
‘குடும்பத்தில் உள்ள ஆண்களை கைது செய்துவிட்டால்... பெண்கள், குழந்தைகளை யார் கவனித்துக்கொள்வார்கள். குடும்ப வருமானத்துக்கு வழி என்ன?’ என்று கேள்வி எழுப்பியபடி வீதிக்கு வந்துள்ளனர் பெண்கள்.
தேசிய குடும்பநல ஆய்வறிக்கையின் சமீபத்திய தரவுகள், ‘அஸ்ஸாம் மாநிலத்தில், தற்போது 20 - 24 வயதிலிருக்கும் 31.8% பெண்களுக்கு, 18 வயதுக்கு முன்பே திருமணம் முடிந்திருக்கிறது. சர்வே எடுக்கப்பட்ட காலத்தில் 15 - 19 வயதுக்குட்பட்ட சிறுமிகளில் 11.7% பேர் அம்மாவாகவோ, கர்ப்பிணியாகவோ இருந்தனர்’ என்றெல்லாம் குறிப் பிட்டுள்ளது. இதன் அடிப்படையில், அஸ்ஸாமின் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா (பி.ஜே.பி), ‘குழந்தைத் திருமணம் செய்த ஆண்கள் ஒரே வாரத்தில் கைது செய்யப்படுவார்கள்’ என்று அதிரடியாக அறிவித்தார்.
14 வயதுக்குக் குறைவான சிறுமிகளைத் திருமணம் செய்தவர்கள்மீது போக்ஸோ சட்டத்தின் கீழும், 14 - 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளைத் திருமணம் செய்தவர்கள்மீது குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் 200-6-ன் கீழும் வழக்குகள் பாய்ந்துள்ளன. 4,000-க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளநிலையில் 2,500-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 100-க்கும் மேற்பட்ட குழந்தைத் திருமணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், ‘குடும்பத்தில் உள்ள ஆண்களை கைது செய்துவிட்டால்... பெண்கள், குழந்தைகளை யார் கவனித்துக்கொள்வார்கள். குடும்ப வருமானத்துக்கு வழி என்ன?’ என்று கேள்வி எழுப்பியபடி வீதிக்கு வந்துள்ளனர் பெண்கள். இதைவிடக் கொடுமை, அங்கே தொடர ஆரம்பித்திருக்கும் மரணங்கள்தான். தென்சலமரா மாவட்டத்தில், குழந்தைத் திருமணம் முடிந்து, இரண்டு குழந்தைகள் உள்ள ஒரு பெண்ணின் கணவர், கொரோனாவால் உயிரிழந்துவிட்டார். ‘பதின் வயதில் தனக்குத் திருமணம் செய்து வைத்த அப்பா சிறைக்குச் செல்லலாம்’ என்ற அச்சத்தில் அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்டுவிட்டார். பான்கைகோன் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது கர்ப்பிணி, கைது அச்சத்தால் வீட்டிலேயே பிரசவம் பார்த்தபோது, அதீத ரத்த இழப்பால் உயிரிழந்துள்ளார்.

குழந்தைத் திருமணங்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை. ஆனால், அதிரடியாக எடுக்கப்படும் நடவடிக்கைகள், பெண்களின் நிகழ்காலத்தை முடக்கிப் போட்டிருப்பதோடு, எதிர்காலத்தையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது என்பதே உண்மை. ‘குழந்தைத் திருமணம் என்பது பெண் குழந்தைகளுக்குக் கல்வியை உறுதி செய்வது, சமூகத்துக்கு விழிப்புணர்வு ஊட்டுவது உள்ளிட்ட அரசின் நீண்டகால செயல்பாடுகளின் மூலமே ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று’ என்று சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து முன்வைத்து வரும் கருத்துகளில் இருக்கும் உண்மைகளை அஸ்ஸாம் அரசு உணர வேண்டும்.
‘இனி, ஒரு திருமணத்தைக்கூட அனுமதிக்க முடியாது’ என்பதில் துளியும் சமரசம் செய்யத் தேவையில்லை. அதேசமயம், ஏற்கெனவே நடந்துவிட்ட திருமணங்களை என்ன செய்யலாம்... அதன் மூலமாகப் பிறந்த குழந்தைகள், உருவான கரு பற்றியெல்லாம் எந்த விதமான முடிவுகளை எடுக்கலாம் என்று ஆற அமர யோசித்தே அஸ்ஸாம் அரசாங்கம் செயலாற்ற வேண்டும். அஸ்ஸாம் அரசு மட்டுமல்ல, அனைத்து மாநில அரசுகளும் குழந்தைத் திருமண ஒழிப்பில் தீவிர அக்கறை காட்டியே தீர வேண்டும். அதேசமயம், நடவடிக்கையில் தீவிர நிதானத்தைக் காட்ட வேண்டியதும் முக்கியம்!
‘நல்லது செய்கிறேன்’ என்றபடி மேற்கொண்டும் ‘தீமை’ செய்துவிடக் கூடாதுதானே தோழிகளே!