
பிரசவத்துக்காகத் தன் மனைவி தாய் வீட்டுக்குச் சென்றிருந்த நேரத்தில், செல்போன் மூலம் அகல்யாவுடன் நெருங்கிப் பழகியிருக்கிறார் நாகராஜ்.
திருமணம் செய்துகொள்ளச் சொல்லி வற்புறுத்திய இளம்பெண்ணை பஸ் டிரைவர் ஒருவர் கொலைசெய்து, ஆற்றில் வீசிச் சென்ற நெஞ்சைப் பதறவைக்கும் சம்பவம் தஞ்சாவூரில் நிகழ்ந்திருக்கிறது.
தஞ்சாவூர் அருகேயுள்ள ஞானம் நகரைச் சேர்ந்தவர் நாகராஜ். இவர் பட்டுக்கோட்டை - தஞ்சாவூர் வழித்தடத்தில் செல்லும் தனியார் பேருந்து ஒன்றில் டிரைவராகப் பணிபுரிந்துவந்தார். இந்த நிலையில், அந்தப் பேருந்தில் பயணம் செய்த, ஒரத்தநாடு அருகிலுள்ள மேலஉளூரைச் சேர்ந்த இளம்பெண் அகல்யாவுடன் இவருக்கு அறிமுகம் ஏற்பட்டது. கல்லூரிப் படிப்பை முடித்த அகல்யா, அரசுத் தேவுக்காகப் பயிற்சியெடுத்துவந்திருக்கிறார். இதற்காக தினசரி தஞ்சாவூர் நூலகத்துக்குப் பேருந்தில் சென்றபோது, நாகராஜுடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.

ஒருகட்டத்தில் இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்து, வெளியிடங்களுக்குச் சென்று தனிமையில் இருந்துள்ளனர். அதன் பிறகே, நாகராஜ் ஏற்கெனவே திருமணமானவர் என்ற உண்மை அகல்யாவுக்குத் தெரியவந்திருக்கிறது. அதில் ஏற்பட்ட பிரச்னையில், அகல்யாவைச் சமாதானப்படுத்துவது போலத் திட்டமிட்டு நடித்து, கொலைசெய்து ஆற்றில் வீசியிருக்கிறார் பஸ் டிரைவர் நாகராஜ்.
இது குறித்து போலீஸாரிடம் விசாரித்தோம். “மூன்று மாதங்களுக்கு முன்னர்தான் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. பிரசவத்துக்காகத் தன் மனைவி தாய் வீட்டுக்குச் சென்றிருந்த நேரத்தில், செல்போன் மூலம் அகல்யாவுடன் நெருங்கிப் பழகியிருக்கிறார் நாகராஜ். இருவரும் தனிமையில் இருந்தபோது, நாகராஜுக்கு ஏற்கெனவே திருமணமான விவகாரம் அகல்யாவுக்குத் தெரியவந்திருக்கிறது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அகல்யா, “என் வாழ்க்கையை நாசமாக்கிட்டியே” என்று சண்டைபோட்டிருக்கிறார். மேலும், தன்னையும் திருமணம் செய்துகொள்ளச் சொல்லி நாகராஜை வற்புறுத்தியிருக்கிறார்.

சம்பவத்தன்று, அகல்யாவுக்கு போன் செய்து தஞ்சாவூர் வரச் செய்த நாகராஜ், தனியார் லாட்ஜ் ஒன்றில் ரூம் போட்டு, அங்கு அகல்யாவுடன் நெருக்கமாக இருந்திருக்கிறார். பிறகு அறையைக் காலிசெய்துவிட்டு, புதுக்கோட்டை சாலையில் ஆள் நடமாட்டமில்லாத பகுதிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அப்போது இருவருக்கும் நடந்த வாக்குவாதத்தில், “நீ வீட்டுல பாக்குற மாப்பிள்ளையைக் கல்யாணம் செஞ்சுக்கோ” என நாகராஜ் அகல்யாவிடம் சொல்லியிருக்கிறார். அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த நாகராஜ் அகல்யாவின் துப்பட்டாவைக்கொண்டே அவரின் கழுத்தை நெரித்துக் கொலைசெய்திருக்கிறார். ஏறத்தாழ நான்கு மணி நேரமாக அகல்யாவின் உடலை என்ன செய்வது என்று தெரியாமல் காரிலேயே சுற்றிக்கொண்டிருந்த நாகராஜ், நள்ளிரவு நேரத்தில் உடலைக் கண்டிதம்பட்டு ஆற்றில் வீசிவிட்டுத் தலைமறைவாகிவிட்டார். அகல்யாவைக் காணாமல் அவரின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு உடல் மீட்கப்பட்டது. அகல்யாவின் செல்போனுடன் தலைமறைவான நாகராஜைக் கைதுசெய்து சிறையிலடைத்திருக்கிறோம்” என்றனர்.