அரசியல்
அலசல்
Published:Updated:

‘போதை ஊசி போட்டால் ஆணாக மாறிவிடலாம்’ - பெண்களையும் வளைத்த கும்பல்... தள்ளாடும் ஈரோடு!

ஈரோடு
பிரீமியம் ஸ்டோரி
News
ஈரோடு

ஈரோட்டில் அறை எடுத்துத் தங்கிப் பயிலும் மாணவர்கள், இளைஞர்களைக் குறிவைத்து போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகள், கஞ்சா விற்பனை செய்யப்படுவது அதிகரித்திருக்கிறது.

ஈரோட்டில் போதை ஊசிப் பழக்கம் தீயாகப் பரவிவருகிறது. இளம்பெண்களையும், சப்-இன்ஸ்பெக்டரின் மகனையும்கூட போதைப் பழக்கத்தில் தள்ளி, அவர்களைக்கொண்டே அதை விற்கவைத்த கொடுமையும் நடந்திருக்கிறது.

ஈரோடு கைகாட்டிவலசு பகுதியில் வீட்டை வாடகைக்கு எடுத்து சிலர் போதை மாத்திரை, ஊசி, கஞ்சா ஆகியவை விற்பனை செய்வதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த வீட்டில் போலீஸார் சோதனையிட்டபோது அங்கு இரண்டு பெண்கள் உட்பட ஏழு பேர் போதை மயக்கத்தில் சுயநினைவின்றிக் கிடந்திருக்கின்றனர். போதை தெளிந்த பின்னர் ஏழு பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தபோது அவர்கள், ஈரோடு வீரப்பன்சத்திரத்தைச் சேர்ந்த சுதர்சன் (21), பெரியசேமூரைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் மகன் விக்னேஷ் (26), சூளையைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் (24), இளங்கோ (25), கருங்கல்பாளையத்தைச் சேர்ந்த பசுபதி (23), வெட்டுக்காட்டுவலசைச் சேர்ந்த சமீம்பானு (20), பிரீத்தி என்கிற இந்திராணி (22) என்று தெரியவந்தது. ஆன்லைன் நிறுவனம் நடத்துவதுபோல் வாடகைக்கு வீடெடுத்துத் தங்கி, இவர்கள் போதை மாத்திரைகள், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுவந்தது விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

‘போதை ஊசி போட்டால் ஆணாக மாறிவிடலாம்’ - பெண்களையும் வளைத்த கும்பல்... தள்ளாடும் ஈரோடு!

இதேபோல கடந்த 7-ம் தேதி ஈரோடு மாதவ கிருஷ்ணா வீதியில் போதை ஊசி விற்ற இரு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து போதை ஊசி விற்ற பணம் ரூ.1.3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இப்படி, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஈரோட்டில் போதை மாத்திரை, ஊசி விற்பனை செய்தது தொடர்பாக ஒன்பது பேர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். போதைக்கு அடிமையாகி, காணாமல்போன தன் மகனைக் கண்டுபிடித்துத் தருமாறு தாய் ஒருவர், ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு சமீபத்தில் சாலைமறியலில் ஈடுபட்டது போதையில் ஈரோடே தள்ளாடுவதற்கு உதாரணம் எனச் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இது குறித்து நம்மிடம் பேசிய போலீஸார், “ஈரோட்டில் அறை எடுத்துத் தங்கிப் பயிலும் மாணவர்கள், இளைஞர்களைக் குறிவைத்து போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகள், கஞ்சா விற்பனை செய்யப்படுவது அதிகரித்திருக்கிறது. புற்றுநோய் உள்ளிட்ட நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வலி தெரியாமலிருக்க வழங்கப்படும் வலி நிவாரணி மாத்திரைகள், மருந்துகள் ஆகியவற்றை போதைக்காகப் பயன்படுத்துகிறார்கள். மருத்துவரின் பரிந்துரையின்றி இந்த மாத்திரைகளை வழங்கக் கூடாது என்பதால், போலியாக பிரிஸ்க்ரிப்ஷன்களைத் தயாரித்து, அதில் வேறு சில மாத்திரைகளையும் சேர்த்து எழுதி, இந்த வலி நிவாரணி மருந்துகளை ஆன்லைன் ஆப் மூலம் ஆர்டர் செய்கிறார்கள். இந்த வலி நிவாரண மாத்திரைகளைத் தண்ணீரில் கரைத்து, ஊசி மூலமாக உடல் நரம்புகளில் செலுத்திக்கொள்கின்றனர். ஈரோடு நகரிலுள்ள ஒருசில மருந்துக் கடைகள், மருந்து விற்பனைப் பிரதிநிதிகள் மற்றும் அண்டை மாநிலமான கர்நாடகாவிலிருந்து இந்த மருந்துகள் பெறப்படுகின்றன. இதற்கு, காவல்துறையில் இருக்கும் சிலரும் உடந்தை. இதுவரை கைதான ஒன்பது பேருமே 25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள். எனவே, இவர்களை இயக்கும் இடத்தில் வேறு சிலர் இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்” என்றனர்.

