
தலையங்கம்
காவல் துறையினரைப் பார்த்தால் சமூக விரோதிகளுக்குத்தான் பயம் வரவேண்டும். பொதுமக்களுக்கு அவர்களிடம் பாதுகாப்பு உணர்வும் நம்பிக்கையும்தான் வரவேண்டும். ஆனால், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர்மீது நடந்த கொடூரத் தாக்குதலும், அதைத் தொடர்ந்து அவர்கள் மரணமடைந்ததும் `காவல்துறை உங்கள் நண்பன்' என்ற வாசகத்தையே அர்த்தமற்றதாக மாற்றியது.
சாத்தான்குளம் சம்பவத்தைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் எழுந்த கொந்தளிப்பு, `காவல்துறையின் அத்துமீறலால் நிகழும் கடைசித் துயராக இது இருக்கட்டும்' என்ற நினைப்பை ஏற்படுத்தியது. ஆனால், நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் அம்பலமாகியிருக்கும் ஒரு மனித உரிமை மீறல், காவல்துறையின் கறுப்புப் பக்கத்துக்கு மீண்டும் ஒரு துயர சாட்சியாக மாறியிருக்கிறது.
ஐ.பி.எஸ் முடித்த கையுடன் அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி பணியில் சேர்ந்தவர் பல்வீர் சிங். காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்து வரப்படுகிறவர்களை இவர் கடுமையாகத் தாக்குகிறார், பற்களைப் பிடுங்கி சித்திரவதை செய்கிறார் என்று வெளியான புகார்களின் அடிப்படையில் இப்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். உயர் காவல் அதிகாரியான பல்வீர் சிங்மீது மனித உரிமை ஆணையத்திடமும் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்திருக்கிறார்கள்.
‘‘பொது இடங்களில் குடிபோதையில் கலாட்டா செய்கிறவர்கள், தனிப்பட்ட பிரச்னைகள் காரணமாக அடிதடியில் ஈடுபடுகிறவர்கள், ஏன், குடும்பப் பிரச்னைக்காகக் காவல் நிலையம் வந்தவருக்குக்கூட தன் ‘பல் பிடுங்கி வைத்திய’த்தைச் செய்திருக்கிறார் பல்வீர் சிங்” என்பதுதான் பாதிக்கப்பட்டவர்களின் புகாராக இருக்கிறது. ‘விசாரணைக்காக அழைத்து வரப்படுகிறவர்களின் வாயில் கற்களைக் கொட்டி, கன்னத்தில் அறைந்து சித்திரவதை செய்துவிட்டு, இந்தத் தாக்குதலில் ஆடும் பற்களைக் குறடு வைத்து ரத்தம் வழிய வழிய பல்வீர் சிங் பிடுங்கினார்' என்று பாதிக்கப்பட்டவர்கள் கூறியிருக்கிறார்கள்.
நியாயமாக இந்த அத்துமீறலுக்கு முறைப்படி காவல்துறை பல்வீர் சிங்மீது வழக்கு பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அவருக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் யார் யார் என்று விசாரித்து வழக்கில் சேர்த்திருக்க வேண்டும். சாத்தான்குளத்தில் அப்படித்தான் நடைபெற்றது. ஆனால், இங்கு உதவி ஆட்சியரின் நீதி விசாரணை மட்டுமே நடைபெறுகிறது. இதற்கிடையே `பல்வீர் சிங் நல்லவர், திறமையான அதிகாரி. அவர் வந்த பிறகுதான் குற்றச் செயல்கள் குறைந்து ஊரே அமைதியாக இருக்கிறது. அவரது பணியிடை நீக்கத்தை ரத்து செய்யுங்கள்' என்று சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன. புகார் கொடுத்தவர் ஒருவர் ஏதோ நெருக்கடிக்கு ஆளாகி, ‘நான் கீழே விழுந்துதான் பல்லை உடைத்துக்கொண்டேன்' என்று சொல்கிறார்.
30-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், 10 பேர் மட்டுமே புகார் தந்திருக்கிறார்கள். இவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். நீதி விசாரணை நியாயமாக நடத்தப்பட்டு, இவர்களுக்கு உரிய நீதி பெற்றுத் தரப்பட வேண்டும். இதுபோன்ற சித்திரவதைகள் இனியும் தொடராமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.