
என் பெரியப்பா ராஜேந்திரனின் மனைவி, மகன் இருவரும் இலங்கையில் இருக்கிறார்கள். குடும்பத்தைப் பிரிந்திருப்பதால் லேசான மனநிலை பாதிப்புடன் குன்னூர் பேருந்து நிலையம் பகுதியில் இவர் நடமாடிவந்தார்.
இறந்துவிட்டதாக அடையாளம் காணப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட நபர், ஒரு மாதம் கழித்து உயிருடன் வந்த விவகாரம் ஊட்டி போலீஸாரைக் கிறுகிறுக்கவைத்திருக்கிறது.
குன்னூர் அருகிலுள்ள எடப்பள்ளி வனப்பகுதியில் ஆண் சடலம் ஒன்று தூக்கிட்ட நிலையில் காணப்படுவதாக, கடந்த மார்ச் மாதம் 14-ம் தேதி வெலிங்டன் போலீஸாருக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. சடலத்தை மீட்ட போலீஸார், உடற்கூறாய்வுக்காக குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அதையடுத்து, குன்னூர் பேருந்து நிலையத்தில் லேசான மனநல பாதிப்புடன் நடமாடிவந்த ராஜேந்திரனின் சடலம்தான் அது என ‘உறுதி’செய்த போலீஸார், அந்த உடலை ராஜேந்திரனின் உறவினர்கள் மூலமாக அடக்கம் செய்துவிட்டனர். இந்த நிலையில் ஒரு மாத காலம் கழித்து ராஜேந்திரன் உயிருடன் திரும்ப வந்தது போலீஸாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

ராஜேந்திரனின் உறவினர் பாபு, “என் பெரியப்பா ராஜேந்திரனின் மனைவி, மகன் இருவரும் இலங்கையில் இருக்கிறார்கள். குடும்பத்தைப் பிரிந்திருப்பதால் லேசான மனநிலை பாதிப்புடன் குன்னூர் பேருந்து நிலையம் பகுதியில் இவர் நடமாடிவந்தார். இவரின் உடன்பிறந்த சகோதரியும் குன்னூரில்தான் வசிக்கிறார். ஆனால், போலீஸார் அவருக்குத் தகவல் சொல்லாமலேயே என் பெரியப்பா தற்கொலை செய்துகொண்டதாகச் சொல்லி வேறு நபரின் உடலை அடக்கம் செய்ய வைத்துவிட்டார்கள். உயிருடன் திரும்பி வந்த என் பெரியப்பாவிடம் விசாரித்தபோது, கடந்த சில மாதங்களாக கேரளா ஹார்பரில் வேலை பார்த்து வந்ததாகத் தெரிவித்தார்” என்றார்.

இந்த விவகாரம் குறித்து குன்னூர் துணை காவல் கண்காணிப்பாளர் கோவிந்தசாமியிடம் விளக்கம் கேட்டோம். “மீட்கப்பட்ட சடலத்தின் முக அமைப்பு, தாடி, ஜெர்க்கின் உள்ளிட்ட அடையாளங்களைக்கொண்டே அது ராஜேந்திரனாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டது. ராஜேந்திரனின் மருமகளும் பேரனும் நேரில் வந்து பார்த்துவிட்டு, அது அவரின் சடலம்தான் என்பதை உறுதி செய்தார்கள். அதன் பிறகே அவர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டு, தொண்டு நிறுவனத்தின் மூலமாக அடக்கம் செய்யப்பட்டது. ஆனால், தற்போது ராஜேந்திரன் உயிருடன் ஊருக்குத் திரும்பியிருக்கிறார். எனவே, மீட்கப்பட்ட சடலம் யாருடையது என்பதை அறிய அடக்கம் செய்த உடலைத் தோண்டியெடுத்து, எலும்புகளை டி.என்.ஏ பரிசோதனைக்காக அனுப்பியிருக்கிறோம். இந்த வழக்கில் மறு புலன்விசாரணை நடைபெற்றுவருகிறது” என்றார்.

இது குறித்துப் பேசிய மக்கள் சட்ட மைய நிறுவனர் வழக்கறிஞர் விஜயன், “போலீஸாரின் இந்த அலட்சியமான நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. ஒரு வழக்கை, கொலையா, தற்கொலையா என்றே விசாரிக்காமல், ஃபைலை குளோஸ் பண்ண வேண்டும் என்பதற்காக இப்படியான யதேச்சதிகாரச் செயல்களில் ஈடுபடுவது அராஜகம்” என்றார்.
நல்லவேளை உயிரோடு வந்தவரை, ‘பொய் சொல்லாத...’ என்று சொல்லாமல் நம்பினார்களே!