சசிமோகன்
சசிமோகன்

இது குறித்து ஈரோடு மாவட்ட மதுவிலக்குப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் பவித்ராவிடம் விளக்கம் கேட்டோம். “கைகாட்டிவலசு பகுதியில் கைதுசெய்யப்பட்ட பெண்கள் உள்ளிட்ட ஏழு பேரும் கடந்த ஓராண்டுக்கும் மேலாக இந்த போதைப் பழக்கத்துக்கு அடிமையாக இருப்பவர்கள். மருந்து விற்பனைப் பிரதிநிதிகள் அல்லது மருந்துக் கடைகளிலிருந்து 10 மாத்திரைகள் அடங்கிய ஓர் அட்டையை ரூ.300-க்கு வாங்கி, ரூ.3,000 வரை விற்பனை செய்திருக்கிறார்கள். கைதான இரு பெண்களில் ஒருவர், கிராப் வெட்டி ஆண்களைப்போல உடையணிபவர். ‘இந்த ஊசியைச் செலுத்திக் கொண்டால் ஹார்மோன்களில் மாற்றம் ஏற்பட்டு, ஆணாக மாறிவிடுவாய்’ எனச் சிலர் கூறிய பொய்யை நம்பி, முதன்முறையாக போதை ஊசியைச் செலுத்தியிருக்கிறார். பின்னர், போதைப் பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டதாகத் தெரிவித்தார்.

மேலும், சமீம் பானுவும், பிரீத்தி என்கிற இந்திராணியும் தங்கள் குடும்பத்தினரிடம் வேலைக்குச் செல்வதாகக் கூறிவிட்டு, கைகாட்டிவலசு பகுதியிலுள்ள வீட்டுக்குக் காலையில் வந்துவிட்டு, நாளொன்றுக்கு இரண்டு முறை போதை ஊசி செலுத்திக்கொண்டிருந்திருக்கின்றனர். போதை மாத்திரை தேவைப்படுவோருக்கு நேரில் சென்று சப்ளையும் செய்துவந்திருக்கின்றனர். பெண்கள் என்பதால் யாருக்கும் சந்தேகமும் ஏற்படவில்லை. இவர்களுக்கு யார் மருந்துகளை விற்பனை செய்தார்கள் என்பது குறித்து விசாரித்துவருகிறோம். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 86 மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா, இரண்டு விலையுயர்ந்த இரு சக்கர வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன” என்றார்.

``ஈரோட்டில் தலைதூக்கியிருக்கும் போதைப்பொருள் பழக்கத்தை ஒழித்துக்கட்ட என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறீர்கள்?’’ என மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சசிமோகனிடம் கேட்டோம். “போதை மாத்திரைகள் விற்பனை செய்ததாக கடந்த ஓராண்டில் சித்தோட்டில் ஒரு வழக்கும், ஈரோடு நகரத்தில் இரண்டு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு, அதில் தொடர்புடையவர்கள் கைதுசெய்யப் பட்டிருக்கின்றனர். கஞ்சா விற்பனை கட்டுப்படுத்தப்பட்டிருப்பதால், மாற்று போதையாக இளைஞர்கள் இந்த வலி நிவாரணி மருந்துகளை நோக்கிச் செல்கிறார்கள். இதையும் தடுக்க, சிறப்பு நடவடிக்கை எடுத்துவருகிறோம்” என்றார்.

ஒழித்துவிட்டுச் சொன்னால் பாராட்டலாம்!