அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

“என்னை எவ்ளோ லவ் பண்ற..?” - போலீஸுடன் காதல் ரசம்... பெண் தாதா லோகேஸ்வரியின் வைரல் ஆடியோ!

லோகேஸ்வரி - மாதவன்
பிரீமியம் ஸ்டோரி
News
லோகேஸ்வரி - மாதவன்

லோகேஸ்வரியின் நெட்வொர்க்கிலிருக்கும் ரௌடிகளும், போலீஸார் சிலரும் லோகேஸ்வரியுடன் நெருக்கமாக இருந்துவருகிறார்கள்.

“பேரச் சொன்னாலே பயப்படணும்டா!’’ - காஞ்சியின் அடுத்த தாதா ஆகிறாரா லோகேஸ்வரி? - என்ற தலைப்பில் கடந்த 28-09-2022 தேதியிட்ட ஜூ.வி இதழில் செய்தி வெளியிட்டிருந்தோம். தற்போது லோகேஸ்வரி, உளவுப் பிரிவு காவலர் மாதவன் என்பவருடன் காதல் ரசம் சொட்டச் சொட்ட பேசும் ஆடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியிருக்கிறது.

அந்த ஆடியோவில் லோகேஸ்வரியும் உளவுப் பிரிவு காவலர் மாதவனும் பேசிக்கொள்கிறார்கள். ரௌடி ஒருவர் குறித்துத் தொடங்கும் உரையாடலின் இறுதியில் ‘என்னை எவ்ளோ லவ் பண்ற?’ எனக் காவலர் மாதவனிடம் காதல் ரசம் சொட்டுக் கேட்கிறார் பெண் தாதா லோகேஸ்வரி. இந்த ஆடியோ சர்ச்சையால், காவலர் மாதவன் தற்போது காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இடம் மாற்றப்பட்டிருக்கிறார்.

இது குறித்து தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலக உயரதிகாரி ஒருவரிடம் பேசினோம். ``தாம்பரம் பகுதியில் வசித்துவந்த பெண் தாதா லோகேஸ்வரி என்ற எஸ்தர் மீது கொலை உள்ளிட்ட பல குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. தாம்பரம் நடுவீரப்பட்டு ஊராட்சியில் தி.மு.க கவுன்சிலராக இருந்த சதீஷ் என்பவர், கடந்த செப்டம்பர் 19-ம் தேதி கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டார். மேலும், பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்த சதீஷின் சடலம் பெண் தாதா லோகேஸ்வரியின் வீடு இருக்கும் தெருவிலேயே வீசப்பட்டிருந்தது. இந்தக் கொலை வழக்குக்காக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் லோகேஸ்வரி சரணடைந்தார். அந்தச் சமயத்தில்தான் லோகேஸ்வரி அரிவாளுடன் போஸ் கொடுத்த புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பேற்படுத்தின. தற்போது அந்த வழக்கில் ஜாமீன் பெற்று அவர் வெளியில் வந்திருக்கும் நிலையில், காவலர் மாதவனுடனான ஏடாகூட ஆடியோ சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் பெண் தாதா லோகேஸ்வரி” என்றார்.

லோகேஸ்வரி - மாதவன்
லோகேஸ்வரி - மாதவன்

ஆடியோ குறித்து தாம்பரம் போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம். “தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகக் கட்டுப்பாட்டில், சோமங்கலம் காவல் நிலையம் வந்தபோது, அங்கு உளவுப் பிரிவு காவலராக நியமிக்கப்பட்டார் மாதவன். லோகேஸ்வரியின் நடவடிக்கைகள் குறித்து ரகசியத் தகவல்களை ரிப்போர்ட்டாக அனுப்பவேண்டிய மாதவன், அவருடனேயே காதலில் வீழ்ந்திருக்கிறார். தற்போது வெளியாகியிருக்கும் ஆடியோவில் ஒருசில ரௌடிகள் குறித்து காவலர் மாதவனும் லோகேஸ்வரியும் பேசிக்கொள்கிறார்கள். பின்னர், “நீ என்னை எவ்ளோ லவ் பண்ற... பிடிக்குமா பிடிக்காதா... என்னை சின்சியரா லவ் பண்றியா... சும்மா பேருக்கு லவ் பண்றியா.. நான் வந்துரட்டுமா அங்க...” என்றெல்லாம் காவலர் மாதவனிடம் கேட்கிறார் லோகேஸ்வரி. அதற்குக் காவலர் மாதவன் ‘வீடியோ காலில் வா’ என்று பதில் சொல்கிறார். சமூக வலைதளங்களில் வெளியான இந்த ஆடியோ மற்றும் ஸ்க்ரீன்ஷாட்கள் குறித்து காவலர் மாதவனிடம் விளக்கம் கேட்கப்பட்டு, அதனடிப்படையில்தான் அவர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், அந்த ஆடியோவில் டி.சி ஸ்பெஷல் டீமிலிருக்கும் ஓர் இன்ஸ்பெக்டரை ‘என் உயிர் அண்ணன்’ என்று குறிப்பிடுகிறார் லோகேஸ்வரி. அந்த இன்ஸ்பெக்டருக்கும் லோகேஸ்வரிக்குமான தொடர்புகள் குறித்தும் விசாரிக்கப்பட்டுவருகிறது” என்றனர்.

