மார்பை மறைத்தால் வரி... அளவெடுத்த அரசு அதிகாரிகள்... கொடூரத்துக்கு முடிவுகட்டிய ‘தோள் சீலைக் கலகம்’!

நிலவுமொழி செந்தாமரை, ஓவியம்: ஜீவா
எந்தளவுக்கான அடிமைத்தனங்களில், அடக்குமுறைகளில் இருந்தெல்லாம் பெண்கள் வெளியேறி வந்திருக்கிறோம் என்பதை வரலாற்றில் உணரும்போதுதான், இன்று நாம் அடைந்திருக்கும் சுதந்திரத்தின் மகத்துவத்தை உள் வாங்க முடியும். அதற்கான போராட்டங்களின் வலிமை யையும் முக்கியத்துவத்தையும் இன்னும் வீரியமாகப் புரிந்துகொள்ள முடியும். அப்படி பெண்கள் வரலாற்றில், தமிழக வரலாற்றில், இந்திய வரலாற்றில்... ஏன் உலக வரலாற்றிலேயே முக்கியமான ஒரு போராட்டம், தோள் சீலைப் போராட்டம்!
மார்புக்கு துணி கூடாது!
தோள் சீலைப் போராட்டம்... நம்புவதற்கு மிகக் கடின மான, அருவருக்கத்தக்க சாதிய-ஆணாதிக்க ஒடுக்கு முறையை எதிர்த்துப் போராடி வெற்றிகொண்ட வரலாறு. `கீழ் சாதிகள்’ என்று சொல்லி ஒடுக்கப்பட்டிருந்த சாதி களைச் சேர்ந்த பெண்கள், தங்கள் மார்பகங்களை மறைக்கக் கூடாது என்ற கட்டுப்பாடு பல நூற்றாண்டுகளாக நீடித்தது. மார்பகங்களை மறைத்து ஆடை அணிய வேண்டுமானால், அதற்கு முலை வரி செலுத்த வேண்டும். மார்பகங்களை அளந்து வரி வசூலித்தனர் அதிகாரிகள்.

