அரசியல்
அலசல்
Published:Updated:

“மூதாட்டிகள் என்றால், எதிர்ப்பு பலமாக இருக்காது!” - வீறிடவைத்த வில்லங்க காமுகன்

செல்வம் கைது
பிரீமியம் ஸ்டோரி
News
செல்வம் கைது

அளவுக்கதிகமான போதைப் பழக்கமே, மூதாட்டிகளை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யும் அளவுக்கு செல்வத்தைக் கொண்டு போய் நிறுத்தியிருக்கிறது

தனியாக வசித்துவந்த இரண்டு மூதாட்டிகளை அடுத்தடுத்து பாலியல் வன்கொடுமை செய்து, கொலைசெய்த சீரியல் கில்லரைப் பார்த்து பள்ளிபாளையமே பதறிக்கிடக்கிறது!

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகேயுள்ள ஓடப்பள்ளியைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் மனைவி பாவாயி. 65 வயது மூதாட்டியான இவர், கடந்த மார்ச் மாதம் கரும்புத்தோட்டத்தில், ஆடைகள் கிழிக்கப்பட்ட நிலையில் பிணமாகக் கிடந்தார். அவர் அணிந்திருந்த ஆறரை பவுன் தங்க நகையும் காணாமல்போயிருந்தது. கொலையாளி யார் என்று தெரியாமல், போலீஸார் திணறிவந்த நிலையில், அண்மையில் நடைபெற்ற இதே பாணியிலான மற்றொரு கொலைச் சம்பவம் போலீஸாரை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஓடப்பள்ளி
ஓடப்பள்ளி

ஓடப்பள்ளியிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலுள்ள அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த 60 வயதான பழனியம்மாள் கடந்த 12-ம் தேதி, கால்நடைகளை மேய்க்கச் சென்றபோது, ஆடைகள் கிழிக்கப்பட்ட நிலையில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலையாகிக் கிடந்தார். அவரின் காதுகளில் இருந்த கம்மலும் காணாமல்போயிருந்தது. வயதான மூதாட்டிகள் இருவர் ஒரே பாணியில் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்ட சம்பவங்களில் கம்மலை க்ளூவாகவைத்து துப்பறிந்து, குற்றவாளியைக் கொத்தாகத் தூக்கியிருக்கிறது தனிப்படை போலீஸ்.

குற்றவாளி குறித்து நம்மிடம் பேசிய தனிப்படை போலீஸார், “சேலம் மாவட்டம், ஜலகண்டபுரத்தைச் சேர்ந்தவன் செல்வம். 32 வயதாகும் இவனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. விவசாயக் கூலி வேலை செய்துவந்த செல்வம், எந்த நேரமும் மது போதையிலேயே இருப்பான். இந்த நிலையில்தான், தனியாக இருக்கும் மூதாட்டிகளைக் குறிவைத்து, பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அவர்களைக் கொலையும் செய்திருக்கிறான்.

செல்வம் கைது
செல்வம் கைது

முதலில் கொலைசெய்யப்பட்ட மூதாட்டி பாவாயியின் கணவரும் மகனும் இறந்துவிட்டனர். மகளை வெளியூரில் திருமணம் செய்து கொடுத்து விட்டுத் தனியாக வசித்துவந்திருக்கிறார். வருமானத்துக்காக அருகிலுள்ள காட்டுப்பகுதிக்குச் சென்று, தென்னை ஓலைகளைப் பொறுக்கி வந்து விளக்குமாறு தயாரிப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் பாவாயி. இதை அறிந்துகொண்ட செல்வம், பாவாயி தனியாக இருப்பதைப் பயன்படுத்திக்கொண்டு தலைக்கேறிய போதையோடு சென்று அவரைப் பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்திருக்கிறான். அதோடு, அவர் அணிந்திருந்த ஆறரை பவுன் தங்க நகையையும் பிடுங்கிச் சென்று விற்று, செலவு செய்திருக்கிறான்.

