கட்டுரைகள்
Published:Updated:

யாரைப் பாதுகாக்க, பெண்களை பலி கொடுக்கிறது கலாஷேத்ரா?

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

தலையங்கம்

கலாஷேத்ரா கல்வி நிறுவனத்தில் நடந்திருக்கும் பாலியல் கொடுமைகளை மூடிமறைக்க, மாநில அரசு தொடங்கி மத்திய அரசு வரை அதிகார துஷ்பிரயோகம் செய்திருப்பது அதிரவைக்கிறது!

சென்னை, திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளையின்கீழ் இயங்கிவருகிறது ருக்மிணி தேவி நுண்கலைக் கல்லூரி. மத்திய அரசின் கட்டுப்பாட்டிலிருக்கும் இந்தக் கல்லூரியின் முன்னாள் மற்றும் இந்நாள் மாணவிகள் சமீபத்தில், அங்கிருக்கும் பேராசிரியர்கள் சிலர்மீது பாலியல் புகார்கள் தெரிவித்தனர். குறிப்பாக, பேராசிரியர் ஹரிபத்மன் மீது அறக்கட்டளை இயக்குநர் ரேவதி ராமச்சந்திரனிடம் புகார் தெரிவித்தனர். ஆனால், நடவடிக்கைக்கு பதிலாக, அந்தப் பெண்கள் அனைவரும் மிரட்டப்பட்டனர். சமூக வலைதளங்களில் பதிவான பிறகுதான், விஷயம் வீதிக்கு வந்தது.

அதீத அக்கறை எடுத்துக்கொண்ட தேசிய மகளிர் ஆணையம், விசாரணை நடத்தச் சொல்லி தமிழக டி.ஜி.பி-க்கு கடிதம் எழுதியது. இடையில் என்ன நடந்ததோ... அதைத் திரும்பப் பெற்றுக்கொண்டது. தமிழக டி.ஜி.பி-யும் கையைக் கட்டிக்கொண்டுவிட்டார். தேசிய மகளிர் ஆணையத் தலைவர் நேரடியாக விசாரணை மேற்கொண்டபோது, `காவல்துறை உடன் வரத் தேவையில்லை' என்று தவிர்த்தார். ஆக, மாநில மற்றும் மத்திய அரசுத் துறைகளின் அடுத்தடுத்த நடவடிக்கைகள், ஒட்டுமொத்தமாக விஷயத்தைக் குழி தோண்டிப் புதைக்கும் வகையில்தான் இருந்தன.

இந்த நிலையில், மார்ச் 30 அன்று நூற்றுக்கணக்கான மாணவிகள் வீறுகொண்டு கல்லூரி வளாகத்தில் போராட்டத்தைத் தொடங்கவே, மாநில அரசு சற்றே அசைந்தது. தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவர் குமாரி, போராட்டக் களத்துக்கு சென்று மாணவிகளிடம் நேரடி விசாரணை நடத்தினார். அதேநேரம், முன்னாள் மாணவி ஒருவர் அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க, ஒருவழியாக ஹரிபத்மன் மீது பாலியல் வன்கொடுமைச் சட்டத்தின்கீழ் வழக்குகள் பதியப்பட்டிருக்கின்றன.

பத்து, பதினைந்து நாள்களுக்கு முன்பே, கலாஷேத்ராவின் முன்னாள் மாணவிகளும், மாணவிகளும் பாலியல் புகார்கள் அளிக்கிறார்கள். இதில் குற்றம் சுமத்தப்பட்டவரை காவல்துறை அணுகுவதற்குள்... தேசிய மகளிர் ஆணையம், மாநில டி.ஜி.பி., மாநில முதல்வர், மாநில மகளிர் ஆணையத் தலைவி, காவல்துறை கமிஷனர் தலைமையில் கல்லூரிக்குப் பாதுகாப்பு என... இத்தனை சுற்றுகளுக்கு இந்தப் பிரச்னை செல்வதற்குக் காரணம் என்ன... அரசியல் முதல் அதிகாரம் வரை அனைத்து அஸ்திரங்களையும் பாய்ச்சி, பாலியல் குற்றம் சுமத்தப்பட்டவர்களைப் பாதுகாக்க முயன்றது ஏன்?

மாணவிகள் உடுத்தும் புடவையில் உடல் தெரியக்கூடிய அளவைக்கூட நிர்ணயித்து வைத்திருக்கும் கலாஷேத்ரா நிர்வாகம், அந்தப் பெண்களையெல்லாம் பலிகொடுத்தாவது தங்களின் `மரியாதை'யைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்று துடிப்பதுதான் அதன் `கலாசாரமா'?