பெண் தாதா லோகேஸ்வரியின் பின்னணி குறித்து நம்மிடம் பேசிய காஞ்சிபுரம் மாவட்ட போலீஸார், “காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட ஆளுங்கட்சி முக்கியப் பிரமுகர்களிடம் லோகேஸ்வரிக்கு நல்ல அறிமுகம் இருக்கிறது. இதனால், நடுவீரப்பட்டு ஊராட்சியில், கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட லோகேஸ்வரி விரும்பினார். ஆனால், அவருக்கு அப்போது வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில், கவுன்சிலராக ஜெயித்த தி.மு.க-வைச் சேர்ந்த சதீஷ், லோகேஸ்வரியின் சமூகவிரோதச் செயல்கள் குறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தார். குறிப்பாக, நடுவீரப்பட்டு பகுதியில் லோகேஸ்வரி கள்ளச் சந்தையில் மதுபானங்கள் விற்பது குறித்து காவல்துறைக்கு சதீஷ் கொடுத்த தகவலே, அவர் கொலைசெய்யப் படுவதற்குக் காரணமாக அமைந்தது. ஆரம்பத்தில் சதீஷிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்திய லோகேஸ்வரி, அவர் அதற்குச் சரிப்பட்டு வராததாலேயே தன்னுடைய கூட்டாளிகளுடன் சேர்ந்து, அவரைக் கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

லோகேஸ்வரியின் நெட்வொர்க்கிலிருக்கும் ரௌடிகளும், போலீஸார் சிலரும் லோகேஸ்வரியுடன் நெருக்கமாக இருந்துவருகிறார்கள். இதனால் போலீஸ் வட்டாரத்துக்குள் தனக்கென ஸ்லீப்பர் செல்களை உருவாக்கிவைத்திருக்கிறார். இதன் மூலம், தனக்கு எதிராக வரும் புகார்களை முன்கூட்டியே தெரிந்துகொண்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு நெருக்கடி கொடுப்பார் லோகேஸ்வரி. ஒவ்வொருவரின் பலவீனத்தைக் கண்டுபிடித்து, அவர்களைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது லோகேஸ்வரியின் ஸ்டைல். இதற்காக மது, மாது உட்பட தன் நெட்வொர்க்கில் இருப்பவர்களுக்கு மாதச் சம்பளம்போல மாமூலும் கொடுத்துவருகிறார். ஆரம்பத்தில் ஸ்கூட்டியில் சுற்றிக்கொண்டிருந்தவர், இப்போது சொகுசு கார்களில் வலம்வந்துகொண்டிருக்கிறார். காஞ்சிபுரம் பகுதியில் இவருக்குத் தெரியாமல் எந்தக் குற்றச் சம்பவமும் நடக்காது என்பதால், லோகேஸ்வரியை சில போலீஸார் இன்ஃபார்மராகவே பயன்படுத்திவருகிறார்கள். ஆனால், அவர்களைவைத்தே தன்னுடைய காரியத்தைச் சாதித்துக்கொள்கிறார் லோகேஸ்வரி.” என்றனர்.

பெண் தாதா லோகேஸ்வரியுடன் கொஞ்சிக் குலவும் காக்கிகள்மீது, தாம்பரம் கமிஷனர் அமல்ராஜ் நடவடிக்கை எடுப்பாரா?