அலசல்
Published:Updated:

நாமக்கல் பெண் பாலியல் படுகொலை... குற்றவாளிகளை மூடி மறைக்கிறதா காவல்துறை?

விவேகானந்தன் -நித்யா
பிரீமியம் ஸ்டோரி
News
விவேகானந்தன் -நித்யா

மீன்பிடிக்க வந்த சிறுவன்தான் குற்றவாளி என்கிறது போலீஸ். சம்பவம் நடந்த இடத்தில் மீன்பிடித் தூண்டில்கள் மூன்று கிடந்தன. ஒருவனால் மட்டும் கொலை பண்ணியிருக்க முடியாது.

‘‘வடமாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் பாதுகாப்புடன் இருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்துவதற்காக, ‘பாலியல், கொலைக் குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்ட வட இந்தியத் தொழிலாளர்களையும் காப்பாற்ற நினைக்கிறது போலீஸ்’’ என்றொரு `பகீர்’ குற்றச்சாட்டு கிளம்பியிருக்கிறது.

நாமக்கல் மாவட்டம், கபிலர்மலை ஒன்றியத்திலுள்ள வி.கரப்பாளையத்தைச் சேர்ந்தவர் நித்யா. இரு பெண் குழந்தைகளின் தாயான நித்யா, கடந்த 11-ம் தேதி ஆடு மேய்க்கச் சென்றபோது பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொலைசெய்யப்பட்டார். இந்த வழக்கில், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவனை போலீஸ் கைதுசெய்தது. ஆனால், பாதிக்கப்பட்ட குடும்பமோ அவன் மட்டும் குற்றவாளி இல்லை என்கிறது.

விவேகானந்தன்
விவேகானந்தன்

இது குறித்து நம்மிடம் பேசிய நித்யாவின் கணவர் விவேகானந்தன், “எங்கள் ஊரிலிருந்து சிறிது தூரத்தில் வெல்லம் தயாரிக்கும் கம்பெனி இருக்கிறது. அங்கு வேலை செய்துவரும் வட இந்தியத் தொழிலாளர்களில் யாரோதான் இதைச் செய்திருக்க வேண்டும் என்று எங்களுக்குச் சந்தேகம். இது குறித்து ஜேடர்பாளையம் போலீஸாரிடம் தகவல் தெரிவித்தோம். ஆனால், போலீஸாரோ என்னிடம் விசாரித்த அளவுக்குக்கூட, அவர்களை விசாரிப்பதில் ஆர்வம் காட்டவில்லை” என்றார்.

நித்யா
நித்யா

விவேகானந்தனின் அண்ணன் பூபதி நம்மிடம், ‘‘மீன்பிடிக்க வந்த சிறுவன்தான் குற்றவாளி என்கிறது போலீஸ். சம்பவம் நடந்த இடத்தில் மீன்பிடித் தூண்டில்கள் மூன்று கிடந்தன. ஒருவனால் மட்டும் கொலை பண்ணியிருக்க முடியாது. ஏற்கெனவே எங்கள் ஊரில் மீன்பிடிக்க வந்த வடமாநில இளைஞர்களை நானே துரத்தியிருக்கிறேன். இந்தப் பாதகத்தில், வடமாநில இளைஞர்கள் இருவரும் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். ஆனால், வடமாநிலத் தொழிலாளர்கள் குறித்த சென்சிட்டிவான பிரச்னை ஓடிக்கொண்டிருப்பதால், என் தம்பியின் மனைவி கொலை விவகாரத்தில், வடமாநில இளைஞர்களைக் கைதுசெய்தால், பிரச்னை இன்னும் பெரிதாகும் என்று நினைத்து, கரூர் சிறுவனை மட்டும் இந்த வழக்கில் சேர்த்திருக்கிறார்கள்’’ என்றார் ஆதங்கத்துடன்.

பூபதி
பூபதி

ஜேடர்பாளையம் காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளர் சுரேஷிடம் இது குறித்துக் கேட்டபோது, ‘‘மீன்பிடிக்கச் சென்ற அந்தச் சிறுவன், சம்பவம் நடந்த அன்று போதையில் இருந்திருக்கிறான். அவன்தான் நித்யாவைப் பாலியல் வன்கொடுமை செய்து, கொன்றிருக்கிறான். ‘நான் மட்டும்தான் கொலை செய்தேன். வேறு யாருக்கும் தொடர்பில்லை’ என்று அந்தச் சிறுவனே சொல்கிறான். நித்யாவைக் கொன்று உடலை ஓடைச்சேற்றில் இழுத்துப் போட்டது எப்படி என்று கணவர் விவேகானந்தன் முன்பாகவே அந்தச் சிறுவன் நடித்தும் காட்டிவிட்டான். ஆனால், தேவையில்லாமல் இதில் வடமாநிலத் தொழிலாளர்களை இழுக்கிறார்கள்” என்றார்.