய்து, வீடியோ சாட், வாட்ஸ்அப் சாட் செய்துவந்தார். இதுபோல் அவர் பலருக்கு பாலியல் தொல்லை கொடுப்பது தெரியவந்ததால், இந்தப் புகாரைக் கொடுக்கிறேன். தற்போது பெனடிக்ட் ஆன்டோ, பால்ராஜ் மற்றும் இரண்டு பேர் என்னை மிரட்டிவருகின்றனர்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
புகார் தந்த பெண்ணிடம் நாம் பேசியபோது, “புகாரில் கூறியிருப்பது உண்மைதான். இதற்குமேல் இப்போது என்னால் எதுவும் பேச முடியாது” என்று பேச மறுத்துவிட்டார்.

பாதிரியாரின் நடவடிக்கைகளை நன்கு அறிந்த சிலரிடம் பேசியபோது, ‘‘பெனடிக்ட் ஆன்டோ தக்கலை அருகேயுள்ள பிலாங்காலை புனித விண்ணேற்பு அன்னை சர்ச்சில் ஓராண்டுக்கு முன்பு பாதிரியாராக நியமிக்கப்பட்டார். சர்ச்சில் நல்லவர்போல போதனை செய்துவந்த பாதிரியார், வாட்ஸ்அப் வழியே பெண்களை மயக்கி, அவர்களோடு நெருக்கமாக இருந்திருக்கிறார்.
பிலாங்காலைப் பகுதியைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி ஒருவரின் அக்காவுக்கு வாட்ஸ்அப் வழியே ஆபாச மெசேஜ்களை அனுப்பி, தன் விளையாட்டை ஆரம்பித்திருக்கிறார். இது குறித்து மாணவியின் நண்பரான ஆஸ்டின் ஜியோ என்பவரிடம் பாதிக்கப்பட்டவர்கள் சொல்லியிருக் கின்றனர். இதையடுத்து ஆஸ்டின் ஜியோ தரப்பினர், சம்பந்தப்பட்ட வாட்ஸ்அப் சாட்களை அழிப்பதற்காக, பாதிரியாரை சர்ச்சில் சந்தித்திருக்கின்றனர். அப்போது, பாதிரியாரின் செல்போனில், அவர் பல பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ, போட்டோக்களும் இருந்திருக்கின்றன. அனைத்தையும் தங்கள் செல்போனுக்கு மாற்றிய ஆஸ்டின் ஜியோ தரப்பு, பாதிரியாரையும் மிரட்டியிருக்கிறது. அதிர்ந்துபோன பாதிரியார், வேலையை ராஜினாமா செய்வதாக பேப்பரில் எழுதி, கையெழுத்து போட்டு அவர்களிடம் கொடுத்திருக்கிறார்.
இதையடுத்து பாதிரியாரின் தந்தை செல்வராஜ், ஆஸ்டின் ஜியோமீது கொலை மிரட்டல் புகார் கொடுத்ததால், போலீஸார் ஆஸ்டின் ஜியோவைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஆஸ்டின் ஜியோவின் உறவினர்கள், பாதிரியார் குறித்த வீடியோக்களை வெளியிட்டுவிட்டனர். சர்ச்சில், ஒரு பெண்ணுக்குத் திருமணம் செய்துவைத்த பாதிரியார் ஆன்டோ, அதே பெண்ணுடன் காமக்களியாட்டத்தில் ஈடுபடும் காட்சிகளும் சர்ச்சைக்குரிய வீடியோவில் இடம்பெற்றிருக்கின்றன” என்கிறார்கள்.
ஆஸ்டின் ஜியோவின் தாய் மினி அஜிதா நம்மிடம் பேசும்போது, “பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோ, என் மகனிடம் எழுதிக்கொடுத்திருந்த ராஜினாமா கடிதத்தைப் பாதிரியாரின் உறவினர்களிடமே திருப்பிக் கொடுக்கச் சென்றான். ஆனால், பாதிரியாரின் தந்தை செல்வராஜுக்கு என் மகன் கொலை மிரட்டல் விடுத்ததாகப் பொய்ப் புகார் அளித்து, சிறையில் அடைத்துவிட்டனர். ஒரு குற்றத்தை மறைக்கப் பல நாடகங்கள் ஆடுகின்றனர்” என்றார்.

தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படும் பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோவின் செல்போன் சுவிட்ச் ஆஃப் ஆகிவிட்ட நிலையில், அவரின் சித்தப்பா பால்ராஜிடம் இந்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்டோம். “பெனடிக்ட் ஆன்டோ, பெண்களிடம் தகாத தொடர்பு வைத்திருப்பதாகக் கூறி, ஆஸ்டின் ஜியோ உள்ளிட்ட சிலர் எங்களிடம் பணம் பறிக்க முயன்றனர். சர்ச்சைக்குரிய அந்த வீடியோவில் இருப்பது பெனடிக்ட் ஆன்டோவின் மாமா மகள்தான். திருமணமாகி, சென்னையில் இருக்கும் அந்தப் பெண் தரப்பில் புகார் எதுவும் அளிக்கப்படவில்லை. பெனடிக்ட் ஆன்டோ செல்போனில் இருந்த எண்களைத் தொடர்புகொண்டு புகார் அளிக்கும்படி ஆஸ்டின் ஜியோவின் உறவினர்கள் தொடர்ந்து கூறிவருகின்றனர். தற்போது புகார் கொடுத்திருக்கும் பெண்ணும்கூட, ஆஸ்டின் ஜியோ தரப்பினரின் மிரட்டலுக்கு பயந்தே புகார் கொடுத்திருக்கிறார்” என்றார்.
இந்த வழக்கு குறித்து மாவட்ட காவல்துறை தரப்பில் கேட்டபோது, ‘‘இரு தரப்பும் மாறிமாறிப் புகார் கொடுத்திருப்பதால், இது குறித்து தீவிரமாக விசாரித்துவருகிறோம். விரைவில் நடவடிக்கை இருக்கும்” என்று சுருக்கமாக முடித்துக்கொண்டனர்.