கற்பனையில்கூட சகிக்க இயலாத இந்தக் கொடுமை களை ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை, (இன்றைய) கன்னியாகுமரி மாவட்டத்திலும், நெல்லை மாவட்டத்திலும், தென் கேரளத்திலும் நம் பெண்கள் அனுபவித்து வந்தனர். மனித இனத்தையே தலைகுனிய வைக்கும் இத்தகைய ஒடுக்குமுறையை, அன்றைய திருவாங்கூர் சமஸ்தானம், அரசாங்கம் என்கிற பெயரில் அமல்படுத்திவந்ததுதான் பெருங்கொடுமை.
மார் துணிக்காக மதம் மாறிய பெண்கள்!
இந்த விஷயத்தில், கிறிஸ்துவ மதத்துக்கு மாறிவிட்ட நாடார் இனப்பெண்கள் மட்டும் மேலாடை அணிவது தொடர்பாக பத்மநாபபுரம் நீதிமன்ற விசாரணைக்கு உத்தர விட்டது அன்றைய ஆங்கிலேயே அரசு. இதையடுத்து, 1823-ல் வெளியிடப்பட்ட தீர்ப்பில், ‘சீர்திருத்த நாடார் கிறிஸ்துவர்கள் மட்டும் மேலாடை அணியலாம்’ என உத்தர விடப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஏராளமான நாடார்கள் கிறிஸ்துவ மதத்துக்கு மாறியதோடு, பெண்கள் துணிந்து மேலாடை அணிந்தனர். அச்சமூகத்தில் தோன்றிய சமூகச் சீர்திருத்தவாதியான வைகுண்டர் போன்றோரின் போதனைகள், நாடார் இன மக்களின் சமத்துவ வேட்கைக் கும், போராட்டங்களுக்கும் உத்வேகம் ஊட்டின.
‘அடிமைகள் கொதித்தெழுகிறார்கள்’ என்று கோபம் கொண்ட நாயர், வேளாளர் சாதிகளைச் சேர்ந்த ஆதிக்க சக்திகள், பெருங்கலவரத்தில் ஈடுபட்டன. இதையெல்லாம் திருவாங்கூர் சமஸ்தானம் வேடிக்கை பார்த்ததோடு, ’சாணார் (நாடார்) பெண்கள் மார்பகங்களுக்கு மேல் ஆடை அணியக் கூடாது’ என்ற ஆணையை 1829-ல் வெளியிட்டு, பிரிட்டிஷ் நீதிமன்றத் தீர்ப்பை ஒழித்துக்கட்டியது. ஆங்கிலேயே அரசாங்கமும் அதற்குத் துணைபோனது. இந்திய ஆட்சி அதிகாரத்தை நேரடிப் பொறுப்பில் எடுத்துக்கொண்ட பிரிட்டிஷ் அரசி விக்டோரியா, `உள்ளூர் மரபுகளில் ஆங்கிலேய ஆட்சியாளர்கள் தலையிடக் கூடாது’ என்கிற கருத்தை வெளியிட்டார்.
தங்களுக்குச் சாதகமாக ஆங்கிலேய அரசு இருக்கிறது என்கிற தைரியத்தோடு ஒடுக்கப்பட்ட சாதியினர் மீது தாக்குதல்களை ஆரம்பித்தன ஆதிக்க சக்திகள். பெண் களின் மேலாடைகள் கிழித்து எறியப்பட்டன. கோபம் கொண்ட நாடார் கிறிஸ்துவர்களுடன் இந்து நாடார்களும் கைகோத்தனர். இதர ஒடுக்கப்பட்ட சாதியினரும் இவர் களுடன் சேர்ந்துகொண்டு, திருவாங்கூர் சமஸ்தான ஆட்சியாளர்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க, கலவரம் பெரிதாகப் பற்றிக்கொண்டது. விஷயம் பெரிதாவதை உணர்ந்த ஆங்கிலேய ஆட்சியாளர்கள், திருவாங்கூர் சமஸ்தானத்தின் சனாதன ஆட்சியாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கவே, 1859-ம் ஆண்டு ஜூலை 26-ம் நாள், `அனைத்து சமய சாணர் பெண்கள் கும்பாயமிட்டு (நீண்ட ஆடையை அணிந்து) கொள்ளவோ, மீனவப் பெண்களைப் போல் போல் சீலையை உடுத்திக்கொள்ளவோ செய்யலாம். ஆனால், உயர்சாதிப் பெண்கள் மேலாடை அணிவது போல் செய்யாமல், வேறு எவ்விதத்திலாவது மார்பை மறைத்துக்கொள்ளலாம்’ என திருவாங்கூர் சமஸ்தான அரசு அறிக்கை வெளியிட்டது. 1860-ல் அனைத்து சாதிப் பெண்களுக்கும் அவ்வுரிமை வழங்கப்பட்டது.
தன் மார்பகங்களை அறுத்து தந்த நங்கேலி!
இன்றளவிலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ’தாலியறுத் தான் சந்தை’ என்ற பகுதி உள்ளது. மேலாடை அணிந்து சந்தைக்கு வந்த நாடார் சாதிப் பெண்களின் மேலாடைகள், தொரட்டி கொண்டு கிழிக்கப்பட்டன. ரவிக்கையோடு தாலியும் அறுக்கப்பட்டது. இதனால், அப்பகுதிக்கு ’தாலி யறுத்தான் சந்தை’ எனப் பெயர் வந்தது. அதேபோல மக்களின் நாட்டார் வழக்காற்றியல் மரபுகளில் வழங்கப்படும், நங்கேலி என்ற பெண்ணின் கதை, முலைவரியின் கொடுமைகளைச் சொல்கிறது. முலைவரி செலுத்த மறுத்த நங்கேலி, வரிவிதிக்க வந்த அதிகாரிகளிடம் தனது மார் பகங்களை வெட்டித் தந்து உயிர் நீத்ததாக இந்த வரலாற்றுக் கதை கூறுகிறது.

40 ஆண்டுக்கால சமர்!
கேரளத்தைப் பொறுத்தவரை சாதிய அமைப்புகளுக்கு இடையிலான வேற்றுமை தீவிரமாகக் கடைப்பிடிக்கப்பட்டது. இது 1925-களிலும் தொடர்ந்தது என்பதற்கு பெரியார் பங்கேற்ற ‘வைக்கம் சத்தியாகிரகம்’ ஒரு சான்று. ஒவ்வொரு சாதியினரும், மேல் சாதியினரிடமிருந்து எத்தனை அடி விலகி நிற்க வேண்டும், தாழ்த்தப்பட்ட மக்கள் மேல் சாதியினரின் கண்களில்கூட படக் கூடாது போன்ற விசித்திரமான, பொறுத்துக்கொள்ள முடியாத நடைமுறைகள் இருந்து வந்தன. ஆங்கிலேய ஆட்சி யாளர்கள், இந்த முரண்பாடுகளை தங்களது லாபத்துக்குப் பயன்படுத்திக் கொண்டனர். அதனால்தான் 1822 முதல்- 1859 வரை தோள் சீலைப் போராட்டம் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மூன்று கட்டங்களாகத் தொடர்ந்தது. இன்றளவும் சாதியமும் ஆணாதிக்கமும் வேரூன்றி உள்ள நமது சமூகத்தில், ஒடுக்கப்பட்ட மக்களின், பெண்களின் போராட்டத்துக்கான ஒரு வரலாற்று உந்து சக்தியாக இருக்கிறது... `தோள் சீலைக் கலகம்’. கேரளத்தில், `மார் மறைக்கும் சமர்’ என்று இது அழைக்கப்பட்டது.
ஆணாதிக்க அடக்குமுறைகளைப் பொசுக்கும் தொடர் ஓட்ட தீச்சுடர்... இந்த 21-ம் நூற்றாண்டில் நம் கைகளில்!