Published:Updated:

ஆடு மேய்க்கச் சென்ற சிறுமிகள் ஆற்றில் மூழ்கி பலி; சோகத்தில் மூழ்கிய கிராமம்!

உயிரிழந்த சிறுமிகள்

ஆடு மேய்க்கச் சென்ற சிறுமிகள், ஆற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:

ஆடு மேய்க்கச் சென்ற சிறுமிகள் ஆற்றில் மூழ்கி பலி; சோகத்தில் மூழ்கிய கிராமம்!

ஆடு மேய்க்கச் சென்ற சிறுமிகள், ஆற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

உயிரிழந்த சிறுமிகள்

தஞ்சாவூர், திருக்காட்டுப்பள்ளி அருகே ஆடு மேய்க்கச் சென்ற தோழிகளான இரண்டு சிறுமிகள் குடமுருட்டி ஆற்றில் குளித்தபோது, நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

உயிரிழந்த குணசுந்தரி
உயிரிழந்த குணசுந்தரி

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள ஒன்பதுவேலி காமராஜர் காலனியைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவரின் மகள் பிரித்திகா (14) தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்துவந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் சௌந்தரராஜன். இவரின் மகள் குணசுந்தரி (15) 10-ம் வகுப்பு படித்துவந்தார். இருவரின் வீடுகளும் அருகருகே இருப்பதால், சிறுவயதிலிருந்தே இருவரும் நெருங்கிய தோழிகளாக இருந்துவந்தனர்.

குணசுந்தரி, தன் வீட்டிலிருக்கும் ஆடு, மாடுகளை தினமும் மேய்க்கச் செல்வது வழக்கம். அதேபோல் பள்ளி விடுமுறை நாள்களில் பிரித்திகாவும் தன் வீட்டில் வளர்க்கும் ஆடுகளை தோழி குணசுந்தரியுடன் சேர்ந்து மேய்க்கச் செல்வார். இந்த நிலையில், விடுமுறை நாள் என்பதால் நேற்றைய தினம் வழக்கம்போல் இருவரும் ஆடு மேய்க்கச் சென்றிருக்கின்றனர். மாலை வீடு திரும்பும் நேரத்தில் குடமுருட்டி ஆற்றில் இருவரும் குளித்திருக்கின்றனர்.

பிரித்திகா
பிரித்திகா

அப்போது எதிர்பாராதவிதமாக ஆற்றிலிருந்த பள்ளமான பகுதியில் இருவரும் சிக்கியிருக்கின்றனர். நீர் அதிகமாக இருந்ததால் இரண்டு பேரும் மூழ்கி உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து ஒன்பதுவேலி கிராமத்தினரிடம் பேசினோம். ``குணசுந்தரி, பிரித்திகா இருவரும் இணை பிரியாத தோழிகள். ஆடு மேய்க்க ஒன்றாகச் செல்லும் இருவரும், வீடு திரும்பும்போது குடமுருட்டி ஆற்றில் குளித்துவிட்டு வருவார்கள்.

வழக்கம்போல் இருவரும் குளித்திருக்கின்றனர். ஏற்கெனவே ஆற்றில் தனி நபர்கள் மாட்டு வண்டியில் அந்தப் பகுதியில் மணல் திருடியதாகச் சொல்லப்படுகிறது. இதனால் ஆங்காங்கே ஆற்றுக்குள் பெரிய பள்ளங்கள் இருந்திருக்கின்றன. குளிக்கும் இடத்திலிருந்த பள்ளம் அவர்களுக்குத் தெரியவில்லை. குணசுந்தரி குளித்த இடத்திலிருந்து சற்று தள்ளி பிரித்திகா குளித்திருக்கிறார், அப்போது தண்ணீரில் மூழ்கி தத்தளித்திருக்கிறார்.

இதைப் பார்த்து பதறிய குணசுந்தரி, தன் தோழியைக் காப்பாற்றச் சென்றிருக்கிறார். ஆனால், இருவருமே நீரில் மூழ்கி உயிரிழந்துவிட்டனர். சிறு வயதிலிருந்தே இருவரும் ஒருவரை விட்டு ஒருவர் சிறிது நேரம்கூட பிரிந்திருக்க மாட்டார்கள். இப்போது ஒன்றாகவே இறந்துவிட்டார்கள்" என்றனர்.

இது தொடர்பாக திருக்காட்டுப்பள்ளி போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.