மீண்டும் பணத்தேவை ஏற்பட்டதால், அடுத்ததாக பழனியம்மாளைக் கொலை செய்திருக்கிறான். பழனியம்மாள் வசித்துவந்த பகுதியில் செல்வத்தின் அண்ணி மதலைமேரி என்பவரும் குடியிருக்கிறார். அந்த வகையில், பழனியம்மாளைக் குறித்துத் தெரிந்துகொண்ட செல்வம், அவர் தனியாகச் சென்று கால்நடைகளை மேய்த்துக்கொண்டிருந்தபோது, அவரைத் தாக்கி பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறான். அப்போது, ‘நான் உனக்குப் பாட்டி முறைடா... என்னை விட்டுருடா...’ என்று பழனியம்மாள் கெஞ்சியும், இரக்கமே இல்லாமல் அவரின் தலையில் கல்லால் அடித்துக் கொலை செய்துவிட்டு, பழனியம்மாள் அணிந்திருந்த கம்மலையும் கழற்றிச் சென்றுவிட்டான்.

செல்வம்
செல்வம்

அடுத்தடுத்து நடந்த இந்தக் கொலைகளை, சீரியல் கில்லரின் கைவரிசையாக இருக்கலாமோ என்ற சந்தேகத்துடன் விசாரித்தோம். அப்போதுதான், மூன்று வருடங்களுக்கு முன்பு, பழனியம்மாள் தன் வீட்டில் கழற்றிவைத்திருந்த கம்மலை, தன் அண்ணி வீட்டுக்கு வந்திருந்த செல்வம் திருடியதும், பிறகு பஞ்சாயத்துப் பேசி அவனிடமிருந்த கம்மலை அங்கிருந்தவர்கள் வாங்கி பழனியம்மாளிடம் கொடுத்ததும் எங்கள் விசாரணையில் தெரியவந்தது. இந்தத் துப்புதான் அவரைப் பிடிக்க உதவியது. கொலைசெய்யப்பட்ட பழனியம்மாளின் கம்மலைக் கழற்றி, இன்னொரு பெண்ணிடம் கொடுத்துவைத்திருந்தார் செல்வம்.

சந்திரகுமார்
சந்திரகுமார்

அதன் பிறகு ஜலகண்டபுரம், வனவாசி என்று இடம்விட்டு இடம் மாறி பதுங்கிக் கொண்டிருந்த செல்வத்தை, தாஜ் நகருக்கு வரச்செய்து கைதுசெய்தோம். விசாரணையின் போது, ‘வயதான பாட்டிங்க என்றால், பெரிதாக எதிர்ப்பு காட்ட முடியாது. நான் ஈஸியாக என்னோட ஆசையைத் தீர்த்துக்குவேன். அதனால்தான், பாட்டிகளாகக் குறிவைத்தேன். இன்னும் ஓரிரு பாட்டிகளை நோட்டம்விட்டபோதுதான், என்னைக் கைது பண்ணிட்டீங்க. எப்போ சார் என்னை வெளியில விடுவீங்க?’ என்று அவன் வில்லங்கமாகக் கேட்டதும், நாங்களே ஆடிப்போய் விட்டோம்” என்றனர் விலகாத அதிர்ச்சியோடு.

பள்ளிபாளையம் காவல் நிலைய ஆய்வாளர் சந்திரகுமார், “அளவுக்கதிகமான போதைப் பழக்கமே, மூதாட்டிகளை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யும் அளவுக்கு செல்வத்தைக் கொண்டு போய் நிறுத்தியிருக்கிறது. எவ்வளவு தூரமானாலும் காலில் செருப்பின்றி நடந்தே போகும் அவன், எதிர்ப்படுபவர்களிடமெல்லாம், ‘பஸ்ஸுக்குக் காசு கொடுங்க...’ என்று கேட்டு வாங்கி, அதில் மது குடிப்பதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறான். ஏற்கெனவே, சேலத்தில் இதுபோல் ஒரு வழக்கு இருப்பதால், அதிலும் செல்வத்துக்குத் தொடர்பிருக்கிறதா என்று விசாரித்துவருகிறோம்” என்றார்.