Published:Updated:

"என்மீதான பாலியல் குற்றச்சாட்டை மறுக்கிறேன்!" - எழுத்தாளர் கோணங்கி நேர்காணல்

எழுத்தாளர் கோணங்கி

"என்மீதான பாலியல் குற்றச்சாட்டு உள்நோக்கம் கொண்டது. 'மணல் மகுடி' நாடகக்குழு ஓரிரு மாதங்களில் வெள்ளி விழாவைக் கொண்டாடவிருக்கிறது. இப்படி, அவதூறுகளைப் பரப்பி மணல் மகுடியையும் என்னையும் அழிக்க நினைக்கிறார்கள்" - எழுத்தாளர் கோணங்கி நேர்காணல்.

Published:Updated:

"என்மீதான பாலியல் குற்றச்சாட்டை மறுக்கிறேன்!" - எழுத்தாளர் கோணங்கி நேர்காணல்

"என்மீதான பாலியல் குற்றச்சாட்டு உள்நோக்கம் கொண்டது. 'மணல் மகுடி' நாடகக்குழு ஓரிரு மாதங்களில் வெள்ளி விழாவைக் கொண்டாடவிருக்கிறது. இப்படி, அவதூறுகளைப் பரப்பி மணல் மகுடியையும் என்னையும் அழிக்க நினைக்கிறார்கள்" - எழுத்தாளர் கோணங்கி நேர்காணல்.

எழுத்தாளர் கோணங்கி
பிரபல எழுத்தாளர் கோணங்கி மீது ஆராய்ச்சிப் படிப்பு மாணவர் கார்த்திக் மற்றும் பலர் பதிவிட்டிருக்கும் பாலியல் குற்றச்சாட்டு வாசகர்கள், இலக்கியவாதிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கமும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

இதுகுறித்து, குற்றச்சாட்டுக்குள்ளான கோணங்கியைத் தொடர்புகொண்டு பேசினேன்.

“இந்தக் குற்றச்சாட்டுகளையெல்லாம் மறுக்கிறேன்; நிராகரிக்கிறேன். என்மீது திட்டமிட்டே அவதூறுகளைப் பரப்புகிறார்கள். கார்த்திக் தம்பியின் கவிதை, கட்டுரைகள், மொழிபெயர்ப்புக் கதைகளை 'கல்குதிரை'யில் வெளியிட்டு, அவரை நான்தான் வளர்த்தெடுத்தேன்.  தொடர்ந்து எழுதச்சொல்லி ஊக்கப்படுத்தியதால்தான் மொழிபெயர்ப்புக் கதைகளை அவரால் எழுத முடிந்தது. இப்போதும், அவருக்கான மொழிபெயர்ப்புப் பணிகளைச் சொல்லிக்கொண்டே இருக்கிறேன். இப்படி புகார் சொல்லும் கார்த்திக் தம்பியே, அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் என்னைப் பற்றி உயர்வாக எழுதியுள்ளார். அந்த ஸ்கிரீன் ஷாட்டுகளையும் உங்களுக்கு அனுப்புகிறேன். புகழ்ந்துவிட்டு இப்போது இப்படி எழுதுவது நிச்சயம் உள்நோக்கம் கொண்டது.

எழுத்தாளர் கோணங்கி
எழுத்தாளர் கோணங்கி

அவரும் என்மீது புகார் கூறியுள்ள மற்றவர்களும் ஏன் இப்படி நடந்துகொள்கிறார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். இவர்களை பின்னால் இருந்து யாரோ இயக்குகிறார்கள். 'மணல் மகுடி' நாடகக்குழு ஓரிரு மாதங்களில் வெள்ளி விழாவைக் கொண்டாடவிருக்கிறது. இந்தியா முழுவதுமிருந்து கலைஞர்கள் வரவிருக்கிறார்கள். இதனைக் கெடுக்கும் நோக்கத்தில்தான் அவதூறுகளைப் பரப்பி மணல் மகுடியையும் என்னையும் அழிக்க நினைக்கிறார்கள்" என்றவரிடம் "மணல் மகுடியின் பெயரைக் கெடுக்கத்தான் இப்படிச் செயல்படுகிறார்கள் என்றால், அதை இயக்கிவரும் உங்கள் தம்பி முருகபூபதிமீதுதானே புகார் தெரிவித்திருக்கவேண்டும்? உங்கள்மீது ஏன் புகார் கொடுக்கவேண்டும்?” என்று கேட்டேன்.

 “மணல் மகுடி குழுவுக்குத் தேவைப்படும்போதெல்லாம் உணவு, பேருந்துச் செலவுகளுக்கு நான்தான் பணம் கொடுத்துவந்தேன். நண்பர்களையும் உதவி செய்ய வைத்திருக்கிறேன். அதனால்தான், எப்படியாவது என்னையும் மணல் மகுடியையும் அழிக்கப்பார்க்கிறார்கள். கடந்த 40 வருடங்களாக என் படைப்புகள் மூலம் சரியான திசையில் பயணித்துக்கொண்டிருக்கிறேன். என் படைப்பு மொழி மேஜிக்கல் ரியலிசம் மாதிரி. தமிழில் நம் நாட்டார் மரபிலிருந்து கதை சொல்லும் மரபை நாவல்களில் பிரதிபலிக்கிறேன். தற்போதும், ஐந்தாவது நாவலை எழுதிக்கொண்டிருக்கிறேன். அது இன்னும் வாசிக்கப்படும்; பேசப்படும்.

எழுத்தில் மட்டுமே பிரதானமாக இயங்கிக்கொண்டிருக்கும் எனக்கு, இந்தக் குற்றச்சாட்டுகள் மிகுந்த கவலை அளிக்கின்றன. கடந்த இரண்டு நாள்களாக வேதனையில் இருக்கிறேன். இதற்காக, கார்த்திக் தம்பிமீது எந்த வருத்தமும் கோபமும் இல்லை. 'வளர்த்த கிடா மார்பில் பாயும்' என்பார்கள். அப்படித்தான், மார்பில் குத்தப்பட்டுள்ளேன்.  

கோணங்கி
கோணங்கி

இதிலிருந்து விடுபட கட்டாயம் நாள்கள் எடுக்கும். காலவெளியில் எல்லாம் சரியாகும் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்று தனது தரப்பு விளக்கத்தை அளிக்கும் கோணங்கி, த.மு.எ.க.ச அமைப்பின் கண்டனத்திற்கும் அறிக்கைக்கும் பதிலளிக்க மறுத்துவிட்டார்.