கட்டுரைகள்
Published:Updated:

அநீதிக்கு எதிரான மல்யுத்தம்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

தலையங்கம்

மல்யுத்தக் களத்தில் போட்டியாளர்களுடன் வீரத்துடனும் தீரத்துடனும் போராடி ஒலிம்பிக் பதக்கம் வென்ற சாக்‌ஷி மாலிக் மற்றும் பஜ்ரங் புனியா, காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்று நம் நாட்டுக்குப் பெருமை சேர்த்த வினேஷ் போகட் போன்ற மல்யுத்த வீரர்களும் வீராங்கனைகளும் இன்று நம் நாட்டில் யாரோடு போராடிவருகிறார்கள்?

‘மல்யுத்த வீராங்கனைகளை தொடர்ச்சியாகப் பாலியல் வன்கொடுமை செய்கிறார்' என்று குற்றம் சாட்டப்படும், இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்கோடு மட்டும் இவர்கள் போராடவில்லை. ஆளும் பா.ஜ.க-வின் எம்.பி-யுமாக இருக்கும் இவரை சட்டம் நெருங்க முடியாமல் பாதுகாக்கும் மத்திய ஆட்சியாளர்கள் மற்றும் அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் டெல்லி போலீஸார் ஆகியோரையும் எதிர்த்துதான் இன்று இவர்கள் டெல்லி வீதியில் போராடிவருகிறார்கள்.

‘இனி இன்னொரு வீராங்கனைக்கு இதுபோல் நடக்கக்கூடாது' என்பதற்காக, மிரட்டல்கள், உருட்டல்கள், தங்கள் எதிர்காலம் என்று அனைத்தையும் துச்சமாக மதித்து இரண்டு வாரங்களுக்கு மேலாகப் போராடிவரும் இவர்களுக்கு அபினவ் பிந்த்ரா, நீரஜ் சோப்ரா போன்ற ஒலிம்பிக் பதக்கம் வென்ற வீரர்கள் ஆதரவுக்கரம் நீட்டினாலும், வெளிப்படையாக ஆதரிக்க முடியாத அளவுக்கு சுயநலமும் அச்சமும் பலரையும் ஆட்கொண்டிருக்கின்றன.

தலையங்கம்
தலையங்கம்

கடந்த ஜனவரி மாதம் முதன்முதலில் இவர்கள் வீதிக்கு வந்தார்கள். மத்திய அரசு உடனே மேரி கோம் தலைமையிலான ஒரு கமிட்டியை அமைத்தது. அந்தக் கமிட்டி நடத்திய விசாரணை முழுமையாக இல்லை என்று ஒரு பக்கம் எதிர்ப்புகள் எழுந்தன. மேரி கோம் கமிட்டி விசாரித்து அளித்த அறிக்கையைக்கூட அரசு இன்னும் வெளியிடவில்லை.

எந்த நடவடிக்கையும் இல்லாததால் மீண்டும் வீதிக்கு வந்திருக்கிறார்கள் இவர்கள். தங்களுக்கு எப்படி கொடுமை நடந்தது என்று இரண்டு வீராங்கனைகள் முறைப்படி பிரிஜ் பூஷண்மீது புகார் கொடுத்தும், டெல்லி காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. போராடும் வீராங்கனைகள் உச்ச நீதிமன்றம் சென்ற பிறகே அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதைத் தாண்டி எதையுமே போலீஸ் செய்யவில்லை. ஆனால், போராடும் வீராங்கனைகளுக்கு எல்லா நெருக்கடிகளும் கொடுக்கப்படுகின்றன. போராட்டம் நடக்கும் இடத்தில் மின்சாரம், குடிநீர் என எல்லாவற்றையும் தடை செய்தும் அச்சுறுத்திப் பார்க்கிறார்கள். அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க வருவோர் தடுக்கப்படுகிறார்கள்.

பிரிஜ் பூஷண்மீது ஏற்கெனவே பல புகார்கள் இருக்கின்றன. பெண்களுக்கு நேரும் அத்துமீறல்கள் குறித்துப் புகார் தெரிவிப்பதற்கான கமிட்டியைக்கூட இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பு ஆண்களால் நிறைத்து வைத்திருக்கிறது. இவ்வளவு பிரச்னைகள் இருந்தும் அவர்மீது குறைந்தபட்ச விசாரணைகூட இல்லை என்பதற்கு, அவரின் அரசியல் பின்புலம் மட்டுமே காரணமாக இருக்க முடியும்.

இந்தப் பிரச்னையால், டெல்லியில் நடைபெற வேண்டிய ஆசிய மல்யுத்தப் போட்டிகள் கஜகஸ்தான் நாட்டுக்கு மாற்றப்பட்டுள்ளன. இந்தியாவைப் பெருமைகொள்ள வைக்குமாறு ஒரு வீராங்கனை பதக்கம் வென்றால், அவருக்கு வரவேற்பு கொடுக்கிறோம்; விருதுகள் வழங்குகிறோம். ஆனால், அவர்கள் தங்கள் பிரச்னைகளுக்காக வீதிக்கு வரும்போது, அவர்களின் குரல் காதில் விழாததுபோல இருப்பது மனசாட்சி உள்ள சமூகத்துக்கு அழகல்ல.