
- ராணி கார்த்திக்
பரபரப்பாகக் காணப்படும் தலைமைச் செயலக வளாகம், கடந்த 13-ம் தேதி காலை ஒரு தந்தையின் கோபத்தால் அதிர்ந்தது. காலை 11 மணியளவில் அங்கு வந்த ஓட்டேரி காவல் நிலைய தலைமைக் காவலர் கோதண்டபாணி, திடீரெனத் தன் 10 வயது மகள் பிரதிக்ஷாவுடன் சாலைமறியலில் ஈடுபட்டார். “நம்ம ஆளு... நீயே இப்படிச் செய்யலாமா?” என்று அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் கேட்க, பிரதிக்ஷா அணிந்திருந்த சாக்ஸை அவிழ்த்து, குழந்தையின் விரல்களற்ற வலது காலைக் காட்டி, “நான் செய்யுறது தப்புதான். ஆனா, இது தப்பில்லையா... என் பொண்ணுக்கு நீதி கிடைக்க, இந்தக் காக்கிச்சட்டை தடையா இருக்கும்னா, அது எனக்குத் தேவையே இல்லை” என்று கொதித்தார். என்ன நடந்தது என விசாரித்தோம்...

“என் மகள் பிரதிக்ஷாவுக்கு 3 வயதாக இருந்தபோது, சிறுநீரகப் பிரச்னை காரணமாக சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். அங்கு பரிந்துரைக்கப்பட்ட மாத்திரைகளை, கடந்த ஐந்து ஆண்டுகளாக என் மகளுக்குக் கொடுத்துவந்தேன். 2021-ல் அவளுக்கு வலது காலில் கடுமையான அரிப்பு ஏற்பட்டது. மீண்டும் எழும்பூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்கள். இரு மருத்துவமனைகளிலும் அளித்த தவறான சிகிச்சையால், என் மகளின் வலது கால் பாதம் முழுமையாகக் கருகத் தொடங்கியது. எங்களிடம் சொல்லாமலேயே மருத்துவர்கள் அவளுக்கு டயாலிசிஸ் செய்தார்கள்.

அப்போதே அவளுக்கு வலிப்பு ஏற்பட்டு, கோமா நிலைக்குச் சென்றதுடன் கை கால்களும் செயலிழந்தன. பத்து வயதில் என் மகள் இவ்வளவு கொடுமையான தண்டனையை அனுபவிக்க யார் காரணம்... பல லட்சம் கடன் வாங்கி, உயரதிகாரிகளிடம் கூனிக்குறுகி விடுப்பு கேட்டு, ஒவ்வொரு மருத்துவமனையாக அலைந்து திரிந்து, மகளைக் காப்பாற்றப் போராடிக்கொண்டிருக்கும் என் மன உளைச்சலுக்கு யார் பொறுப்பு... மனிதநேயமில்லாத மருத்துவர்கள்மீது இந்த அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது?” என்றார் வேதனையுடன் தலைமைக் காவலர் கோதண்டபாணி.
இது குறித்து எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையின் இயக்குநர் ரேமா சந்திரனிடம் விளக்கம் கேட்டோம். “இந்தச் சம்பவம் நடைபெற்ற 2021-ம் ஆண்டிலேயே வெளி மருத்துவர்களையும் உள்ளடக்கிய மருத்துவக்குழு விசாரணை நடத்தி, அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது. அந்த அறிக்கையில், சிறுமி பிரதிக்ஷாவுக்கு ஏற்பட்டது அவரது நோய்க்கூறுகளின் பக்கவிளைவு என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது” என்றார்.
என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்?