அலசல்
அரசியல்
Published:Updated:

“ஆணுறுப்பில் அடித்து கொன்றேன்... உடலை 6 துண்டுகளாக வெட்டி எரித்தேன்!”

ஜெயந்தன் - பாக்யலட்சுமி
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெயந்தன் - பாக்யலட்சுமி

- விமான நிலைய ஊழியரைக் கொன்ற பெண் ‘பகீர்’ வாக்குமூலம்!

காணாமல்போன விமான நிலைய ஊழியர் ஜெயந்தனைக் கொலைசெய்த புகாரில், ஜெயந்தனின் ரகசிய மனைவி பாக்யலட்சுமி என்பவர் கைதாகியிருக்கிறார். அவர் அளித்த வாக்குமூலத்தைக் கேட்டு கிறுகிறுத்துக் கிடக்கிறது போலீஸ் வட்டாரம்!

இது குறித்து சென்னை பழவந்தாங்கல் போலீஸாரிடம் பேசினோம். ``காணாமல்போன விமான நிலைய ஊழியர் ஜெயந்தன் பயன்படுத்திய செல்போன் சிக்னல், அழைப்பு விவரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் விசாரித்தபோதுதான் அவருக்கு பாக்யலட்சுமி என்று ஒரு ரகசிய மனைவி இருப்பது தெரிந்தது. புதுக்கோட்டை, பொன்னமராவதியைச் சேர்ந்த பாக்யலட்சுமி ஒரு பாலியல் தொழிலாளி. இவரைத் தன் வீட்டினருக்குத் தெரியாமல் ஜெயந்தன் ரகசியத் திருமணம் செய்திருக்கிறார். சமீபத்தில், ஜெயந்தனுடன் ஏற்பட்ட பிரச்னையால் பாக்யலட்சுமி அவரைப் பிரிந்து புதுக்கோட்டைக்குச் சென்றுள்ளார்.

ஜெயந்தன்
ஜெயந்தன்

கடந்த மார்ச் 19-ம் தேதி புதுக்கோட்டைக்குச் சென்ற ஜெயந்தன், அங்கு பாக்யலட்சிமியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். அப்போது ஆத்திரமடைந்த பாக்யலட்சுமி, ஜெயந்தனின் ஆணுறுப்பில் தாக்கியிருக்கிறார். ஏற்கெனவே மதுபோதையிலிருந்த ஜெயந்தன் அதனால் மயங்கி விழுந்து, உயிரிழந்திருக்கிறார். பதற்றமடைந்த பாக்யலட்சுமி, தன்னுடைய நண்பரான சங்கரின் உதவியுடன் ஜெயந்தனின் சடலத்தை தலை, உடல், கை கால்கள் என ஆறு துண்டுகளாக வெட்டியிருக்கிறார். பிறகு, அவற்றை பாக்யலட்சுமியின் வீட்டுக்கு அருகிலேயே வைத்து இருவரும் எரித்திருக்கிறார்கள். ஆனாலும், அவை முழுமையாக எரியாததால், அவற்றை பாக்யலட்சுமியின் வீட்டுக்கு அருகிலேயே புதைத்திருக்கிறார்கள்.

பாக்யலட்சுமி
பாக்யலட்சுமி

இந்த நிலையில், ஜெயந்தனை போலீஸ் தேடுவது குறித்துத் தெரிந்துகொண்ட பாக்யலட்சுமி, அதை சங்கரிடம் தெரிவித்திருக்கிறார். இருவரும் புதைக்கப்பட்ட ஜெயந்தனின் பாதி கருகிய உடல் பாகங்களைத் தோண்டியெடுத்து, சென்னைக்குக் கொண்டுவந்திருக்கிறார்கள். கோவளம் பகுதியைச் சேர்ந்த பூசாரி வேல்முருகனின் உதவியுடன், ஜெயந்தனின் உடல் பாகங்களை கோவளம் பூமிநாதர் கோயிலை ஒட்டிய குட்டையில் வீசியதோடு, சில பரிகார பூஜைகளையும் செய்திருக்கிறார் பாக்யலட்சுமி.

இது தொடர்பான விசாரணையில், “ஜெயந்தனை ஆணுறுப்பில் அடித்து நான்தான் கொன்றேன்; உடலை ஆறு துண்டுகளாக வெட்டி எரித்தேன்’ என எந்தப் பதற்றமும் இல்லாமல் கூலாகப் பதிலளித்திருக்கிறார் பாக்யலட்சுமி. கொலைக்கான உண்மையான காரணம் குறித்துக் கேட்டபோது, ‘என் பர்சனலில் தலையிட்டார்’ என்றே பதிலளித்தார். பாக்யலட்சுமி அடையாளம் காட்டிய குட்டையிலிருந்து, அழுகிய நிலையில் சில உடல் பாகங்களை மீட்டிருக்கிறோம். அவை டி.என்.ஏ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன. சங்கர், பூசாரி வேல்முருகன் ஆகியோரைத் தேடிவருகிறோம்” என்றனர்.

ஜெயந்தனின் மரணத்தில் இன்னும் பல மர்மங்கள் இருப்பதாகவே தோன்றுகிறது!